பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
“முன்னேறி போங்கன்னு ஒருத்தர்கிட்ட சொல்றதுதான் இயற்கையானது. மத்தவங்களை முன்னேற விடாம ‘கோலி’ மாதிரி தடுத்தா, நீங்க நகரவேயில்லைன்னு அர்த்தம்” என்கிற முன்னுரையுடன் அரங்கிற்கு வந்தார் கமல். இந்த சீசன் கொஞ்சம் கூட முன்னேறவில்லை என்பதின் குறியீடோ, என்னமோ.
‘அசிங்கமா கேட்பேன்’ன்னு விசித்ரா சொல்றாங்க’, என்று ஒரு சுரேஷ் ஒரு பக்கம் புலம்ப, ‘விசித்ரா கம்ப்ளீட்டா மாறிட்டாங்க’ என்று இன்னொரு பக்கம் அர்ச்சனா அனத்திக் கொண்டிருந்தார். கயிறு விடுதலை தொடர்பாக ‘குத்தினா கத்துவேன், கத்தினா குத்துவேன்’ என்கிற விளையாட்டு தினேஷிற்கும் மாயாவிற்கும் இடையே மறுபடியும் நடந்து கொண்டிருந்தது.
மறுநாள் காலையில் காபிக்காக ஒரு பெரிய கலகத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தார் அர்ச்சனா. இதற்காக காபிக் கொட்டைபோல விக்ரமை வறுத்தெடுத்தார். ஆனால் விக்ரம் இதற்கு நிதானமாக விளக்கம் கொடுத்தது சிறப்பு. இதேபோல் இரவு உணவைத் தயாரிக்க எழுந்துவராமல் அசட்டையாக தூங்கியதோடு, தாமதமாக வந்து விட்டு நிக்சனிடம் கடுப்பைக்காட்டியது ஓவர். அர்ச்சனாவிற்குள்ளும் அழுகிணித்தனங்கள் இருக்கின்றன என்பதற்கான சாட்சியங்கள் இவை.
நிக்சனுக்கு ஆதரவும் எதிர்ப்பும்
அகம். கமல் என்ட்ரி. ‘ஒரு கேப்டன்ஸி எப்படியிருக்கணும்னு பிக் பாஸிற்கே ஐடியா கொடுத்த நிக்சனோட பணி எப்படியிருந்தது?’ என்று வந்தவுடனேயே ஏழரையைக் கூட்டினார் கமல். “வைல்டு கார்டுல உள்ளே வந்தவங்க சொன்னதை வெச்சு, நான் பண்ண ஒரு தப்பு தெரிஞ்சது. அப்பவே அப்செட்டா இருந்தேன். போதாக்குறைக்கு நான் கேப்டன் ஆனப்புறம் மணியெல்லாம் வெச்சாங்க” என்று நிக்சன் நீட்டி முழக்க, ‘இருங்க.. கடைசியா விளக்கம் கொடுங்க’ என்ற கமல் மற்றவர்களிடம் நிக்சன் கேப்டன்ஸி பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.
நிக்சன் ஒகே என்று நினைப்பவர்கள் ஒருபுறமும், ஓகே இல்லை என்று நினைப்பவர்கள் இன்னொருபுறமும் அமர வேண்டும். விமர்சன வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் தினேஷ், மணி, அர்ச்சனா, ரவீனா. எதிர் தரப்பினர் இவர்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டும். முதலில் எழுந்த தினேஷ் “பெல் அடிச்சதெல்லாம் லுலுவாய்க்குன்ற மாதிரியே இருந்தது. நிக்சனோட எண்ணங்கள் ஓகே. ஆனா அனுபவம் குறைவு” என்றார். ‘விக்ரம் 2.0 மாதிரி இருந்தது’ என்று சுருக்கமாக, ஆனால் அதிரடியாகச் சொன்னார் மணி.
இதற்கு விளக்கம் அளிக்க எழுந்த விக்ரம் “சாப்பாடு, சந்தோஷம்.. இது ரெண்டும் இருக்கற மாதிரி பார்த்துக்கப் போறேன்னு நிக்சன் சொன்னான். அவன் யாருக்கும் பயப்படலை. இங்கயும் அங்கயும் தகவல் மட்டும் சொல்லல. அதுக்கு சொல்யூஷனும் பண்ணான்” என்று சொல்லி விட்டு தளபதி சொன்ன மாதிரி ‘நாம ஒண்ணு செய்யலாம்ன்னு பார்த்தா, நம்மளேயே செஞ்சு வுட்றாங்க’ என்று நடிகர் விஜய்யின் பன்ச் வசனத்தை உதாரணம் காட்டினார். (பாவம், அவரு என்ன மனநிலையில் அதைச் சொன்னாரோ?!)
+ There are no comments
Add yours