திருப்பூர் யூனியன் சாலையில் தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியத்துக்குச் சொந்தமான மல்டிபிளக்ஸ் திரையரங்கு ஒன்று உள்ளது. அங்கு தீபாவளி அன்று அனுமதி இல்லாமல் சிறப்புக் காட்சிகள் போட்டதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் புகார் வந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய திருப்பூர் வருவாய்த் துறையினர், அரசு அனுமதித்த நேரத்துக்கு முன்பாக தீபாவளி அன்று காலை 7.10, 7.25, 8.10, 8.25 என ஆறு காட்சிகள் திரைப்படங்களை வெளியிட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தியேட்டர் உரிமையாளருக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், திருப்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருப்பூர் சுப்பிரமணியம், தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலும் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் சினிமா துறைக்குள் வந்து 42 வருடங்கள் ஆகின்றன. இதுவரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எனது பணியைச் செய்துள்ளேன்.
ஓர் ஆண்டுக்கு முன்பே இந்தத் திரையரங்கை என் மகன்களிடம் ஒப்படைத்து விட்டேன். தீபாவளி அன்று ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் சிறப்புக் காட்சிகள் தொடர்பாக விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், இந்திப் படத்துக்கு எந்த அறிவிப்பும் தமிழக அரசு வெளியிடவில்லை. அதனால், எங்கள் ஐடி டீம் ஊழியர்கள் தெரியாமல் இந்திப் படத்தைத் திரையிட்டு விட்டனர். அதற்கு நான் முழுமையாகப் பொறுப்பேற்கிறேன்.
+ There are no comments
Add yours