சென்னை: பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரசாந்த் நீல் ‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு இயக்கியுள்ள படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. முதலில் இந்தப் படம் செப். 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தின் பணிகள் முடிவடையாததால், டிச.22 ம் தேதி வெளியாகும் என அறிவித்தனர். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி?: 3.46 நிமிடங்கள் ஓடும் ட்ரெய்லரின் தொடக்கத்தில் வரும் பில்டப், செட்டப் எல்லாம் ‘கேசிஎஃப்’ படத்தை நினைவுப்படுத்தும் பிரசாந்த் நீல் டச். பிரமாண்ட செட், அணிவகுக்கும் ஆயுதங்கள், பழங்கால கோட்டைகள், கவனம் பெறும் கலர் டோன், மேக்கப், உடைகள், அணிகலன்கள் என தரமான மேக்கிங்குக்கு படம் உத்தரவாதம் கொடுக்கிறது.
மாஸான பிரபாஸின் தோற்றமும், இன்ட்ரோவும் ஈர்க்கிறது. பிருத்விராஜ் – பிரபாஸ் நண்பர்களாக இருப்பதாக தொடக்கத்தில் காட்டப்படுகிறது. ஆட்சி அதிகாரத்தை பிடிக்க நடக்கும் மோதல்கள், சூழ்ச்சிகள் கொண்ட கதை ஒருபுறமும், நட்பு மறுபுறமுமாக ட்ரெய்லர் வெட்டப்பட்டுள்ளது. இம்முறை அம்மா பாசத்துக்கு பதிலாக நட்பை எமோஷனல் காட்சிகளுக்கு பிரசாந்த் நீல் பயன்படுத்தியிருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. படம் 22-ம் தேதி வெளியாகிறது.