கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தீகோய் கிராமத்தில் தன் மனைவி ஓமனா (ஜோதிகா), 19 வயது மகள் பெமி (அனகா மாயா ரவி) மற்றும் தந்தை தேவஸியுடன் வாழ்ந்து வருகிறார் ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கியின் முன்னாள் அதிகாரி மேத்யூ தேவஸி (மம்மூட்டி).
கிராமத்தினரிடமும் அவர் அங்கம் வகித்திருக்கும் திருச்சபையிடமும் நற்பெயர் பெற்ற மேத்யூவை, அக்கிராமத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு களமிறக்க முயற்சி செய்கிறார்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அப்பகுதி உறுப்பினர்கள். தொடக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் மேத்யூ ஒருகட்டத்தில் சம்மதம் தெரிவிக்க, அவரை மனு தாக்கல் செய்ய வைத்து தேர்தல் பணிகளில் இறங்குகிறது அக்கட்சி.
இந்நிலையில், தன்பாலின ஈர்ப்பாளரான தன் கணவர் மேத்யூ, அவரின் நண்பரான தங்கனுடன் (சுதி கோழிக்கோடு) கடந்த சில ஆண்டுகளாக திருமணம் மீறிய உறவில் இருப்பதாகவும், அதனால் தனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் எனக் கோரி, நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கிறார் மேத்யூவின் மனைவியான ஓமனா. இதை மறுக்கிறார் மேத்யூ. இந்த விவகாரமானது அவர்களின் மகள், குடும்பத்தினர், கட்சி, திருச்சபை, கிராமம், ஊடகங்கள், நீதிமன்றம் என எல்லா தளங்களிலும் எவ்வகையான தாக்கத்தையும் உரையாடலையும் ஏற்படுத்துகிறது என்பதையும், இறுதியில் மேத்யூவும் ஓமனாவும் என்ன முடிவெடுத்தார்கள் என்பதையும் பேசுகிறது இயக்குநர் ஜோ பேபியின் ‘காதல்’.
நிதானமான மனிதர், கிராமம், கட்சி, திருச்சபை போன்றவற்றில் கௌரவமான பெரிய மனிதர் எனப் பெயர் பெற்றவர், பொறுப்பான தந்தை, மரியாதை தவறாத மகன் எனச் சமூகம் சொல்லும் சிறந்த மனிதனுக்கான அத்தனை தகுதியும் உடையவரான மேத்யூ, அவருக்கும் அவரின் காதலுக்கும் நேர்மையற்றவராக இருந்து புழுங்கிக்கொண்டே இருக்கிறார். அதை மம்மூட்டி என்கிற ஒரு தேர்ந்த கலைஞன் தன் முதிர்ச்சியான நடிப்பால் உணர்வுபூர்வமாக பார்வையாளர்களுக்குக் கடத்துகிறார்.
‘நான் அப்படி இல்லை’, ‘இப்படி ஆகும்னு தெரியாது’, ‘நான் உன் வாழ்க்கையை நாசம் பண்ணிட்டேன்’ என நடுக்கத்தோடு அளவெடுத்து பேசும் மம்மூட்டி, எக்கச்சக்க கேள்விகளாலும், மனப் போராட்டத்தாலும் முகம் கொடுத்து பேசவே தயங்கும் மேத்யூ என்கிற மனிதனின் வார்த்தைகளைப் பெரும்பாலும் மௌனத்தாலேயே அழுத்தமாகப் பேசி பிரமிக்க வைக்கிறார்.
நடிப்பில் மம்மூட்டியோடு சமர் செய்கிறார் ஜோதிகா. 20 ஆண்டுகால வலியாலும், ஏக்கத்தாலும், கோபத்தாலும், காதலாலும் இறுகிப்போன தன் அகத்தை, அதிரடியாகவோ ஆக்ரோஷமாகவோ வெளிக்காட்டாமல், தன் கணவருக்கும் சேர்த்தே போராடும் ஓமனாவாக ஜோதிகா. காலம் தந்த ஓமனாவின் இந்தப் பக்குவத்தை, தெளிவான வசனங்களாலும் மௌனத்தாலும் கண்முன் கொண்டுவருகிறார் ஜோ.
குற்றத்தை உணர்ந்து மகன்மீது சாய்ந்து அழும் தந்தை, பெற்றோரை புரிந்துக்கொள்ளும் மகள், தன் காதலுக்கு நியாயம் செய்ய சங்கடங்களையும் அவமதிப்புகளையும் தாங்கிக்கொண்டு, தன் வாழ்க்கைகான அர்த்தத்தை தேடிக்கொண்டிருக்கும் தங்கன் என எல்லா கதாபாத்திரங்களுமே உயிருள்ள மனிதர்களாய் திரையில் வருகிறார்கள்.
தீகோய் கிராமத்தின் அமைதியையும் கதாபாத்திரங்களில் மனப்போராட்டங்களையும், மேதாவித்தனம் இல்லாத சின்ன சின்ன ஷாட்டுகளில் விவரிக்கிறது சாலு கே.தாமஸின் ஒளிப்பதிவு. மேத்யூஸ் புலிக்கனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையையும் படத்திற்கு தேவையான காதலையும் வலியையும் ஆறுதலையும் கடத்துகின்றன. ஆர்ப்பாட்டமில்லாத ஃப்ரான்ஸிஸ் லூயிஸின் படத்தொகுப்பு, படத்தைப் பக்குவமாக நகர்த்திச் செல்கிறது.
திகோய் கிராமம், ஓமனா-மேத்யூஸ் குடும்பம், மேத்யூஸ் எனும் தனிமனிதன், மேத்யூஸ் சார்ந்திருக்கும் கட்சி, அதன் உறுப்பினர்கள், தங்கனும் அவர் நடத்தும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியும் என முதற்பாதி முழுவதும் கதைக்கருவிற்குத் தேவையான மூலப் பொருள்களை நிதானமாகவே சேகரித்தப்படி நகர்கிறது.
அதற்கு பிறகு விவகாரம் திரைக்கு வர, கிராமம், கட்சி, திருச்சபை எனச் சம்பந்தப்பட்ட தனி மனிதர்களுக்குப் புறத்தே உள்ள சூழல்கள், இவ்விவகாரத்தை எங்கனம் எடுத்துக்கொண்டு ரியாக்ட் செய்கின்றன என்பதை முதற்பாதியிலும், குடும்பம், பிள்ளைகள், சம்பந்தப்பட்டவர்களும் எப்படி உள்வாங்கி கொள்கிறார்கள் என்பதை இரண்டாம் பாதியிலும் பேசுகிறது திரைக்கதை.
இரண்டாம் பாதி திரைக்கதையை முக்கியத்துவம் பெறச் செய்யும் முதற்காரணம், பிரதான கதாபாத்திரங்களை நேர்மையாகவும், சார்பற்றும், தெளிவாகவும் எழுதியிருப்பதுதான். ஓமனா கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டால், ஏன் இத்தனை வருடம் கழித்து நீதிமன்றப் படியேறுகிறார் என்பதற்கு நியாயமான காரணமும், தன் கணவர் மீது கொண்ட அன்பும் அவருக்கும் சேர்த்து இவ்விவகாரத்தை அணுகும் முதிர்ச்சியும் தெளிவாக சில வசனங்களிலேயே புரியவைக்கப்பட்டிருக்கின்றன.
அதேபோல், இவ்விவகாரத்தில் மேத்யூ குற்றவாளியா இல்லை பாதிக்கப்பட்டவரா என்பதை உணர வைக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் அவரின் தந்தையுடனான உரையாடல் காட்சி, பால்சன் சாக்ரியா, ஆதர்ஷ் சுகுமாறன் கூட்டணியின் தேர்ந்த எழுத்திற்கு உதாரணம்.
“நான் உங்களுக்கும் சேர்த்துதான் இந்த முடிவ எடுக்குறேன்”, “கல்யாணம் ஆனா எல்லாம் சரி ஆகிடும்னு சொன்னீங்களே? 20 வருஷமா எதுவுமே மாறலயே” போன்ற வசனங்கள் சமூகத்தின் பிற்போக்குதனங்களின் மேல்இறங்குகின்றன.
இரண்டாம் பாதியில் கொஞ்சம் விறுவிறுப்பையும், சமூகம் மற்றும் அரசுகள் மீதான விமர்சனங்களையும் முன்வைக்கின்றன நீதிமன்ற காட்சிகள். இருதரப்பு வாதப் பிரதிவாதங்கள், இவ்விவகாரம் தொடர்பான முந்தைய வழக்குகளும், தீர்ப்புகளும், சட்டங்களும் என சட்டரீதியிலான தகவல்கள் பேசினாலும், அதே ஃபிரேமில் மறுபுறம் மேத்யூவிற்குள் உள்ள அடம்பிடிக்கும் ஆண், ஓமானாவிற்குள் இத்தனை வருடம் அழுதுக்கொண்டிருந்த வேறொரு பெண், தான் செய்த தவறுக்காக நீதிமன்றம் ஏறும் மேத்யூவின் தந்தை என உணர்வுரீதியிலான உருமாற்றங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.
குற்றவாளி கூண்டுக்கு அருகில் தனக்கு எதிராக மனு கொடுத்த மனைவியின் கைப்பையுடன் நிற்கும் மம்மூட்டி, தங்கனுக்கான கண்ணியத்திற்குச் சிறிதும் களங்கம் விளைவிக்காமல் ஓமனா அணுகிய விதத்தைக் காட்டும் ஷாட், தன் காதலரின் புகைப்படம் கொண்ட நோட்டீஸை ஏக்கத்துடன் பார்க்கும் தங்கன் எனப் பல ஷாட்கள் கவித்துவமானவை.
கிராமத்திலும் கட்சியிலும் நீதிமன்றத்திலும் சிலர் மட்டும் எப்படி இவ்வளவு முற்போக்காக இருக்கிறார்கள் என்ற கேள்வி இடிக்கிறது. மேலும், சில இடங்களில் திடீரென சில கதாபாத்திரங்கள் திருந்திவிடவும் செய்கின்றன. ‘இது சினிமா சாரே’ என நம்மை நாமே தேற்றிக்கொள்ள நேரிடுகிறது. மேத்யூஸிற்கும் ஓமனாவிற்குமான உரையாடல்களை இன்னும் கூடுதலாக நிகழ்த்திக்காட்டியிருந்தால், திரைக்கதை இன்னும் அழுத்தம் பெற்றிருக்கும்.
‘ஆல்பா மேல்’ (Alpha Male)-ஐயும் டாக்சிக்தனம் கொண்ட ஆண்களையும் ரொமான்டிசைஸ் செய்து நடித்த சில படங்களுக்கு மாற்றாக, இக்கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததோடு படத்தைத் தயாரித்த விதத்திலும் மம்மூட்டி பாராட்டுக்குரியவர்.
+ There are no comments
Add yours