விசித்ராவின் இமேஜ் கடுமையாக டேமேஜ் ஆகியிருக்கிறது.
அதை அவர் சரி செய்வாரா? ‘பாரபட்சம் காட்டாதீர்கள். அது லஞ்சத்திற்கு சமமானது’ என்று வர்மக்கலையை பயன்படுத்தாமல், இந்தியன் தாத்தா போல கமல் கண்டிப்பு காட்டியிருக்கிறார். மக்கள் அதற்கு மதிப்பு தருவார்களா? விஷ்ணுவின் புதிய கேப்டன்சி எப்படியிருக்கும்?
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
“வாரம் பூரா சண்டை, வார இறுதியில் சமாதானம் மாதிரி இவங்க ஆட்டம் இருக்கு. புரிஞ்சுதான் ஆடறாங்களான்னு தெரியலை. வாங்க விசாரிப்போம்” என்கிற முன்னுரையுடன் வீட்டிற்குள் நுழைந்தார் கமல். “வாரம் பூரா அடிச்சுக்கலாம். சனிக்கிழமை சேர்ந்துக்கலாம்” என்று இதே தத்துவத்தை முன்பு கானா பாலா சுருக்கமான வாசகமாக சொல்லியிருந்தது நினைவில் இருக்கலாம்.
வைல்டு கார்டு என்ட்ரிகளாக வந்த விஜய் மற்றும் அனன்யாவின் கட்அவுட்கள் கொண்டு வரப்பட்டன. “இவங்க வரும் போது உங்க மேல விமர்சனங்கள் வெச்சாங்க இல்லையா.. இப்ப உங்க நேரம்” என்று பழிக்குப் பழி வாங்குவதற்கான சந்தர்ப்பத்தை தந்தார் கமல். ‘இவரு நல்லா ஆடறாரு’ என்கிற நபரின் மீது ‘Stay back’ என்கிற ஸ்டிக்கரையும் ‘வேஸ்ட்டு ஃபெல்லோ’ என்பவரின் மீது ‘Go back’ என்கிற ஸ்டிக்கரையும் ஒட்ட வேண்டும்.
இந்த வாக்கெடுப்பின் மூலம் ‘விஜய் நன்றாக ஹோம் ஒர்க் செய்து விட்டு’ வந்திருப்பதாகவும் ‘அனன்யா அதைச் செய்து விட்டு வந்தது போல தெரியவில்லை’ என்கிற அபிப்ராயங்கள் வெளிப்பட்டன. ‘நிதானமாக இருப்பது போல் தெரிந்தாலும் பாய்வதற்காக விஜய் காத்திருப்பதாக தெரிகிறது’ என்று ஒரு கருத்து வந்தது. ‘அனன்யாவின் அப்சர்வேஷனில் கூர்மை இருக்கிறது, விஜய் இருப்பதே தெரியவில்லை’ என்றும் கலவையான கருத்துக்கள் வந்தன. ‘விஜய்யோடு ஒப்பிடும் போது அனன்யா பலவீனமான ஆட்டக்காரர். எனவே அவர் இருப்பது எனக்கு நல்லது’ என்று பூர்ணிமா சொன்ன கருத்தை கமல் பிறகு பாராட்டினார்.
சுமாராக ஆடினாலும் பேச்சில் கெத்து காட்டிய விஜய்
இறுதியில் இருவருக்கும் சமமான வாக்குகள் வந்தன. இதற்கு விளக்கம் சொல்ல வேண்டிய நேரம். தன்னைப் பற்றிய எதிர்மறை கருத்துக்கள் வந்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் துணிச்சலாகப் பேசினார் விஜய். ஆயுதம் இல்லாமல் இருந்தாலும் இருப்பது போலவே சீன் காட்டுவதும் ஒரு நல்ல உத்திதான்.
லியோ படம் குறித்து லோகேஷ் கனகராஜ் சொன்னதைப்போல “நான் உள்ளே வந்த போது சொன்ன அத்தனையும் கூட பொய்யாக இருக்கலாம். இவங்களுக்கு என் ஸ்ட்ராட்டஜியை பிரேக் பண்ணி காட்ட முடியாது. சண்டை போட்டாதான் வெளியே தெரிய முடியும்ன்னு இவங்க நெனக்கறாங்க. மூணு டாஸ்க் ஜெயிச்சிருக்கேன். அர்ச்சனா, விஷ்ணு சண்டைல நான் மட்டும்தான் தலையிட்டேன். எல்லா உத்திகளையும் இவங்க முன்னாடி இப்பவே போட முடியாது. கவனமா இருக்க வேண்டியிருக்கு. நிச்சயம் அந்தந்த சமயத்துல என்னோட ஆயுதங்களை இறக்குவேன்” என்று விஜய் கெத்தாக பேசியதிலேயே பலருக்கு கிலி வந்திருக்கும்.
விஜய்யோடு ஒப்பிடும் போது அனன்யாவின் விளக்கம் பலவீனமானதாக, ஆனால் நேர்மையாக இருந்தது. “நான் சண்டை போடணும்னு போட மாட்டேன். ஒரு பிரச்னைல ரெண்டு பக்கமும் விசாரிப்பேன். எனக்கு இங்க யாரும் சப்போர்ட் பண்ண மாட்டாங்க” என்றார். புதிய வரவுகளுக்கு யாரும் முதலில் ஆதரவு தர மாட்டார்கள். அவர்களாகவே முட்டி மோதித்தான் நிற்க வேண்டியிருக்கிறது.
“ஓகே.. வைல்டு கார்டு என்ட்ரிகளுக்கு சில பலங்கள் இருப்பதைப்போல பலவீனங்களும் இருக்கு. எப்படியெல்லாம் உங்களை எடை போடறாங்கன்னு பாருங்க. ஆனா டைம் கம்மியா இருக்கு. நீங்க அதுக்கு முன்னாடி வேகமா ஓடினாத்தான் முடியும்” என்று வானிலை அறிக்கை வாசித்த கமல் பிரேக்கில் சென்றார்.
“இருக்கிற வன்மத்தையெல்லாம் விஜய் கக்கிட்டான்” என்று மாயா சொல்லி சிரிக்க, “அதனாலதான் அவன் வீட்டுக்குப் போகணும்” என்றார் ரவீனா. அனன்யா பற்றிய பேச்சு வரும் போது “அவ என்னை மாதிரியே இருக்கா” என்று விசித்ரா சொன்னதும், பக்கத்தில் இருந்த ஜோவிகா ‘களுக்’ என்று சிரித்து விட்டார். (‘என்னென்ன கதை சொல்றான் பாருங்க. கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றான்’ மோமன்ட்.) பிறகு அனன்யாவும் விசித்ராவும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அர்ச்சனாவிற்கு இருந்ததைப்போல, இப்போது அனன்யாவிற்கு ‘பாதுகாவலர்’ பொறுப்பை விசித்ரா எடுத்துக் கொண்டார் போல.
பாரபட்சம் என்பது லஞ்சத்திற்கு சமமானது – கமல் காட்டம்
அகம். கமல் என்ட்ரி. ‘அனன்யா.. இங்க உங்களைப் பத்தி என்ன நினைக்கறாங்களோ.. ஆனா மக்கள் நீங்கள் இருக்கணும்னு நெனக்கறாங்க” என்று சொல்லி அவர் காப்பாற்றப்பட்ட தகவலைச் சொன்னார். அடுத்ததாக ஃபேவரிட்டஸம் என்கிற தலைப்பை கையில் எடுத்தார் கமல். “இந்த வீட்டில் பேசப்படும் பல வார்த்தைகளில் ஒன்று இது. யார், யார் மீது இதைச் செய்வதால் ஆட்டம் பாதிக்கப்படுகிறது. சொல்லுங்கள்” என்று வரிசையாக விசாரிக்கத் துவங்கினார்.
இதில் பலருடைய கைகளும் ‘மாயா + பூர்ணிமா’ கூட்டணியை நோக்கி வரிசையாக நீண்டன. “மாயாதான் ஹெட். மத்தவங்க அவங்க ஃபாலோயர்ஸ்” என்று அர்ச்சனா கிண்டலடிக்க, மாயாவிற்கு மகிழ்ச்சி பெருகியோடியது. “எனக்கு இது ஜாலியாத்தான் இருக்கு. அத்தனை அன்பு காட்டறாங்க. நிக்சன் விஷயத்துல பூர்ணிமா பாரபட்சம் காட்டினாங்க. ஆனா நான் ஒத்துக்கறேன் சார். பூர்ணிமாவை நான் புரொடக்ட் பண்றேன். அதனாலேயே அவங்க வெளில கிளம்பணும்னு நெனக்கறேன். அப்பத்தான் நான் தெளிவா ஆட முடியும்” என்று நேர்மையாக வாக்குமூலம் அளித்தார்.
நிக்சனை பூர்ணிமா காப்பாற்றிய விஷயத்தை சிலர் குறிப்பிட, கேப்டன் வாக்கெடுப்பில் மணிக்கு ஆதரவாக தினேஷ் செயல்பட்டதையும் சிலர் குறிப்பிட்டார்கள். சுரேஷ் விஷயத்தில் அர்ச்சனா ‘டபுள் கேம்’ ஆடியது தொடர்பாக பூர்ணிமா குற்றம் சாட்டினார். ஆனால் விஜய் ஆரம்பித்த விஷயம்தான் நீண்ட பஞ்சாயத்தாக மாறியது. ‘விஷ்ணுவிற்கு ஸ்டார் தரப்பட்ட விஷயம் குறித்து அர்ச்சனா முந்தைய எபிசோடில் புகார் தெரிவித்த போது ‘அதை தனியா வெச்சுக்கலாம்’ என்று கமல் சொல்லியிருந்தார். அந்த பஞ்சாயத்து இப்போது தன்னிச்சையாக நடந்தது.
விஷ்ணுவிற்கு அளிக்கப்பட்ட ஸ்டார் பஞ்சாயத்து
‘உங்க வோட்டை விஷ்ணுவிற்குப் போடுங்கன்னு பூர்ணிமா மூன்று முறை என் கிட்ட சொன்னாங்க. ஆனால் நான் வாக்கு அளிக்கவில்லை’ என்று குற்றம் சாட்டினார் விஜய். ‘நான் எனக்கே போட்டுக்கிட்டேன்’ என்றார் விஷ்ணு. “நாங்க உயிரைக் கொடுத்து கெஸ்ட்டை என்டர்டெயின் பண்ணினோம். ஆனா இவங்க டாஸ்க் பண்ணதுக்கு எடுத்துக்கிட்டாங்க. அதிலும் மணிக்கு மூணு ஸ்டார் இருக்கறதால ஈக்குவலைஸ் பண்ண விஷ்ணுவிற்கு கொடுத்துட்டாங்க” என்று பொங்கித் தள்ளி விட்டார் அர்ச்சனா. “இதே விஷயம் மணிக்கு நடந்த போது அர்ச்சனா எதுவுமே சொல்லலை” என்று பூர்ணிமா குற்றம் சாட்ட “பார்த்தீங்களா. நான் போன வாரம் சொன்னதைத்தான் இப்ப செய்யறீங்க. உங்க மேல ஒரு தப்பு சொன்னா, அவரும்தானே செஞ்சாருன்னு மத்தவங்க மேல கைய காண்பிக்கறீங்க. உங்க தப்பை உணர மாட்றீங்க” என்று கமல் சொல்ல பூர்ணிமாவின் முகத்தில் திகைப்பு வந்தது.
எல்லாம் இந்த சிறப்பு விருந்தினர் ஹரிஷால் வந்தது. அவர் ஒரு நபரைத் தேர்ந்தெடுத்துத் தந்திருந்தால் பிரச்னை வந்திருக்காது. வீட்டுக்கு என்று சொல்லி பொத்தாம் பொதுவாக தந்து விட்டுச் சென்றதால், திருவிளையாடல் படத்தின் ‘ஞானப்பழ’ பங்கீடு போல பெரிய பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. “டாஸ்க் என்டர்டெயின்மென்ட் ஆகுமா. விஷ்ணு டாஸ்க்கை பிரமாதமா பண்ணார்ன்னு யாருமே சொல்லலையே.. ஸ்டாரை எதுக்கு ஈக்குவலைஸ் பண்ணணும்..? என்றெல்லாம் கமல் கேள்வி கேட்க “நாங்க இதை ஸ்ட்ராட்டஜியாத்தான் பண்ணோம். ஆனா யாரையும் நான் இன்ஃபூளையன்ஸ் பண்ணலை சார்” என்று மல்லுக்கட்டிக் கொண்டிருந்த பூர்ணிமா, ஒரு கட்டத்தில் ‘ஸாரி சார்’ என்று சொல்லி அமர்ந்து விட்டார்.
அடுத்ததாக எழுந்த ஜோவிகா “கேப்டன் வாக்கெடுப்பின் போது சுரேஷின் வாயை தினேஷ் பொத்தி விட்டார். இதன் மூலம் மணிக்கு ஆதாயம்” என்று குற்றம் சாட்ட, இதற்கு சாட்சியம் சொல்ல எழுந்த சுரேஷ், “இதுக்குத்தான் சார்.. நான் எல்லாத்துல இருந்தும் ஒதுங்கியிருக்கேன்” என்று வழக்கம் போல் பரிதாபமான முகத்தைக் காட்டினார். மக்கள் இன்றும் கைத்தட்டி ரசிப்பார்கள் என்று நினைத்து விட்டார் போல. ஆனால் கமல் இதை ரசிக்கவில்லை. “எல்லாத்தையும் காமெடி பண்ணாதீங்க. மத்தவங்க உயிரைக் கொடுத்து ஆடறாங்க. இதனால ஆட்டம் பாதிக்கும்” என்று கண்டிப்பு காடடிய கமல்“அவங்களுக்கு கொடுத்தாச்சு.. இவங்களுக்கு ஒரு முறை கொடுத்துப் பார்ப்போம்ன்னு நெனக்கறதுக்கு இது என்ன எலெக்ஷனா?” என்று ஸ்டார் விவகாரத்தை அரசியல் நையாண்டியுடன் இணைத்து காட்டமாக விமர்சனம் செய்தார்.
‘திறமை இல்லாதவர்களை மேலே தூக்கி நிறுத்தாதீங்க’
“இங்க யாரு தப்பு செஞ்சாலும் ‘அது என் ஸ்ட்ராட்டஜி’ன்னு சொல்லிடறாங்க சார்” என்று நிக்சன் சொன்னது உண்மை. “ஒரு தலைவரா நீங்க ஏன் இதை கண்டிக்கலை?” என்று கமல் கிடுக்கிப்பிடி போட “இத்தனை பேர் கிட்ட எப்படி சார் மல்லுக்கட்டறது. மெஜாரிட்டியா இருந்தாங்க” என்று நிக்சன் தயக்கத்துடன் சொல்ல. “தன் பக்கம் நியாயம் இருந்தா, பெரும்பான்மையா இருந்தாலும் அவங்களோட போராடணும். அதுதான் தலைமைத்துவம்”என்று உபதேசித்த கமல் அதற்காக ‘அம்பேத்கரை’ உதாரணம் காட்டியது சிறப்பு.
“இதனாலதான் சார்… ஸ்டார் மேல இருக்கற ஆசையே விட்டுப் போச்சு” என்று புலம்பினார் அர்ச்சனா. அடுத்து எழுந்த விக்ரமும் “முன்ன ஒரு ஸ்டார் வாங்கினேன். அஞ்சு ஸ்டாரையும் வாங்கிடணும்னு வெறியோட இருந்தேன். ஆனா இதுவரைக்கும் கிடைக்கல” என்று ஸ்டார் அரசியல் குறித்து புலம்பினார். “இப்படி நீங்க செய்யறது திறமைக்கான அங்கீகாரம் இல்ல. விநியோகம். இங்க எல்லோருமே ஃபேவரிட்டஸம் காட்டியிருக்கீங்க. பாரபட்சம் காட்டுவதென்பது திறமை இல்லாதவர்களை தூக்கி மேலே நிறுத்துவது. அதுவும் லஞ்சம் மாதிரிதான். வாங்கறதும் தப்பு. கொடுக்கறதும் தப்பு” என்று இந்தியன் தாத்தாவாக மாறி கமல் கர்ஜித்து விட்டு திரும்பிப் பார்க்க, ஆடியன்ஸ் அதைப் புரிந்துகொண்டு பலமாக கைத்தட்டினார்கள்.
கமலின் தலை மறைந்ததும் அர்ச்சனாவுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பூர்ணிமா. “நான் இன்ஃபூளையன்ஸ் பண்ணலைங்க. விஷ்ணுவிற்கு ஓட்டு போடுன்னு வெளில சொன்னதே விஜய்தான். உள்ளே வந்து அப்படியே மாத்திட்டாரு. நான் அவரோட காலை கூட இடிச்சுக் காண்பிச்சேன். விஜய் நல்லா பொய் சொல்றாரு” என்று பூர்ணிமா என்னதான் விளக்கம் தந்தாலும் நின்று பொறுமையாக கேட்பதற்கு அர்ச்சனாவிற்கு மனமில்லை. இது பற்றி பிறகு விஜய்யிடமும் ஆட்சேபித்தார் பூர்ணிமா. “அப்படியா. சந்தோஷமா இருங்க” என்று இடது கையால் இதைக் கையாண்டார் விஜய்.
ஜோவிகா வெளியேற்றம் – உள்ளுணர்வு உண்மையானது
பிரேக் முடிந்து திரும்பிய கமல் எவிக்ஷன் கார்டை விசிறியபடியே அரங்கிற்குள் நுழைந்தார். ‘நாமினேட் ஆனவங்கள்லாம் ஒண்ணா உக்காருங்க’ என்கிற வழக்கமான வசனம் சொல்லப்பட்டது. ‘யாரு போவா?’ என்பதற்குப் பதிலாக “எனக்கு ஒண்ணு சொல்லுங்களேன். நாமினேஷன்ல இருந்து தொடர்ந்து தப்பிச்சிட்டே இருக்கறதுக்கு என்ன வழி?” என்று கமல் குறும்பாக கேட்டது, ஜோவிகாவை டார்கெட் செய்து என்பது நன்றாகவே புரிந்தது. இது ஜோவிகாவிற்கும் புரிந்திருக்க வேண்டும். ‘நான்தான் கழுவுற மீன்ல நழுவுற மீனா இருந்தேன். எப்படி இத்தனை வாரம் இருந்தேன்னு தெரியல” என்று சுயவாக்குமூலமாக அவர் தந்தது சிறப்பான விஷயம்.
“நாமினேஷன் பத்தி டிஸ்கஸ் பண்ணக்கூடாதுன்னு இருந்தாலும் இவங்க சைகை மொழில எப்படியோ பேசிக்கறாங்க” என்று குற்றம் சாட்டிய விசித்ராவால் அதை தெளிவாக நிரூபணம் செய்ய முடியவில்லை. குழப்பமான சாட்சியத்தை அளித்தார். “எப்படி சொல்லி வெச்ச மாதிரி நாலு பேரை தூக்கறாங்கன்னு தெரியல. அதனாலேயே என்னோடது செல்லாத ஓட்டா மாறிடுது” என்று விசித்ரா புலம்ப “செல்லாத வாக்குன்னு ஒண்ணு கிடையவே கிடையாது. யாருக்கு நெனக்கறீங்களோ, அவங்களுக்குப் போடுங்க” என்று கமல் சொன்ன உபதேசம் திருவாசகம்.
இதை நம்முடைய தேர்தல்களிலும் பார்க்கலாம். சுயேட்சையாக அல்லது சிறிய கட்சியில் நிற்கும் ஒரு வேட்பாளர் தேவலை என்று தோன்றினாலும் கூட ‘மெஜாரிட்டில வர மாட்டாங்க’ என்கிற காரணத்தினாலேயே நேர்மையானவர்களை புறக்கணிக்கும் விஷயத்தை பொதுஜனம் தொடர்ந்து செய்து வருகிறது. இந்த மனோபாவம் முன்னணிக் கட்சிகளுக்கு ஒரு ஆதாயமாக மாறி விடுகிறது.
தினேஷ், விசித்ரா ஆகிய இருவரும் காப்பாற்றப்பட்ட செய்தியைச் சொன்ன கமல் ‘யாரு போவா?’ என்று கேட்க சிலர் மிகச் சரியாக ஜோவிகாவின் பெயரைச் சொன்னார்கள். “நான்தான் சார். நம்பிக்கையா தோணுது. என் உள்ளுணர்வு பலமா சொல்லுது” என்றார் ஜோவிகா. ‘கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாம்’ என்றிருந்த கமலுக்கு இது ஏமாற்றமாக இருந்திருக்க வேண்டும். எனவே கார்டை காட்டாமல் சற்று நேரம் விளையாடி விட்டு ‘ஜோவிகா’ என்று பெயர் போட்ட கார்டை காட்டினார். கண்கலங்கி அனைவரையும் கட்டியணைத்து விடைபெறத் தயாரானார் ஜோவிகா. (நானு. நானு.. – பூர்ணிமா!). நாணயங்களை நிக்சன், விக்ரம், பூர்ணிமா ஆகிய மூவருக்கும் பரிசாக அளித்தார். ‘என்னதிது… அவுட் ஆஃப் சிலபஸா இருக்கே?” என்று ஆச்சரியப்பட்டார் பூர்ணிமா.
“எனக்கு ஏதாவது அழுத்தமா தோணிச்சின்னா.. அது கண்டிப்பா நடந்துடும். வெளில கமல் சார் கூட நின்னு பேசி வீடியோ பார்க்கற மாதிரி கனவு வந்தது” என்றார் ஜோவிகா. (வனிதா தாக்கப்பட்ட விஷயத்தை உள்ளுணர்வின் மூலம் அறிந்திருப்பாரோ?!) ‘ஐ லவ் யூ டு’ ” என்று பிக் பாஸூம் ஜோவிகாவை வாழ்த்தி விடை தந்தார். “எனக்கு 13 வயசா இருக்கும் போது வீட்டுக்குள்ள வந்தேன். வெல்கம் சொன்னாரு. இப்ப வெளியே போறேன்” என்று பழைய நினைவுகளை பகிர்ந்த ஜோவிகா “இங்க எல்லோருமே நல்ல இதயம் படைத்த மனிதர்கள். நல்லா ஆடுங்க” என்று உபதேசம் செய்தார். (வீட்டை விட்டு வெளியே போகும் போது எல்லோருக்குமே ஞானோதயம் வந்து விடுகிறது!).
புத்தகப் பரிந்துரை – இசை கவிதைகள்
பிரேக் முடிந்து திரும்பிய கமல் ‘புத்தகப் பரிந்துரை’ ஏரியாவிற்கு வந்தார். இந்த வாரம் அவர் பரிந்துரைத்த நூல் ஒரு கவிதைத் தொகுதி. இசை என்கிற புனைபெயரைக் கொண்டவர் எழுதிய கவிதைகள். ‘இறுக்கம். சொற்சிக்கனம்.. போன்றவைகளைத்தான் கவிதையோட இலக்கணமா சொல்லுவாங்க. ஆனால் இவர் எழுதும் கவிதைகள் நண்பனுடன் பேசுவதைப் போல யதார்த்தமான மொழியில் அமைந்திருக்கும். தனிமை, அரசியல், நையாண்டி, அந்நியப்படுதல் உள்ளிட்ட கருப்பொருட்களில் இவரது கவிதைகள் அமைந்திருக்கும்” என்றார் கமல்.
மேடைக்கு வந்த ஜோவிகாவிடம் அவரது அனுபவத்தைப் பற்றி கமல் விசாரிக்க “நிறைய சரி, தவறுகளை கத்துக்கிட்டேன். எங்க அம்மாவைப் பார்த்து வளர்ந்த முகத்தையும் காட்டினேன். அம்மா, குழந்தை ரெண்டு முகத்தையும் காட்டினேன்” என்று பகிர்ந்த ஜோவிகாவிடம் அவரது பயண வீடியோவைக் காட்டினார் கமல். ஜோவிகா சறுக்கி விழுவது, தூங்குவது போன்ற காட்சிகளை மீம்ஸ்காரர்கள் இணையத்தில் ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்தார்கள். அதைப் பிரதிபலிப்பது போல் இந்த வீடியோ அமைந்திருந்தாலும் கூடுதலாக பல்வேறு உணர்வுகள் வெளிப்படும் காட்சிகளும் இருந்தன. ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்தார் ஜோவிகா. சண்டை போட்ட காட்சிகளில் அவரது முகம் இறுகியது. ‘இதைச் செய்திருக்க வேண்டாமே’ என்பது மாதிரி தோன்றியது.
பிறகு அகம் டிவி வழியாக போட்டியாளர்களுக்கு விடை தந்து விட்டு ஜோவிகா கிளம்ப, அவரை வாழ்த்தி விடை தந்த கமலும் விடைபெற்றுக் கொண்டார். “ஜோவிகா இல்லாத வீட்டை நெனச்சே பார்க்க முடியலை” என்று பூர்ணிமா சொல்ல “அவளுக்கு வெளில பெரிய வாய்ப்பு இருக்கு” என்றார் மாயா. “எலிமினேஷன் ஆட்டத்தை வெச்சு ஆடாதீங்க. உங்க ஆட்டத்தை ரொம்ப வெளில காட்டாதீங்கன்னு சொன்னா” என்று கூடுதலாக நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் மாயா. “இந்த விஜய் கூட இருந்தே குழி பறிச்சிட்டாரு” என்று மீண்டும் புலம்பினார் பூர்ணிமா.
டேமேஜ் ஆன இமேஜ் – புலம்பிய விசித்ரா
இந்த இரண்டு நாட்களில் விசித்ரா மீதான டேமேஜ் அதிகம். அர்ச்சனாவின் பாதுகாவலராக இருந்தவரை பார்வையாளர்களிடம் விசித்ராவிற்கு நல்ல பெயர் கிடைத்தது. அது போனவுடன் விசித்ராவின் முகமூடிகள் மறுபடியும் கிழியத் துவங்கியிருக்கின்றன. இது எல்லோருக்குமே நிகழும். இதுபற்றி பூர்ணிமாவிடமும் விஜய்யிடமும் “என்னப்பா.. இப்படிப் பண்றாங்க. பண்ணீட்டிங்க” என்று புலம்பினார் விசித்ரா. இதுவும் ஆட்டத்தின் ஒரு பகுதிதான் என்கிற தெளிவு இருந்தால், தன் மீது புகார் சொன்னவரிடமே சிரித்து இயல்பாகப் பழக முடியும். இங்கு எதுவுமே பர்சனல் கிடையாது. ஆட்டத்தின் விதிகள்தான் அவர்களை இயக்குகிறது.
“இங்க எல்லோருக்குமே நிறைய முரண்பாடுகள் இருந்திருக்கும். இனியும் இருக்கும். ஆனா காலைல எழுந்ததுமே ஒருத்தருக்கு குட்மார்னிங் சொல்லிக்கணும்” என்று பாசிட்டிவ்வான குறிப்புடன் தனது கேப்டன்சியை ஆரம்பித்திருக்கிறார் விஷ்ணு. இது தொடருமா என்று பார்க்க வேண்டும்.
“ஏசி ரூமு.. சோறு போட்டு சம்பளமும் கொடுக்கறாங்க. ராஜா மாதிரி இருக்கறோம்” என்று பிக் பாஸ் வீட்டை சிலாகித்தார் நிக்சன். உண்மை. நிக்சனின் குரல் அடித்தட்டு மக்களின் குரல். சென்னையில் இப்போது அடிக்கும் புயல் மழையைப் பார்த்தால், நான்கு சுவற்றுக்குள் பாதுகாப்பாக இருப்பவர்கள் அனைவருமே பாக்கியசாலிகள். அது கூட இல்லாமல் இருப்பவர்கள் கதியை நினைத்துப் பார்த்தால் பிக் பாஸ் வீடு சொர்க்கமாகத் தெரியும். விசித்ராவும் தினேஷூம் மறுபடியும் பிறாண்டிக் கொள்ளும் காட்சியோடு இந்த எபிசோடு நிறைந்தது.
விஷ்ணுவின் கேப்டன்சி, மாறவிருக்கும் கூட்டணிகள், சின்ன வீட்டிற்கு செல்லப் போவது யார்? ஆகியவற்றைப் பொறுத்து தான் அடுத்த வாரத்தின் சுவாரசியங்கள் அமையும். பொறுத்திருந்து பார்க்கலாம்.
+ There are no comments
Add yours