‘யாராவது கயிற்றை கழற்றினால் எண்ணிக்கை மூன்றாக உயரும்’ என்று அறிவிப்பதின் மூலம் பிக் பாஸ் அவராகவே ஐடியா கொடுத்தார். இதைக் கேட்டதும் அர்ச்சனாவும் மாயாவும் உடனே உற்சாகமாகி கயிற்றை விடுவித்தார்கள். கூட ஒரு ஆள் வந்து சேர்ந்தால் நமக்கு நல்லதுதானே என்பது அவர்களின் கணக்கு. எனவே பூர்ணிமாவும் தினேஷூம் கயிறு தண்டனையில் கூடுதலாக இணைந்தார்கள்.
ஒன்றாகவே அமர வேண்டியிருந்ததால் ஏதோவொன்றை பேசியாக வேண்டுமே என்று பேச்சை ஆரம்பித்தார் விஷ்ணு. ‘என்னதான் உன் கேம் பிளான்?’ என்று அர்ச்சனாவிடம் அவர் கேட்க “ஆக்சுவலி… எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு. நியாயமான விஷயத்திற்கு வாய்ஸ்-அவுட் தருவேன். நான் நெகட்டிவ் பெர்ஸன் கிடையாது” என்றெல்லாம் அர்ச்சனா ஓவராக பில்டப் தர “நீ வில்லி கேரக்ட்டர்தானே பண்றே.. ஹீரோயின் மாதிரி பேசற” என்று வெறுப்பு பிரசாரத்தை ஆரம்பித்தார் விஷ்ணு. எனவே இருவருக்குமான உரையாடலில் வெப்பம் ஏறிக் கொண்டே போனது.
விஷ்ணுவின் அழிச்சாட்டியம், மற்றவர்கள் செய்த அநியாயம்
இந்தச் சமயத்தில் கூத்தில் கோமாளி போல உள்ளே புகுந்த ரவீனா, “சண்டை போடுங்க. பிரெண்ட்ஸ் ஆயிடாதீங்க” என்று விஷ்ணுவிடம் அவர் கிசுகிசுத்தது அநியாயமான குறும்பு. விஷ்ணு தன்னைத் தாக்கும் போது எவரும் தட்டிக் கேட்காமல் இருப்பதோடு, அதைத் தூண்டியும் விடுகிறார்களே என்று அர்ச்சனா ஆத்திரப்படுவதில் நியாயம் உள்ளது. எனவே “என்னோட எமோஷன் உங்களுக்கு விளையாட்டா இருக்கா. சண்டை போடறத என்ஜாய் பண்ணிப் பார்க்கறீங்களா?” என்று நறுக்கென்று கேள்வி கேட்க, வந்த கோபத்தில் ‘ஆமாம்’ என்று சொல்லி அகன்றார் ரவீனா.
இந்தச் சமயத்தில் மாயா, தினேஷ், மணி, ரவீனா ஆகிய நால்வரும் செய்தது மோசமான விஷயம். நாற்காலிகளைத் தூக்கிக் கொண்டு வந்து ஏதோ சினிமா பார்க்க ஆரம்பிப்பது போல் விஷ்ணு – அர்ச்சனா சண்டையை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ‘இந்தச் சண்டை வேடிக்கையா தெரியுதா’ என்று அர்ச்சனா கேட்டதின் எதிர்விளைவு இது. அர்ச்சனா ஒவர் ரியாக்ஷன் செய்வதில் ஒரு பங்கு உண்மை கூட இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் ஒருவர் மனஉளைச்சலில் கத்திக் கதறும் போது அவர் எதிரியாகவே இருந்தாலும் கூட கரிசனம் காட்டுவதுதான் அடிப்படையான நாகரிகம். இந்த விஷயத்தில் வேடிக்கை பார்த்தவர்கள் செய்தது நுண்ணுணர்வே அற்ற கொடுமையான செயல்.
+ There are no comments
Add yours