பிக் பாஸில் கல்லூரி டாஸ்க். கல்லூரி என்றாலே அது குறும்புகளின் களம். இதை வைத்து எத்தனையோ சுவாரசியங்களை உருவாக்கியிருக்கலாம். மாறாக ஒருவரையொருவர் பிறாண்டிக் கொள்ளவே பயன்படுத்தினார்கள்.
நகைச்சுவையுணர்வு உள்ளவர்கள் கூடுதலாக பின்னிப் பெடல் எடுக்க வேண்டிய டாஸ்க் இது. ஆனால் சுரேஷ் ஒதுங்கி ஆஃப்லைனில் இருப்பது துரதிர்ஷ்டம். இதுவே சாண்டி, கவின், லோஸ்லியா போன்ற மூன்றாம் சீசன் போட்டியாளர்களாக இருந்தால் ரகளை செய்திருப்பார்கள். சிரிப்பிற்கும் சுவாரசியத்திற்கும் பஞ்சமிருந்திருக்காது. ஆனால் இவர்களோ ரகசிய ஆயுதங்களை சரக் சரக் என்று உருவி ரத்தக்கீறல்களுடன் சண்டையிட்டதுதான் மிச்சம்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
சாப்பிட்ட தட்டை கழுவி வைப்பதெல்லாம் ஒரு பிரச்சினையாக எழுந்தது. ‘ஏம்மா.. ஒத்த ரோசா. பிள்ளைய நல்லா வளர்த்திருக்கம்மா’ என்கிற காமெடி மாதிரி, இந்த அடிப்படையான விஷயத்தைக் கூடவா இவர்கள் அவரவர்களின் வீடுகளில் செய்திருக்க மாட்டார்கள்?! அல்லது இங்கு வந்ததும் ஏதாவது தனியான கொம்பு முளைத்து விடுகிறதா?!
“எங்களுக்கு ஏற்கெனவே சமைக்கற வேலை பளுவா இருக்கு. இதுக்கு ஏதாவது இன்சார்ஜ் போடுங்க” என்று சிலர் தட்டைக் கழுவாமல் இருந்த பிரச்சினை குறித்து பூர்ணிமா கேட்க, “இதுவும் சின்ன வீ்ட்டோட வேலைதான். நீங்கதான் பண்ணியாகணும்” என்று சவடாலாகப் பேசினார் விஷ்ணு. ‘பண்ண முடியாது” என்று பூர்ணிமா எதிர்ப்புக் குரலில் சொன்னதும், தொனியை மாற்றி “இதெல்லாம் மத்தவங்களுக்கா புரியணும். குழந்தைங்க டாஸ்க்ல இருந்ததால, கையைக் கழுவி வாயைத் துடைச்சு விடணும்னு எதிர்பார்க்கறாங்க போல. இந்த குழந்தைகளை எப்படி மேய்க்கறதுன்னு தெரியல” என்று அலுத்துக் கொண்டார் விஷ்ணு.
“இதெல்லாம் நீங்கதான் பண்ணனும்னு ரூல். விதிமீறல் பண்ணாதீங்க” என்று பூர்ணிமாவை எதிர்ப்பது போல் பாவனையாகப் பேசினார் மாயா. இருவரும் நட்பாக இருந்தாலும் ‘கேம்’ என்று வந்து விட்டால் அதன்படி சரியாக செயல்படுகிறார்கள் என்பதை உலகத்திற்கு காட்டிக் கொள்வதற்காக நிறைய மெனக்கிடுகிறார்கள். “நீங்க கரெக்ட்டா கோர்த்து விட்டு வேடிக்கை பார்ப்பீங்க” என்று மாயாவிடமும் பொங்கினார் விஷ்ணு.
அம்பலமான அர்ச்சனாவின் ‘டபுள் கேம்’
“விஷ்ணு என் மேலே வேணுமின்னே வேகமா துப்பினான்” என்று பிறகு மாயாவிடம் பிறகு புகார் செய்து கொண்டிருந்தார் பூர்ணிமா. “அப்படியாவது பொம்மை ஆஃப் ஆகுமான்னு பார்க்கத்தான் அப்படி செய்யச் சொன்னேன்” என்று விக்ரம் சொன்ன விளக்கம் அபத்தமானது. விக்ரம் அகன்ற பிறகு “அவன்தான் மூளையில்லாம சொல்றான்னா.. விஷ்ணுவிற்கு புத்தி எங்க போச்சு?” என்று சாெல்லி சிரித்தார் பூர்ணிமா. இந்த விவகாரம் நிச்சயம் பஞ்சாயத்திற்கு வரும் என்று தோன்றுகிறது. நாள் 66. பிக் பாஸ் விளையாட்டில் டாஸ்க்கின் மூலமாக அவமதிப்புகள் நிகழும் என்பது விசித்ராவிற்குத் தெரியுமா, இல்லையா? ஒவ்வொரு விஷயத்திலும் தன்னுடைய இமேஜ் மீது தூசு கூட பட்டு விடக்கூடாது என்பதில் விசித்ரா கவனமாக இருக்கிறார். பொம்மை டாஸ்க்கின் போது தன் மீது செய்யப்பட்ட அவமதிப்புகள் குறித்து ஒவ்வொருவரையாக அழைத்து விசாரிக்கத் துவங்கினார். ஆனால் இந்த விசாரணையில்தான் அர்ச்சனா செய்த கோக்குமாக்கான வேலை அம்பலமானது.
‘பொம்மை டாஸ்க்கல ஒவ்வொருத்தரோட பர்சனாலிட்டியும் வெளியே தெரிஞ்சது. தினேஷ் மனசுல இருந்த வெறியை எல்லாம் தீர்த்துக்கிட்டார்” என்று அவரிடம் நேரடியாக குற்றம் சாட்டினார் விசித்ரா. “மேடம்.. நான் பொம்மையை ஆன் பண்ணிதான் விட்டேன். அதுவாதான் மத்த வேலையைப் பார்த்துச்சு. ஆட்டோமேட்டிக் பொம்மை அது. இம்ப்போர்ட் குவாலிட்டி’ என்பது போல் தினேஷ் சொல்ல “அப்ப.. நீயாத்தான் எல்லாத்தையும் சொன்னியா. சொன்னது மட்டுமில்லாம அப்புறம் வந்து என் கிட்ட ஃபீல் வேற பண்ண..” என்று அதிர்ச்சியுடன் அர்ச்சனா மீது பாய்ந்த விசித்ரா, “உங்களை வேற தப்பா நெனச்சிட்டேன் தினேஷ் சார்” என்று மன்னிப்பு கேட்டார். “நீங்க என்னையும் அப்படித்தான் தப்பா நெனக்கறீங்க” என்று பொய் அழுகையுடன் சந்தில் சிந்து பாடினார் சுரேஷ்.
“ஒரு பொம்மையா நேரடியா, சுத்தி வளைக்காம அப்ப சொல்லிட்டேன். அப்புறம் நீங்க அழுதது எனக்கு கஷ்டமா போச்சு” என்று சமாளிக்க முயன்றார் அர்ச்சனா. “அப்ப மனசுல இருக்கறதைல்லாம் சொல்லிட்டே. அப்படித்தானே?” என்று விசித்ரா கிடுக்கிப்பிடி போட முயன்றாலும் அதில் இருந்து நழுவிக் கொண்டே இருந்தார் அர்ச்சனா. ஆக அர்ச்சனாவும் ‘விஷ பாட்டில்’ வகையறாவில் வருகிறார் என்பது இப்போது அம்பலமானது. அடுத்ததாக நிக்சன் பக்கம் நகர்ந்த விசித்ரா “யார் சொல்லி என்னை போடின்னு சொன்னே?” என்று விசாரிக்க ஆரம்பித்தார். (ஆடியன்ஸே மறந்தாலும் இவங்க ஞாபகப்படுத்துவாங்க போல!). “விசித்ரா சொல்ற மாதிரிதான் அதைச் சொன்னோம். அதுக்கு அப்புறம் ஸாரியும் சொன்னோமே” என்று நிக்சனும் பூர்ணிமாவும் திறமையாக சமாளிக்க அரைமனதாக அங்கிருந்து கிளம்பினார் விசித்ரா. (இன்னமும் யாரெல்லாம் இவரைத் திட்டியிருக்கீங்க?!)
அர்ச்சனாவிற்கு விசித்ராவிற்கும் உரசல் விடாமல் தொடர்ந்தது “காமிரா கான்ஷியஸோட இருக்கறவங்க கிட்ட எப்படி பிளே பண்ண முடியும்? இனிமேலாவது முழிச்சுக்கங்க” என்று பொதுவாக அனத்திய அர்ச்சனா “நீங்க ஃபீல் பண்ணதால்தான் ஸாரி சொன்னேன். போற வர்றப்பல்லாம் முறைச்சிட்டே இருக்கீங்க? என்று விசித்ராவிடம் நேரடியாக கேட்க “நான் போறேம்மா.. விடு. நீயே இங்க இருந்துக்க” என்று மாமியார்த்தனமாக புலம்பினார் விசித்ரா. “சிரிச்சுப் பேசறவங்க எல்லாம் நல்லவங்க கிடையாது மேம்” என்று அர்ச்சனா விளக்க முயன்றாலும் விசித்ரா அதைக் கேட்பதற்கு தயாராக இல்லை.
பிக் பாஸ் – கல்லூரி டாஸ்க்
‘கல்லூரி டாஸ்க்கை’ ஆரம்பித்தார் பிக் பாஸ். ‘மாஸ்டர் இன் பிக் பாஸ்’ – MBB என்பது இங்கு கற்றுத் தரப்படும் கல்வியாம். பிரின்ஸிபல் தினேஷ். நேற்றைய பொம்மை டாஸ்க்கைப் போலவே இதற்கும் ஒப்பனைக்காக மெனக்கிட்டிருந்தார் தினேஷ். தலைமுடியை தூக்கி வாரி, நரை தடவி, கண்ணாடி போட்டு ‘பல்ராம் நாயுடு’வை மெலிதாக நினைவுப்படுத்தும் உடல்மொழியுடன் தினேஷ் வலம் வந்தது சிறப்பானது.
இனி டீச்சர்களின் வரிசை: அர்ச்சனா ‘மாரல் சயின்ஸ்’ டீச்சர், மாயா ‘கணக்கு வாத்தியார்’, நிக்சன் பி.டி. மாஸ்டர் என்று வரிசை அமைந்தது. விஷ்ணு ‘கெமிஸ்ட்ரி மாஸ்டர்’ என்று சொன்னதும் சிரிப்பொலி அதிகரித்தது. இவர்களுக்கான குணாதிசயங்களை இவர்களே கிரியேட்டிவ்வாக உருவாக்கிக் கொள்ளலாம். ஸ்டெல்லா டீச்சராக ஆசிரியை ஒப்பனையில் கச்சிதமாக இருந்தார் அர்ச்சனா. பிராமண சமூகத்தின் ஒப்பனையில் அந்த உச்சரிப்புத் தொனியில் ரகளை செய்தார் மாயா. நிக்சன் மற்றும் விஷ்ணுவிடம் பெரிதான மாற்றமில்லை.
மற்ற அனைவரும் மாணவர்களாம். நெற்றியில் விபூதியிட்டு, காலர் பட்டன் போட்டு‘ஒழுங்கு பிள்ளை’ மாதிரியான ஒப்பனையில் இருந்தார் சுரேஷ். ரவீனா ‘ரவி’ என்று பெயர் மாற்றிக் கொண்டு மாணவனாக அலப்பறை செய்தார். மணி அராத்து பசங்க ஸ்டைலில் இருந்தார். நிக்சனின் தோரணையை மாயா கிண்டலடிக்க “நீங்க 80’ஸ்லயே ஸ்ட்ரக் ஆகியிருக்கீங்க. இப்பத்திய கல்ச்சருக்கு வாங்க” என்று நிக்சன் பதிலுக்கு கிண்டல் செய்ய ‘எது கலாச்ச்ச்சாரம்?” என்று மாயா அழுத்திக் கேட்க “நீங்க சுரிதார் போட்டிருக்கிறது கூடத்தான் கலாசாரம் இல்லை. என்னை மாதிரி புடவை கட்டிட்டு வாங்க” என்று அப்போதே ஏழரையைக் கூட்டினார் அர்ச்சனா. (ஆனால் அர்ச்சனா அணிருந்திருந்தது, ஸ்வீல்லெஸ் ஜாக்கெட்).
கணக்கு ஆசிரியர் மாயா போட்ட குத்தாட்டம்
முதல் வகுப்பு கணிதம். மாயா ஆசிரியர். “பிக் பாஸ் வீட்டில் எந்த மாதிரியான ஃபார்முலா வொர்க்அவுட் ஆகும்?” என்பது சிலபஸ். கணக்கு ஆசிரியர் படு ஜாலியான ஆசாமியாக இருந்தார். அவர் தலையில் அணிந்திருந்த மல்லிகைப்பூவை வைத்து ‘மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுது’ என்று மாணவர்கள் பாட்டுப் பாட அவரும் இணைந்து குத்தாட்டம் ஆடினார். வித்தியாசமான மாடுலேஷனில் மாயா பேச முயன்றதை “மேம்.. உங்க வாயிலே ஏதோ மாட்டிக்கிச்சு’ என்று கிண்டலடித்தார் ரவீனா என்கிற ரவி. “ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுதான், ரெண்டு ரெண்டும் அஞ்சுதான், இங்க எல்லாம் கிரிஞ்சுதான்’ என்று இன்ஸ்டன்ட் கவிதையை கணக்குப் பாடமாக மாற்றி மாயா குத்தாட்டம் போட மாணவர்கள் உற்சாகமாக பாடம் பயின்றார்கள்.
Problem solving என்கிற பாடத்தை அடுத்து ஆரம்பித்த மாயா, ப்பை, தியரம் போன்ற வார்த்தைகளை உதிர்த்து விட்டு ‘ஒருவரை நாமினேஷன் செய்ய என்னவெல்லாம் முன்ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்பதை விளக்கத் துவங்கினார்.
இதற்காக, கானா பாலாவை அவர் உதாரணமாக எடுத்துக் கொண்டது சேஃப் சாய்ஸ். “எல்லா கான்வர்சேஷனையும் கவனமா ஒட்டுக் கேக்கணும்” என்று அவர் ஆரம்பிக்க, குருவை மிஞ்சிய சீடர்களாக மீதிக்காரணங்களை மாணவர்களே எடுத்துக் கொடுத்தார்கள். “நல்லா வருவீங்க தம்பிங்களா!” என்று மாயா உற்சாகமானார். “சில பேர் நாமிஷேன்லயே மாட்ட மாட்றாங்களே. அது எப்படி?’ என்று சீரியஸாக சந்தேகம் கேட்டார் விசித்ரா. அவருடைய டார்கெட் சுரேஷ். ‘விக்ரம், மணி, சுரேஷ்’ போன்றவர்கள் தொடர்ந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என்பது சர்காஸ்டிக்காக அலசப்பட்டது. ‘விக்ரம் டைட்டில் வின்னர்’ என்று அனன்யா சீரியஸாகவே சொல்ல “ஸாரிப்பா” என்று நக்கலடித்தார் மாயா.
இறங்கி அடித்து ஆடிய அர்ச்சனா
அடுத்து வந்தவர் ‘மாரல் சயின்ஸ்’ ஆசிரியர் அர்ச்சனா. பிக் பாஸ் வீட்டில் எதையெல்லாம் செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யக்கூடாது. இங்கு சர்வைவ் ஆவது எப்படி? போன்ற விஷயங்கள் இவரது சிலபஸ். தெளிவான உச்சரிப்பில் இறங்கி அடித்து ஆடினார் அர்ச்சனா. ‘எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்’ என்கிற குறளில் ஆரம்பித்து, genuinity-ஐ முதல் விஷயமாக சொல்லி “எல்லா இடத்துலயும் ஒரே மாதிரி பேசணும். புறணி பேசக்கூடாது. யாரையும் எமோஷனலா சூழ்ச்சியா கையாளக்கூடாது” என்று வகுப்பெடுக்க “விசித்ராவை அர்ச்சனா பண்ண மாதிரியா மிஸ்?” என்று குறுக்கே கட்டையைப் போட்டார் விசித்ரா. “இல்ல. விசித்ராவை மாயா பண்ற மாதிரி” என்று பதிலுக்கு ஒழுங்கு காட்டினார் அர்ச்சனா.
“செய்யக்கூடாதைத்தான் நிறைய சொல்றீங்க?” என்று விசித்ரா, இன்னொரு கட்டையைப் போட “அடுத்தது நேர்மை. கேங் பார்ம் பண்ணக்கூடாது. கேங்ல இருந்தாலும் வெளிய வந்துடணும். எதையும் நாலு நிமிஷம் யோசிக்கணும். அப்புறம் பேசணும். வார இறுதில திட்டு வாங்கறதை மட்டுமே யோசிக்கக்கூடாது. அது எதனால நடந்ததுன்றதையும் யோசிக்கணும்” என்று அர்ச்சனா சொன்ன இந்தப் பகுதி முழுவதும் பூர்ணிமாவிற்கான டார்கெட் என்பது நன்றாகவே புரிந்தது.
“ஆக்ட்டிவிட்டி முடிஞ்சதும் அர்ச்சனா நாலு நிமிஷம் யோசிக்கறதில்லையே. அந்த மாதிரி பண்ணக்கூடாதுன்றீங்களா? என்று பதிலுக்கு ஒழுங்கு காட்டினார் பூர்ணிமா. “ரெண்டும் ரெண்டும் அஞ்சுன்னு தப்பா கணக்கு சொல்லித் தரவங்க கிட்ட இருந்து பூர்ணிமா போன்றவங்க வெளியே வந்தாதான் உருப்பட முடியும்” என்று மாயாவும் பதிலுக்கு இறங்கி அடித்தார். பிறகு பூர்ணிமா நிறைய கேள்விகள் கேட்டதால் பெஞ்ச் மீது நிற்கும் தண்டனையைக் கொடுத்தார். பிறகு பிரின்ஸிபல் வந்து இந்த தண்டனையை நீக்கச் சொல்லி அறிவுறுத்தினார். (கல்லூரியில் எல்லாம் எட்டாங்கிளாஸ் மாதிரி பென்ச் மீது நிற்கச்சொல்ல மாட்டார்கள். வெளியே துரத்தி விடுவார்கள்!).
“அடுத்தது ‘இன்டர்கனெக்டட்’. ஒருத்தர் கிட்ட இருக்கற emotional vacuum-ஐ பயன்படுத்திக்கிட்டு கைட் மாதிரியான பிம்பத்தை ஏற்படுத்தி கேங்கா பிளே பண்றது” என்று அர்ச்சனா எடுத்த இந்த வகுப்பு, மாயா மீதான நேரடித்தாக்குதல். ‘பாரேன். பொண்ணு எப்படியெல்லாம் பேசுது?!’ என்று சிரிப்புடன் புருவத்தை உயர்த்தினார் மாயா. “இந்த கேங்க்ல நிக்சன், விக்ரமிற்கு அடுத்ததா புதுசா சேர்ந்திருக்கிற உறுப்பினர் விசித்ரா” என்று ஒருவர் விடாமல் இறங்கி ஆடினார் அர்ச்சனா. “வாய்ஸ் அவுட் பண்றது முக்கியம். ஃபன்-ன்ற பேர்ல கலாட்டாதான் இங்க நடக்குது” என்று அவர் இன்னமும் நீட்டி முழக்கிக் கொண்டு செல்ல, நல்ல வேளையாக மணியடித்து வகுப்பு முடிந்தது.
அர்ச்சனாவிற்கு பதிலடி தந்த நிக்சன்
பி.டி.வாத்தியாராக அடுத்து வந்த நிக்சன் எடுத்த வகுப்பு, தீர்மானமான குரலில் அழுத்தமாக இருந்தது. அர்ச்சனாவின் வகுப்பை மாணவர்கள் கவனித்தார்களோ, இல்லையோ, ஒவ்வொரு பாயிண்ட்டையும் நிக்சன் கச்சிதமாக நோட் செய்து கொண்டார் போல. எனவே அனைத்தையும் எதிர்கொண்டு இறங்கி அடித்து கதகளியே ஆடினார். சில சிக்ஸர்கள் எல்லை மீறி பறந்தன. “எந்த டாஸ்க்லயும் நாலு விஷயத்தை பின்பற்றணும். வேகம், நிலை, விவேகம், நிதானம்” என்று அஜித் படத்தின் டைட்டில்களாக சொன்ன நிக்சன் அவற்றை விளக்க ஆரம்பித்தார். “டாஸ்க்ல அவசரப்படக்கூடாது. நான்தான் செய்வேன்னு முந்தி போகக்கூடாது. அர்ச்சனா மாதிரி சின்ன டாஸ்க்கிற்கு கூட டென்ஷன் ஆயிடக்கூடாது. இதனால மென்ட்டல் ஹெல்த் பாதிக்கும்” என்று தொடர்ந்த நிக்சன், அர்ச்சனாவின் மீது குண்டூசி மழைகளாக தொடர்ந்து பொழிந்தார்.
‘கேம் வேறு. பழக்க வழக்கம் வேறு. இங்க அப்படித்தான் இருக்க முடியும்” என்று திறமையாக லெக்சர் தந்த நிக்சன், அர்ச்சனா சொன்ன ‘நாலு நிமிஷ’ தத்துவ ஆயுதத்தை எடுத்து அர்ச்சனாவையே பலமாகத் தாக்கினார். (‘அவன் பொருளை எடுத்து அவனையே போடணும்’ மொமெண்ட்!) இதை மற்றவர்கள் ரசித்துக் கேட்க, ‘சிரிச்சா மாதிரியே’ முகத்தை வைத்துக் கொண்டிருந்தார் அர்ச்சனா. (இதன் விளைவு சில நிமிடங்களில் தெரிந்தது).
‘உள்ளே போய் நாமினேஷன்ல குத்து, வெளியே வந்து பழகிட்டு சுத்து’ என்று நிக்சனும் ஒரு தத்துவ வரியை உருவாக்க “பழகிட்டு எங்க சுத்தணும்.. ஊட்டியா, கொடைக்கானலா?” என்று ஒழுங்குபிள்ளையான சுரேஷ் எழுந்து மொக்கை காமெடி செய்ய இதற்கு வகுப்பு விழுந்து விழுந்து சிரித்தது. “இங்க வாழற சில நாட்கள் மட்டுமே நம்ம காரெக்ட்டர் கிடையாது. வெளில பெரிய வாழ்க்கை இருக்கு. சில பேர் ரத்தம் – தக்காளி சட்னி ஃபார்முலாவை பின்பற்றுவாங்க. முன்னாடி ரத்தம் வர்ற டாஸ்க்கை கூட செஞ்சுட்டு சந்தோஷமா வாழ்ந்தோம். இப்ப என்னடான்னா குழந்தை டாஸ்க் செய்யக்கூட பயப்படறோம். வைல்டு கார்டு என்ட்ரிகள் வந்த பிறகு இந்த வீட்டில் ஃபன் என்கிற விஷயமே காணாமப் போச்சு” என்றெல்லாம் திறமையாக பேசிக் கொண்டு போனார் நிக்சன். இதற்காக மாயாவும் பூர்ணிமாவும் அவரைத் தூக்கிக் கொண்டாடினார்கள். (பய பின்னிட்டான்!)
கோல்ட் ஸ்டார் வழங்க வேண்டிய நேரம். “தோற்றம்ன்ற வகையில் அர்ச்சனாவோடையது நல்லா இருந்தது. ஆனா’ என்று திறமையாக வாக்களித்து சேஃப் கேம் ஆடினார் விசித்ரா. தினேஷின் ஒப்பனைக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன. இறுதியில் சிறந்த மாணவராக ரவீனாவும் சிறந்த ஆசிரியராக நிக்சனும் தேர்ந்தெடுக்கப்பட்டு நட்சத்திர பரிசைப் பெற்றார்கள். ‘குட். ரசிக்கும்படியா பண்ணீங்க” என்று பிக் பாஸ் வாயினாலேயே பாராட்டும் கிடைத்தது. (ஆனா காமெடின்றதே இல்லையே பாஸ். வெறும் குத்தல்தான் இருந்தது!).
நிக்சன் – அர்ச்சனா – புயல் மழை போல் தொடர்ந்த விவாதம்
“சொல்ல விட்டுப் போச்சு. யாரையும் அட்டாக் பண்றது என் நோக்கமில்லை. பண்ணியிருந்தா ஸாரி’ என்று செய்வதையெல்லாம் செய்து விட்டு கடைசியில் அநாவசிய டிஸ்கிளைமர் போட்டார் நிக்சன். பிறகு ஆரம்பித்தது அந்த விவாத கச்சோி. “நிக்சன். ஒரு நிமிஷம்.. விசித்ரா பத்தி நான் என்ன தப்பா பேசினேன். தெரிஞ்சுக்கலாமா. எனக்கே இது தெரியாது” என்று ஒரு ரணகளமான உரையாடலை ஆரம்பித்தார் அர்ச்சனா.
வீட்டில் ஒன்றும், விசாரணை நாளில் ஒன்றுமாக அர்ச்சனா மாற்றி மாற்றி பேசியதை நிக்சன் எடுத்துரைக்க, ‘நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை’ என்று வாதாடிய அர்ச்சனா, இதற்காக விசித்ராவை சாட்சிக்கு அழைக்க, அவரோ பக்கத்து வீட்டு ஆன்ட்டி மாதிரி விரோத மௌனத்துடன் நின்றதால் அர்ச்சனா நொந்து போனார். விடாத புயல் மழை போல இருவருக்கும் காரசார விவாதம் நீண்ட நேரமாக தொடர்ந்ததால் ‘நிறுத்துங்கப்பா.. போதும்… அப்புறம் நான் எதையும் கேட்கலைன்னு சொல்லிடுவாங்க” என்று கூத்தில் கோமாளி மாதிரி புகுந்தார் சுரேஷ்.
அர்ச்சனாவிடம் மெல்ல மெல்ல வெப்பம் ஏறி அவர் டென்ஷன் ஆவது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆனால் நிக்சனோ புன்னகை மாறாமல் ஆனால் அழுத்தமான விடைகளாகத் தந்து கொண்டிருந்தார். அதுவும் ஒரு வகையான டென்ஷன்தான். ‘நீ மட்டும் ஒழுங்கா. போய்க் கண்ணாடியைப் பாரு’ என்று பரஸ்பர உபதேசம் செய்வதாக இந்த உரையாடல் பயணித்துக் கொண்டிருந்தது. அடுத்த எபிசோடிலும் தொடரும் போலிருக்கிறது.
ஆக வீட்டின் ஒட்டுமொத்த எதிர்ப்பும் அர்ச்சனா மீது மையம் கொண்டிருக்கிறது. இந்தப் புயலின் பாதிப்பில் இருந்து அர்ச்சனா தப்பிப்பாரா அல்லது மேலும் மேலும் கிளறிக் கிளறி பிக் பாஸிற்கு அதிக தீனியை அளிப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
+ There are no comments
Add yours