‘ஒரு பொம்மலாட்டம் நடக்குது, ரொம்ப புதுமையாக இருக்குது. நாலு பேரு நடுவிலே, நூலு ஒருத்தன் கையிலே’ என்றொரு திரையிசைப் பாடல் இருக்கிறது. இது பிக் பாஸ் வீட்டின் ‘வேக் அப்’ பாடல் இல்லை. இந்த ஆட்டத்தின் அடிப்படையான தத்துவமே இதுதான்.
இந்த எபிசோடில் நடந்த ‘பொம்மலாட்ட டாஸ்க்கில்’ குழந்தைகள், குழந்தைகளாக நடந்து கொள்ளாமல் உள்ளுக்குள் இருந்த குரோதங்களையும் வெளிக் கொணர்ந்ததால் சுவாரசியங்களைத் தாண்டி சில விபரீதங்களும் நிகழ்ந்தன.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
கடந்த வாரத்தில் நிக்சனிடம் முயன்றதைப்போல, இந்த வாரமும் கேப்டன் விஷ்ணுவை எதிலாவது மாட்டி விட வேண்டுமென்று முயன்று கொண்டிருந்தார் மாயா. ஆனால் களத்தில் தானே நேரடியாக இறங்காமல் மற்றவர்களிடம் அதற்கான விதைகளைத் தூவிக்கொண்டிருந்தது ஒரு நல்ல தந்திரம்.
“நாமினேஷன்ல இருக்கறவங்களுக்குத்தான் சைக்கிள் ஓட்ட முன்னுரிமை. அப்பதான் அவங்க வெளில தெரிவாங்க”ன்னு சொன்ன விஷ்ணு, நாமினேஷன்ல இல்லாத ரவீனாவிற்கு எப்படி வாய்ப்பு கொடுத்தாரு? இது பெரிய அநீதி. ஆனா நான் இதை கேட்க மாட்டேன். வார இறுதியில என்னை வெச்சு அடிப்பாங்க. நானும் எமோஷன் உள்ள மனுஷிதான். ஒரு வாரமாவது நிம்மதியா இருக்கணும். அதுக்குத்தான் அமைதியா இருக்கேன்” என்றெல்லாம் மாயா சொல்ல விக்ரமும் பூர்ணிமாவும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
“நீங்க சொன்னாதான் ஒரு பவரா இருக்கும்” என்று பந்தை திருப்பித் தள்ளினார் விக்ரம். “உங்களுக்காக நீங்களே நிக்கலைன்னா.. எப்படி.. கேம்ல தாக்குப் பிடிக்கணும்னு நெனக்கறீங்களா?” விக்ரம் வாங்கற அடியெல்லாம் பார்த்தா நான் ஒண்ணுமேயில்லை” என்று பூர்ணிமாவும் பந்தை எதிர்ப்பக்கம் தள்ளி விடப் பார்த்தார். ஆனால் மாயா இதற்கு மசியவில்லை. வேறு யாராவது இந்தப் பிரச்சினையை எழுப்ப வேண்டும் என்கிற நோக்கத்தில் விதையைப் போட்டிருக்கிறார்.
போட்டியாளர்களிடம் உள்ள ‘குழந்தைத்தனங்கள்’
நாள் 65. காலை. “நிக்சன் ரக்கட் பாயா இருந்தானாம். இனி லவ்வர் பாயா இருக்கப் போறானாம். தினம் ஒரு கேரக்ட்டராம்” என்று மணி சொல்ல “வந்ததுல இருந்து லவ்வர் பாய் வேலையைத்தானே பார்த்துக்கிட்டு இருந்தான்? அதனாலதானே அந்தப் புள்ள ஐஷூ வெளியே போச்சு?” என்று தினேஷ் சொல்ல, மணி இதற்கு வெடித்துச் சிரித்தார்.
மார்னிங் ஆக்டிவிட்டி. ஒருவரிடம் இருக்கும் ‘குழந்தைத்தனத்தைப்’ பற்றி மற்றவர்கள் சொல்ல வேண்டுமாம். (இப்போதே பொம்மலாட்ட டாஸ்க்கின் வாசனை அடிக்க ஆரம்பித்து விட்டது!). ‘செஞ்ச தப்பை, குழந்தை மாதிரி ஒத்துக்கவே மாட்டாங்க’ என்று விசித்ராவைத் தேர்வு செய்தார் ரவீனா.
அர்ச்சனாவைத் தேர்ந்தெடுத்த நிக்சன் “சின்ன பிரச்னைக்குக்கூட விடாம மல்லுக்கட்டுவாங்க” என்றார். ‘வளர்ந்த குழந்தை’ என்று பூர்ணிமாவை சர்காஸ்டிக்காக வர்ணித்தார் அர்ச்சனா. “மத்த விஷயங்கள்ல மெச்சூரிட்டி தெரியுது. ஆனா பல விஷயங்கள்ல குழந்தைத்தனம் இருக்குது. அது நிஜமா அல்லது நடிப்பா?” என்று ரவீனா குறித்து சொன்னார் விசித்ரா. கூடவே தினேஷ் மற்றும் அர்ச்சனாவையும் சேர்த்துக் கொண்டார். முரட்டுப் பிடிவாதமாக இருக்கிறார்களாம்.
“‘கிள்ளிட்டான் டீச்சர்’ன்ற மாதிரி நடந்துக்கறாங்க” என்று அர்ச்சனாவை பங்கம் செய்தார் அனன்யா. ‘அராத்து கிட்’ என்று நிக்சனைப் பற்றிச் சொன்னார் தினேஷ். ‘பச்சையா மாட்டிக்கிட்டியா’ன்னு எல்லாத்துக்கும் குழந்தை மாடுலேஷன்ல சொல்வார்’ என்று மணியைப் பற்றி விக்ரம் சொன்ன விதம் சுவாரசியம்.
இமேஜை சரிசெய்து கொள்கிறாரா விசித்ரா?
விசித்ரா டேமேஜ் ஆன தனது இமேஜை சரி செய்வாரா என்று சென்ற கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தேன். இப்போது அதைக் கச்சிதமாகச் செய்து கொண்டிருந்தார் விசித்ரா. அல்லது உண்மையிலேயே மனம் வருந்தி சொன்னாரா?
சின்ன வீட்டில் சபையைக் கூட்டிய விசித்ரா “நான் பேசணும். தனியா இருக்கற மாதிரி இருக்கு. அப்படி என்ன தப்பு பண்ணினேன்? ‘சுரேஷ் ஒரு காமெடியன். அதனால மக்களுக்கு அவர்மேல பிரியம் தன்னாலே உருவாகும்’ன்னு மாயா சொன்னாங்க. (பிரில்லியன்ட் அப்சர்வேஷன்!) ஒரு நார்மல் மேனா அவரை நம்ம அப்ரோச் பண்ணா வெளிய தப்பாத்தான் தெரியும். என் ஃபேமிலியும் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பாங்க. சுரேஷ் ரசிகர்களும் இதைப் பார்ப்பாங்க. எனக்கு எல்லோருடைய இதயங்களையும் ஜெயிக்கணும். ரோப் டாஸ்க்ல இதைத்தான் கத்துக்கிட்டேன். ஸாரி கூல்ணா” என்று சுரேஷிடம் மன்னிப்பு கேட்டார் விசித்ரா. கையெடுத்து கும்பிட்டதோடு சும்மா இருந்து விட்டார் சுரேஷ்.
அடுத்ததாக அர்ச்சனா பக்கமும் நகர்ந்தார் விசித்ரா. ஆனால் சுரேஷைப் போன்று அர்ச்சனா சும்மா இருக்கவில்லை. ஆட்சேபமான பகுதிகளை மறுத்துக் கொண்டிருந்தார். “நான் உனக்காக வாய்ஸ் அவுட் பண்ணலை. ஏன்னா… உங் கிட்ட நிறைய மாற்றம் தெரிஞ்சது. ஸாரி.. நான் உனக்காக வந்திருக்கணும். (நான் அதை எதிர்பார்க்கலை – அர்ச்சனா). நியாயமா இருந்தா வந்திருப்பேன். அதனால ஸாரி சொல்ல மாட்டேன். ஒருத்தர் மேல நம்பிக்கை இல்லைன்னா எல்லாமே தப்பாத்தான் தெரியும். என்னோட மன அமைதிக்காகவே மத்தவங்களை நான் மன்னிக்கிறேன்” என்று தன்னுடைய மனக்குறைகளைக் கொட்டித் தீர்த்தார் விசித்ரா.
தனது உரையை முடித்ததும் “ஓவராப் பண்ணிடலே இல்லை?” என்று மாயாவிடம் ஜாக்கிரதையாக விசாரித்தார் விசித்ரா. “நாமினேஷன்ல இருந்து தப்பிக்கறதுக்காக இப்படியெல்லாம் பண்றீங்கன்னு வெளில நினைக்கலாம்” என்று மாயா உடைத்துப் பேச “ஓ.. அப்படியா?” என்று அப்பாவித்தனமாகக் கேட்டார் விசித்ரா.
பேசும் பொம்மைகளும், அதிகமாகப் பேசிய குழந்தைகளும்
‘பொம்மலாட்டம்’ என்கிற டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். வீடு ‘கிட்ஸ் ஜோன்’ ஆக மாறுமாம். ‘அய்யய்யோ.. இவர்களை எப்படி குழந்தைகளாகக் கற்பனை செய்து பார்ப்பது?’ என்று நமக்கு அப்போதே பீதி கிளம்பியது. ஆனால் பரவாயில்லை. சில பகுதிகள் உண்மையிலேயே சுவாரசியமாக இருந்தன.
குழந்தைகள், பேசும் பொம்மைகள், பொறுப்பாளர்கள் என்று மூன்று அணிகளாக வீடு பிரியும். தனக்கு விருப்பமான பொம்மையைக் குழந்தை தேர்ந்தெடுக்க வேண்டும். பொம்மை கிடைக்காத குழந்தை, இதர பொம்மைகளுடன் விளையாடலாம். கேரக்ட்டரில் இருந்து பொம்மை வெளியே வந்தால் அவுட். குழந்தை வெற்றி. இதில் கோல்ட் ஸ்டார் கிடைக்கும்.
மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தைகளாக மாறியவர்கள்: தினேஷ், பூர்ணிமா, சுரேஷ், மாயா, ரவீனா மற்றும் விக்ரம். இதில் ரவீனாவையெல்லாம் கணக்கிலேயே சேர்க்க வேண்டியதில்லை. அவர் வழக்கமாகவே ரிமோட் பொம்மை மாதிரிதான் செயல்படுகிறது. ரிமோட்டை வைத்திருப்பவர் மணி. இந்த டாஸ்க்கிற்காக மீசை, தாடியை தியாகம் செய்த தினேஷ் பாராட்டுக்குரியவர். (கமல் நிச்சயம் இதைக் குறிப்பிடுவார்). மீண்டும் மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள். பொம்மைகளாக மாறியவர்கள்: அர்ச்சனா, நிக்சன், விஷ்ணு, விசித்ரா மற்றும் விஜய். பொறுப்பாளர்கள்: மணி மற்றும் அனன்யா. (இவர்கள் அதிகம் சிரமப்படத் தேவையில்லை. ஆனால் ஸ்கோர் செய்ய ஸ்பேஸ் கிடைக்காது).
“இவனைப் பாரேன். மீசை இல்லாம சைனாக்காரன் மாதிரியே இருக்கான்” என்று தினேஷ் குறித்து ரவீனா சொல்ல “ஆமாம். உன்னை மாதிரியே இருக்கான்” என்றார் சுரேஷ். “நாம பொம்மையா மாறப் போறோம். மனிதாபிமானமே இல்லாம நம்மள வெச்சு செய்யப் போறாங்க” என்று அர்ச்சனாவும் விஷ்ணுவும் ஆரம்பத்திலேயே பீதியுடன் முனகிக் கொண்டிருந்தார்கள். (இவங்க எப்ப ஃபிரெண்ட்ஸ் ஆனாங்க?!) “தினேஷ் பக்கத்தில உக்கார மாட்டேன்” என்று மாயா குழந்தை அழுது அடம் பிடித்தது.
ரோபோ பொம்மையாக அசத்திய விஜய்
முதல் பொம்மை வந்து இறங்கியது. இது ரோபோ பொம்மையாம். ‘இழுத்த இழுப்பிற்கெல்லாம் வரும்’ என்று அறிமுகப்படுத்தப்பட்டது. ரோபோ மாதிரி வந்து நின்ற விஜய்யைத் தேர்ந்தெடுத்தார் மாயா. பிறகு இந்தக் கூட்டணி அடித்த லூட்டிகள் எல்லாம் தரமான சம்பவங்களாக இருந்தன. ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் மாதிரி மாயா செய்த சாகசங்களுக்கு உறுதுணையாக இருந்தார் விஜய். அது மட்டுமல்லாமல் தலைகீழாக நின்று விஜய் புஷ்-அப் எடுத்த காட்சியெல்லாம் ரகளை.
அடுத்ததாக வந்தது ‘சீக்ரெட் ஷேரிங் பொம்மை’. இந்த ஒப்பனையில் புஷ்டியான பொம்மையாக வந்திறங்கியவர் விசித்ரா. இதை சுரேஷின் தலையில் வம்படியாக கட்டி விட்டதால் அவர் பொய் அழுகை அழுது கொண்டிருந்தார். அடுத்து வந்தது, ஸ்பீட் அனலிஸ்ட் பொம்மை. ‘யார் நாமினேட் ஆவார்கள், எலிமினேட் ஆவார்கள்’ என்றெல்லாம் சரியாகக் கணித்து சொல்லிவிடுமாம். இதற்காக சாதாரண ஒப்பனையில் வந்தவர் விஷ்ணு.
‘விஷ்ணு பொம்மை எதுக்காக வேணும். காரணம் சொல்லுங்க” என்று பொறுப்பாளர் மணி கேட்க “யாரும் எனக்கு கிளாப் தட்ட மாட்றாங்க. ஆனா இந்தப் பொம்மை எனக்குக் கிளாப் தட்டும்” என்று சந்தடி சாக்கில் டைமிங்காக அடித்த பூர்ணிமாவின் குறும்பு ரகளையாக இருந்தது. “எனக்கு வேணும்” என்று விஷ்ணு பொம்மையை விக்ரம் எடுத்துக்கொண்டதால் உதட்டைப் பிதுக்கிக் கோபமாக இருந்தார் பூர்ணிமா. “என்னைத் தூக்கிட்டுப் போ” என்று விக்ரம் ஆணையிட, சிறிது நேரம் தூக்கிச் சென்ற விஷ்ணு, பிறகு டபாலென்று கீழே போட்டு விட “என்ன. இந்தப் பொம்மை ரிவேன்ஜ் எல்லாம் எடுக்குது?” என்றார் விக்ரம்.
பொம்மையின் குணாதிசயக் குறிப்புகள், அவர்களின் நிஜ கேரக்ட்டர்களோடு பொருந்தி வருவது போல் அமைத்தது அருமை. அடுத்து வந்தது வாய்க்கோளாறு பொம்மை. திடீர் திடீரென்று மக்கர் பண்ணுமாம். குப்புறப்போட்டு முதுகில் அடித்தால் சரியாகி விடுமாம். இந்த நிக்சன் பொம்மையை ஆசையாக அள்ளிக் கொண்டார் ரவீனா. தனக்கு எந்தப் பொம்மையும் கிடைக்காததால் கோபித்துக் கொண்டிருந்த பூர்ணிமா, மாயா மீது பாய்ந்து தள்ளி விளையாடினார். (“ரோபோ.. புரொடக்ட் மீ”)
சூப்பர் மேனாக மாறிய மாயாவின் சாகசங்கள்
அடுத்து வந்தது ‘மேக்கப் மூஞ்சி பொம்மை’. தானும் மேக்கப் போட்டுக் கொள்வதோடு, அடுத்தவர்களுக்கும் போட்டு விடுமாம். இந்தப் பொம்மையை விருப்பப்பட்டு எடுத்துக் கொண்டார் தினேஷ். பூர்ணிமாவிற்கு மட்டும் எந்த பொம்மையும் கிடைக்காததால் ‘நீங்க மத்த பொம்மைகளோடு விளையாடலாம். சரியா. பாப்பா” என்று பொறுப்பாளர்கள் சமாதானப்படுத்தினார்கள்.
நிக்சனின் முதுகில் சவாரி செய்த ரவீனா “உன் பொம்மை வேஸ்ட்டு” என்று சுரேஷிடம் சொல்வதின் மூலம் விசித்ராவை வம்பிற்கு இழுத்தார். இந்த டாஸ்க் முழுவதும் முகத்தில் புன்னகை இருந்தாலும் உள்ளுக்குள் விசித்ரா கடுப்பாவது நன்றாகத் தெரிந்தது. எனவே ஒரு கட்டத்தில் கேரக்ட்டரில் இருந்து விலகி ஆட்டத்தைக் கைவிட்டார் விசித்ரா. “சுரேஷ் எதுவும் பண்ண மாட்றாரு” என்பது அவர் சொன்ன காரணம். கூடுதலாக மற்றவர்கள் செய்த லூட்டிகளும் அவருடைய மனதைப் புண்படுத்தியிருக்க வேண்டும்.
மாயாவை தலைகீழாக புரட்டிப் போட்டு சாகசம் செய்தார் விஜய். (நல்லா சர்க்கஸ் பண்ற மேன் நீ!). சுரேஷை நோக்கி “போடா.. போடா புண்ணாக்கு” பாடலைப் பாடி அவமதிப்பு செய்தது அர்ச்சனா பொம்மை. ஆனால் விசித்ராவை நோக்கி பாடச் சொன்ன போது உஷாராகி ‘சிரிச்சு சிரிச்சு வந்தான் சீனாதானாடோய்’ என்று மாற்றிக் கொண்டது. “இந்த வாரம் யாரு எலிமினேட் ஆவா?” என்று விஷ்ணு பொம்மையிடம் பூர்ணிமா கேட்க “விசித்ரா” என்று கம்ப்யூட்டர் ஜோசியம் சொன்னார் விஷ்ணு.
விக்ரம் செய்த அவமதிப்பான குறும்பு
எந்த உத்தரவு வழங்கப்பட்டாலும் சலனமில்லாமல் அமர்ந்திருந்தது விசித்ரா பொம்மை. இந்தச் சமயத்தில் விக்ரம் இட்ட உத்தரவு மட்ட ரகமானதாக இருந்தது. அவருக்கு அர்ச்சனாவின் மீது உள்ளூற கோபம் போலிருக்கிறது. “இந்தப் பொம்மை மூஞ்சுல காறித் துப்பு’ என்று விஷ்ணுவிற்கு விக்ரம் ஆணையிட, அவர் அதைச் செய்யவில்லை. மாறாக பூர்ணிமா மீது செய்யச் சொன்னதற்கு மட்டும் மென்மையான துப்பலுடன் உடன்பட்டார். ‘வாய்க்கோளாறு’ பொம்மையான நிக்சனை வைத்து ‘போடி. போடி.’ என்று விசித்ராவை சொல்ல வைத்தார்கள். பிறகு ‘ஸாரி’ என்பதையும் நிக்சன் இணைத்துக் கொண்டார். பிறகு நிக்சனும் கேரக்ட்டரில் இருந்து வெளியே வந்து ஆஃப் ஆனார்.
ஒரு வழியாக இந்த பொம்மலாட்ட டாஸ்க் முடிவிற்கு வந்தது. சிறந்த அணியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ‘குழந்தைகளா இருந்துட்டு தப்பான விஷயங்களை ப்ளே பண்ணாங்க’ என்று அர்ச்சனாவும் விஷ்ணுவும் புகார் சொன்னார்கள். ‘நான்தான் நல்லாப் பண்ணேன்.. அதை நானே எப்படி சொல்லிக்கறது?” என்று சிணுங்கினார் மாயா. அவருக்கு பூர்ணிமா ஆதரவு தந்தார். ஒப்பனையில் கவனம் செலுத்திய தினேஷின் பக்கம் நிறைய காற்று அடித்தது. இறுதியில் மாயாவிற்கு ஸ்டார் கிடைத்தது.
பொம்மையாக இருந்த போது தான் செய்த மிகையான கிண்டலுக்காக விசித்ராவை கட்டியணைத்து ‘ஸாரி’ சொன்னார் அர்ச்சனா. விசித்ரா கண்கலங்கிக் கொண்டிருந்தார். அடுத்ததாக சிறந்த பங்களிப்பு செய்த தனிநபருக்கான தேர்வு. இதில் விஜய்யின் பெயர் மெஜாரிட்டியாக வந்தது நியாயமான விஷயம். கேரக்ட்டரில் இருந்து அவர் வெளியே வராமல் ரோபோ மாதிரியே இருந்தார். எனவே அவருக்கு கோல்ட் ஸ்டார் கிடைத்தது.
‘வீட்டுக்குப் போகணும்’ – புலம்பிய விசித்ரா
“விஷ்ணு செம காண்டுல இருந்தான்” என்று மாயா சொல்ல “விக்ரமும் நானும் அவனை வெச்சு செஞ்சோம்” என்று பெருமிதப்பட்டுக் கொண்டார் பூர்ணிமா. “மூஞ்சி மேல துப்புன்னு விக்ரம் சொல்றான்” என்று புலம்பிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. “டாஸ்க்கை எப்படி சுவாரசியமா பண்றதுன்றது அவங்க அவங்க கைலதான் இருக்கு” என்று விசித்ரா சொல்ல “ஆமாம். ஃபன்னா பண்ணியிருக்கலாம்” என்று ஆமோதித்தார் அர்ச்சனா. “ஒருத்தரை அசிங்கப்படுத்தறதா டாஸ்க்?” என்று விஷ்ணு ஆவேசப்பட்டார். “மைண்ட்ல இருக்கறதுதானே வெளியே வரும். நான் வீட்டுக்குப் போகணும்” என்று கண்கலங்கத் துவங்கினார் விசித்ரா. “அழாதீங்க மேம். நான்தான் விசித்ராவை ரொம்ப ஹர்ட் பண்ணினேன்” என்று இரக்கத்துடன் வாக்குமூலம் தந்தார் அர்ச்சனா.
அர்ச்சனா அகன்றதும் வேறு மாதிரியாகப் புலம்பினார் விசித்ரா. “அர்ச்சனாவை வெச்சு தினேஷ் என்ன என்னமோ சொல்லச் சொல்றார். ஒரு டாஸ்கிற்காக இப்படியெல்லாம் சொல்லலாமா?” என்று அவர் அனத்த ஆரம்பிக்க “நான் பண்ண மாட்டேன்னு ஒருத்தர் முடிவு பண்ணலாமே?” என்று மாயா சொல்ல “அர்ச்சனா ரொம்ப ஹார்ஷா பேசினா. கஷ்டமா இருக்கு. அவ மேலே உண்மையாவே அன்பு காட்டினேன். ஒத்துவரலைன்னு ஆன பிறகுதான் விலகி வந்தேன். தினேஷ் அப்படித்தான் பண்ணுவாருன்னு தெரியும். சுரேஷூம் இதையெல்லாம் என்ஞாய் பண்ணிட்டு இருந்தாரு. எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்” என்று தன் மீது நிகழ்த்தப்பட்ட அவமதிப்புகள் குறித்து விசித்ரா கண்கலங்க “இதெல்லாம் டாஸ்க்குதான் சிரிச்சு சமாளிச்சுடுங்க” என்று ஆறுதல் சொன்னார் மாயா. “பார்ப்பேன். முடியலைன்னா வீட்டிற்கு கிளம்பிடுவேன்” என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் விசித்ரா.
ஆக. குழந்தைகள், குழந்தைகளாக நடந்து கொள்ளவில்லை. அவர்களுக்குள் இருந்த குரோதங்களும் வெளிப்பட்டன. வளர்ந்த பிறகும் ஒருவர் குழந்தையாக இருப்பதற்கு மிகப்பெரிய ஞானமும் பெருந்தன்மையும் வேண்டும். நம்மில் பலருக்கு அது இல்லாமல் போவதால்தான் ‘ஜூராசிக் பேபி’களாக பாவனை செய்கிறோம்!
+ There are no comments
Add yours