போட்டியாளர்கள் எதிர்கொண்ட பூகம்பத் தருணங்கள்
‘உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு பூகம்ப தருணத்தை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்று அடுத்த ஆட்டத்தை உதறி எடுத்தார் பிக் பாஸ். இது ஒரு வகையில் ‘அழுகாச்சி’ டாஸ்க். முதலில் வந்த தினேஷ் தனது மணவாழ்க்கையில் ஏற்பட்ட பிரிவு பற்றி உருக்கமாகத் தெரிவித்தார். நீண்ட காலமாக அது சார்ந்த மன உளைச்சலிலும் பிரிவுத் துயரத்திலும் இருந்தவர் இப்போதுதான் தன்னை மெல்ல மீட்டு எடுத்துக் கொண்டு வருகிறாராம். ‘அவங்களுக்கும் கஷ்டமாத்தான் இருந்திருக்கும்” என்று இணையர் தரப்பையும் தினேஷ் யோசித்தது நல்லது.
அடுத்து வந்த விசித்ரா பகிர்ந்து கொண்டதுதான் இந்த எபிசோடின் உண்மையான பூகம்ப தருணம். ஒரு சினிமா படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல், வன்முறை தொடர்பாக நிகழ்ந்த கசப்பான அனுபவத்தை கலக்கமான முகத்துடன், ஆனால் உறுதியான குரலில் விசித்ரா பகிர்ந்து கொண்டது சிறப்பு.
“2001-ல் இருந்து நான் சினிமாத்துறையில் இருந்து காணாமல் போனேன். யாருக்கும் அதற்கான காரணம் தெரியாது. ஒரு டாப் ஹீரோவின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அது தொடர்பான பார்ட்டியில் என்னை சந்தித்த அந்த நடிகர் – என் பெயர் கூட அவருக்கு தெரியாது – நீங்க இந்த படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டு விட்டு பிறகு ‘என் ரூமிற்கு வாருங்கள்’ என்று வெளிப்படையாகவே அழைத்தார். அன்றிரவு நான் என் அறைக்குள் படுத்து தூங்கி விட்டேன். மறுநாளில் இருந்து எனக்கு பிரச்சனைகள் ஆரம்பித்தன. குடித்து விட்டு வந்து எனது அறைக் கதவை பலமாக தட்டுவார்கள். இன்னமும் கூட அந்த சத்தம் என் காதில் விழுந்து கொண்டே இருக்கிறது” என்று விசித்ரா சொன்ன போது அவர் ஆழ்மனதின் காயத்தை கேட்பவர்களால் உணர முடிந்தது.
தனது பேச்சை விசித்ரா தொடர்ந்தார். “ஹோட்டலின் நிர்வாகத்தில் உயர் பொறுப்பில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு நல்ல மனிதர், (விசித்ராவின் வருங்கால கணவர்) நான் கேட்டுக் கொண்டபடி அறையை தினமும் மாற்றிக் கொடுத்தார். பிறகு ஒரு சண்டைக் காட்சியை படமாக்கும் போது ஸ்டண்ட் நபர்களில் ஒருவர் என்னை தொடர்ச்சியாக தப்பாக தொட்டார். ஸ்டண்ட் மாஸ்டரிடம் இது பற்றி புகார் செய்த போது அவர் என்னை பலமாக கன்னத்தில் அறைந்தார். எனக்கு கண்ணீர் வந்தது. திகைத்துப் போனேன். என்ன செய்வதென்றே தெரியவில்லை. நண்பர்களிடம் போனில் கேட்டேன். ‘புகார் செய்யுங்கள்’ என்றார்கள் யூனியனில் கேட்ட போது “நீங்க நடிக்க வேண்டாம். திரும்பி வந்துடுங்க. ஒரு கடிதம் எழுதித் தாருங்கள்” என்று சொன்னார்கள்….
+ There are no comments
Add yours