நல்ல கதாபாத்திரத்துக்காக காத்திருக்கும் நடிகன் கென் கருணாஸ்
19 நவ, 2023 – 12:31 IST
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதை, காலத்திற்கேற்ற கதாபாத்திரமாக, உதவி இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமையை வெளிப்படுத்தி திரை உலகில் தனக்கென இடம் பெற முயற்சித்து வரும் நடிகர் கென் கூறியது:
அப்பா கருணாஸ் திரைப்பட நடிகர், அம்மா பாடகி கிரேஸ். எங்களது குடும்பமே சினிமா குடும்பம். எனக்கும் சிறுவயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம். ரகளபுரம், சந்தா மாமா, இனம், நெடுஞ்சாலை, அழகு குட்டி செல்லம், அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்தேன்.
என் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய படம் அசுரன். டைரக்டர் வெற்றிமாறன் கொடுத்த பெரிய வாய்ப்பு அது. அவரை குருவாக பார்க்கிறேன். அந்த படத்துக்கு அப்புறம் நிறைய படம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நல்ல படங்களில் நல்ல கதாபாத்திரத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். அது வரை சும்மா இருக்க வேண்டாம் என்று ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன்.
திரைத்துறையில் கற்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு; அதனால் தான் உதவி இயக்குனராக பணிபுரிகிறேன். பிரேமில் பார்க்கும் போது, நாம் எப்படி நடிக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. ஒரு கேரக்டரை ஒரு டைரக்டர் எப்படி நடிக்க வைக்கிறார் என்றும் தெரிந்து கொள்கிறேன்.
சமீபத்தில் அப்பா கலியர்கள் என்ற படம் தயாரித்து உள்ளார். அந்த படத்திற்கு மியூசிக் டைரக்டராக இருக்கேன். அப்போது தான் எனக்கு இப்படிப்பட்ட படங்கள் இருக்கிறது என்றே தெரியும். சினிமா துறையில் எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. என்ன நடக்குமோ அது அதுவாகவே நடக்கும் என அடிக்கடி அப்பா சொல்லுவாரு. ஆகையால் நமக்கான விஷயம் அதுவாகவே நடக்கும் என்று நம்புகிறேன்.
மெட்ராஸ், பொல்லாதவன், ஆடுகளம், மாதிரி படங்கள் செய்ய ஆசை. எதிர்காலத்தில் மக்களை சந்தோஷமாக வைத்துக் கொள்கிற மாதிரி மக்களுக்கு பிடிக்கின்ற நம் வாழ்வியல் தொடர்புடைய படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது என்றார்.
+ There are no comments
Add yours