“கமல் சாருக்குக் கிடைக்கல; எனக்குக் கிடைச்சது!'' – `சிங்கப்பெண்ணே' ரீ-என்ட்ரி குறித்து ஶ்ரீகாந்த்

Estimated read time 1 min read

சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `சிங்கப் பெண்ணே’. இந்தத் தொடர் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே ரசிகர்களைக் கவர்ந்தது. இந்தத் தொடரில் `கருணாகரன்’ கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் ஶ்ரீகாந்த்.

இவரை எங்கேயோ பார்த்த முகம் போல் தெரிகிறதே என என்னைப் போல பலருக்கும் நிச்சயம் தோன்றியிருக்கும். இவர் `மின்சாரக் கண்ணா’ படத்தில் நடிகர் விஜய்யின் சகோதரராக நடித்திருந்தார். பாலச்சந்தர் சாரால் `சந்திரகாந்த்’ என செல்லமாக அழைக்கப்படும் அவரை மழைப் பொழுதில் சந்தித்துப் பேசினோம்.

ஶ்ரீகாந்த்

“78-ல் பிலிம் எடிட்டராகத்தான் என் கரியரைத் தொடங்கினேன். வெள்ளச்சாமின்னு ஒரு பெரிய எடிட்டர் இருந்தார். அவர்கிட்ட தான் ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். கிட்டத்தட்ட 65-70 படங்கள் அவர்கிட்ட ஒர்க் பண்ணியிருப்பேன். டைரக்‌ஷனில் தாசரி நாராயணராவ்னு தெலுங்கில் பெரிய டைரக்டர் அவர்கிட்ட மூணு வருஷம் ஒர்க் பண்ணினேன். பிறகு பாலு மகேந்திரா சார்கிட்ட இருந்தேன். டைரக்‌ஷனில் இவங்க எல்லாம் தான் என் குருநாதர்கள்.

எடிட்டிங் ரூமுக்குள்ள போன பிறகுதான் சினிமான்னா என்னன்னு கத்துக்கிட்டேன். ஸ்டில்ஸ் ரவி சார் என்னை ஃபோட்டோ எடுத்திருந்தார். அந்த சமயம் பாலச்சந்தர் சார்கிட்ட வசந்த் அசிஸ்டென்ட் ஆக இருந்தார். மனதில் உறுதி வேண்டும் படத்துக்காக புதுமுகம் தேடிட்டு இருக்கோம்னு வசந்த் சொல்லவும் என்னுடைய ஃபோட்டோஸை அவர்கிட்ட ரவி காட்டியிருக்கார். அதைக் கொண்டு போய் பாலச்சந்தர் சார்கிட்ட காட்டி இவர் நடிகை ஶ்ரீபிரியாவின் சகோதரர்னு வசந்த் சொல்லியிருக்கார். அதன் மூலம் 87-ல் பாலச்சந்தர் சார்கிட்ட இருந்து ஒரு அழைப்பு வரவும் அவரை மீட் பண்ணப் போனேன்.நீ ஆக்ட் பண்ணுவியான்னு என்கிட்ட கேட்டார். இதுவரைக்கும் எடிட்டிங் தான் பண்ணியிருக்கேன். ஆக்டிங் பார்த்திருக்கேன்.. கண்டிப்பா பண்ணுவேன்னு சொன்னேன். அவர் என்கிட்ட 50% நம்பு, 50% நம்பாதன்னு சொல்லி அனுப்பி வச்சிட்டார். நான் வீட்டுக்கு போன ஒரு மணி நேரத்துலேயே அக்காவுக்கு ஃபோன் பண்ணி, `உன் பிரதரை கன்ஃபார்ம் பண்ணிட்டேன். நாளைக்கு ஆபிஸூக்கு வரச் சொல்லு’ன்னு சொல்லிட்டார். 

ஶ்ரீகாந்த்

மறுநாள் நான் போனதும், `நீ கண்டிப்பா நல்லா பண்ணுவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு’னு சொன்னார். உனக்கும், ஹாசினிக்கும் தான் ஷூட். அதுக்கு தயாராகிக்கோன்னு சொல்லிட்டார். அந்த சமயம் சுஹாசினி மேடம் `சிந்து பைரவி’ படம் பண்ணி நேஷனல் அவார்டு எல்லாம் வாங்கியிருந்தாங்க. அவங்க கூட நடிக்கப் போறோம்னு சின்னதா ஒரு பயம் இருந்தது. எல்லாரும் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷாட் ஓகே பண்ணிடு இல்லைன்னா நல்லா இருக்காதுன்ன்னு சொன்னாங்க. வசந்த் சீன் பேப்பர் கொடுத்தார். நானும் சீனுக்குத் தயாராகிட்டேன். சார் ஷார்ப் ஆக 9 மணிக்கு வந்தார். அவர் வந்ததும் அந்த குறிப்பிட்ட சீனை ஒரே ஷாட்ல ஒரே டேக்ல பண்ணினேன். கிளாப் பண்ணி என்னைக் கட்டிப் பிடிச்சிட்டார். உண்மையாகவே இதுக்கு முன்னாடி நீ நடிச்சது இல்லையான்னு கேட்டார். யூனிட்டே கைத்தட்டி என்னை என்கரேஜ் பண்ணினாங்க. 

அந்தப் படத்துல `ஆச்சி, ஆச்சின்னு’ ஒரு பாட்டு வரும். அந்தப் பாட்டுல ஜிம்னாஸ்டிக்லாம் பண்ணி ஆடலாம்னு எனக்கு ஒரு எண்ணம். சார்கிட்ட நாம நேரடியா போய் சொல்லிட முடியாது. அவர் தூரத்துல உட்கார்ந்திருந்தார். அவருக்கு தெரியுற மாதிரி அவர் முன்னாடி பேக் லிப்ட் மூணு, நாலு பண்ணினேன். நான் நினைச்ச மாதிரியே அவர் அதைப் பார்த்துட்டு என்னை கூப்பிட்டு விட்டார். அவர்கிட்ட சும்மா ஜிம்னாஸ்டிக் பண்ணிட்டு இருந்தேன் சார்… இதை பாட்டுல பயன்படுத்தினா நல்லா இருக்கும்னு சொன்னேன். அதுவும் அதை சிங்கிள் ஷாட்டாக எடுக்கணும்னும் சொன்னேன். அப்பவே அவர் என்னுடைய போர்ஷனை என்னை டைரக்ட் பண்ண அனுமதி கொடுத்தார். இது எந்த நடிகனுக்கும் கிடைக்காத பெருமைக்குரிய விஷயம்.

ஶ்ரீகாந்த்

நான் சேலஞ்ச் பண்ணி சொல்றேன்.. கமல் சாருக்குக் கூட அந்த காலகட்டத்துல இந்த வாய்ப்பு கிடைச்சிருக்காது. அவர் பாலச்சந்தர் சாருக்கு செல்லப் பிள்ளை. அவருக்குக் கூட கிடைக்காத வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. ஷூட் முடிஞ்சதும் எடிட்டிற்கு கூப்பிட்டு இது உன்னுடைய பாட்டு… கரெக்‌ஷன் இருந்தா பண்ணிக்கோன்னு சொன்னார். நான் கமல் சார் முகத்துக்கு நேராகவே சொல்லுவேன். இது கமல் சாருக்கே கிடைக்கல. கமல் சார் மிகப்பெரிய ஆர்ட்டிஸ்ட். அதுல நோ டவுட்.  புதுமுக நடிகரை கூப்பிட்டு எடிட் வரைக்கும் பார்க்க யாருங்க சொல்லுவார்.

நான் 100 படங்கள் பண்ண வேண்டாம். பாலச்சந்தர் சாருடைய ஒரு படத்தில் நடிச்சா போதும் அது நூறு படங்கள் பண்ணினதுக்கு சமம்!” என்றவரிடம் மின்சார கண்ணா படம் குறித்துக் கேட்டோம்.

ஶ்ரீகாந்த்

“அந்தப் பட புரொடியூசர் மூலமாகத்தான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சது. அந்தப் படமும் பெரிய அளவுல ஹிட் ஆச்சு. என் கேரக்டர் ரொம்ப நல்லாவே பேசப்பட்டது. அந்தப் பட ஷூட்டிங் ஊட்டியில் நடந்துட்டு இருந்தது. அப்ப விஜய் சாருடைய பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொள்ள ஷூட் முடிச்சிட்டு ஆர்ட்டிஸ்ட் சிலர் கிளம்பி போனாங்க. அப்ப என்கிட்ட ஒரு ஸ்டில் போட்டோகிராபர் நீங்க வரலையான்னு கேட்டார். எனக்கு அவருக்கு பிறந்தநாள்னுலாம் தெரியாது. பார்ட்டிக்கு என்னை கூப்பிடவும் இல்ல. கூப்பிடாம ஒரு நிகழ்ச்சியில் எப்படி கலந்துக்க முடியும்னு வரலன்னு சொல்லிட்டேன். அதை அவர் விஜய் சார்கிட்ட சொல்லியிருக்கார். நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க.. நான் தங்கி இருந்த ஹோட்டலில் பேசி என் ரூமுக்கு நேரடியா விஜய் சார் ஃபோன் பண்ணினார். அவரே, `நீங்க கண்டிப்பா வரணும், அது மட்டுமில்லாம நம்ம குரூப்ல யாரெல்லாம் வரலையோ அவங்க எல்லாரையும் நீங்க கூப்பிட்டுட்டு கண்டிப்பா வரணும். நீங்க வந்தால் தான் நான் கேக் கட் பண்ணுவேன்’னு அன்பு கட்டளை போட்டுட்டாரு. தம்பி சொல்லி அண்ணன் செய்யலைன்னா எப்படி?னு மீதியிருந்த ஆர்ட்டிஸ்ட்களையும் கூப்பிட்டுட்டு போனேன். அப்பவே விஜய் சார்கிட்ட மிகப்பெரிய ஒரு உயர்ந்த குணம் இருந்தது. இன்னைக்கு அவர் பெருசா வளர்ந்திருக்காருன்னா அதுக்கு இதெல்லாமும் ஒரு காரணம்! ஒரு அண்ணன் தம்பியோட வளர்ச்சியைப் பார்த்து சந்தோஷப்படுற மாதிரி இப்ப அவர் வளர்ச்சியைப் பார்த்து நான் சந்தோஷப்படுறேன்.

இன்னைக்கு விஜய் சார் பெரிய உயரத்துல இருக்கார். அவர்கிட்ட போய் அவரைப் பார்க்கணும்னு நினைச்சா கூட பார்க்க முடியல. 2,3 தடவை அவரை சந்திக்க ட்ரை பண்ணினேன். ஆனா, முடியல. அதுதான் வருத்தமா இருக்கு!” என்றவரிடம் சிங்கப்பெண்ணே சீரியல் குறித்துப் பேசினோம்.

ஶ்ரீகாந்த்

” இந்தியன் படத்துல போலீஸ் கேரக்டரில் நடிச்ச பிறகு தொடர்ந்து போலீஸ் கேரக்டராகத்தான் வந்தது. அதனால வேண்டாம்னு தவிர்த்துட்டேன். தமிழ் சினிமாவுல ஒரு சாபக்கேடு இருக்கு. நாம ஆரம்பத்தில் என்ன ட்ரெஸ் போடுறோமோ சாகுற வரைக்கும் அதுதான் போட்டு நடிக்கணும். இப்போ தான் அந்த நிலைமை கொஞ்சம் மாறிட்டு இருக்கு. இல்லைன்னா நம்மள பிராண்ட் பண்ணிடுவாங்க. நான் ரெண்டு ஸ்கிரிப்ட் ரெடியா வச்சிருக்கேன். அதை எப்படியாச்சும் என் டைரக்‌ஷனில் வெளிக் கொண்டு வரணும்னு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுட்டு இருக்கேன். என் ஃப்ரெண்ட் தனுஷ் கிருஷ்ணா. அவர்தான் சிங்கப்பெண்ணே சீரியலுடைய டைரக்டர். அவர் இந்தக் கேரக்டர் நீங்க தான் பண்ணனும்னு கேட்டார். அவருக்காகத்தான் நடிக்க சம்மதிச்சேன். இந்தக் கேரக்டருக்காக 6 பேரை ஆடிஷன் எடுத்து கடைசியா என்னை செலக்ட் பண்ணியிருக்காங்க. எனக்கு சீரியல் பண்ற, நடிக்கிற ஐடியாவே கிடையாது. நல்ல கேரக்டர் நீங்க கண்டிப்பா பண்ணனும்னு தனுஷ் சொன்னதால தான் சம்மதிச்சேன். அவர் சொன்ன மாதிரியே இன்னைக்கு என் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு. ரொம்பவே சந்தோஷமா இருக்கு. சினிமாவை விட சீரியல் ரீச் ரொம்ப பெரிய அளவுல இருக்கு!” என்றவரிடம் குடும்பம் குறித்துக் கேட்கவும் பகிர்ந்து கொண்டார்.

“அக்கா ஶ்ரீபிரியா இப்போ சினிமா வேண்டாம்னு ஒதுங்கிட்டாங்க. கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல நடிச்சிட்டாங்க. இப்ப ஃபேமிலியோட நேரம் செலவிட்டுட்டு ஹாப்பியா இருக்காங்க. என் மனைவி சீரியல் பார்த்துட்டு இப்படியெல்லாம் அநியாயம் பண்றீயேப்பான்னு விளையாட்டா கேட்பாங்க. எனக்கு ஒரே பையன். ஐடியில் மூன்றாண்டுகள் வேலை பார்த்துட்டு இருந்தார். அவருக்கும் சினிமா பக்கம் ஆர்வம் உண்டுங்கிறதனால இப்ப ஷார்ட் பிலிம் பண்ணிட்டு இருக்கார். என்னுடைய கனவுங்கிறது 2024க்குள்ள என் டைரக்‌ஷனில் ஒரு படம் பண்ணனும். அவ்வளவுதான்!” என்றார்.

படங்கள் – விக்னேஷ்

ஶ்ரீகாந்த்

இன்னும் பல விஷயங்கள் குறித்து ஶ்ரீகாந்த் நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours