ஓர் இளம் வயது ஆணும், பெண்ணும் ஒரே இடத்தில் புழங்கும்போது பரஸ்பர ஈர்ப்பு கொள்வது மிக மிக இயல்பானது. எல்லோருக்குமே இது நிகழக்கூடியது. ஆனால் இதை வைத்து சமூகவலைத்தளங்களில் எல்லை மீறி அடிக்கப்படும் கமென்ட்டுகள் மலினமானவை.
கேமரா கான்ஷியஸ் இல்லாமல் போட்டியாளர்கள் எல்லை மீறும் போது பார்வையாளர்களுக்கு முகச்சுளிப்பாகத்தான் இருக்கும். மறுப்பில்லை. ஆனால் இதற்காக அவர்களை ஏதோ கொடிய குற்றவாளிகள் போல் சித்திரித்து மலினமான முறையில் கிண்டலடிப்பது கலாசார காவலர்களின் பாசாங்கான ஆட்டம். நிக்சன் மற்றும் ஐஷூவின் கேம் இதனால் பாதிக்கப்படுகிறதா என்பதே இதில் காண வேண்டிய முக்கியமான அம்சம்.
சிறைக்குச் சென்றவருக்கு ‘சிறந்த நீதிபதி’ பட்டம்
குழப்பமான முறையில் தீர்ப்பு சொன்ன பிராவோவை “இரண்டு பக்கமும் பேசக்கூடாதுப்பா… ஏதாவது ஒரு பக்கம்தான் தீர்ப்பு சொல்லணும்” என்று கானா பாலா காட்டமாக விமர்சிக்க, கூட இருந்து கிண்டல் செய்தார் விஷ்ணு. இதனால் பிராவோவின் முகம் மாறி கோபமடைய “பார்றா… சப்ஜெக்ட் கிட்ட அசைவு தெரியுது… கோபம் எல்லாம் வருது” என்பது போல் விஷ்ணு கூடுதலாக கிண்டல் அடிக்க, “ஏன் உங்களுக்கெல்லாம் கோவம் வராதா… அது சங்கடமான விஷயம். என்னால அப்படித்தான் சமநிலையா தீர்ப்பு சொல்ல முடியும்” என்றபடி எரிச்சலுடன் அகன்று சென்றார். சமநிலை, நிதானம் என்பதெல்லாம் பொதுத் தரப்பினருக்கு பிடிக்காது. வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக, ஏதாவது ஒருபக்கம் இறங்கி காரசாரமாக அடிக்கும் மசாலா ஆட்டம்தான் அவர்களுக்கு விறுவிறுப்பைத் தரும்.
நான்கே வழக்குகளில் இந்த நீதிமன்ற டாஸ்க் முடிவுக்கு வந்துவிட்டது. வழக்கில் வென்ற விஷ்ணு, விசித்ரா, தினேஷ், மணி ஆகியோருக்கு தலா ஒரு ஸ்டார் பரிசாகக் கிடைத்தது. “இது உழைத்து வாங்கிய ஸ்டார்” என்று கேமரா முன்னால் பெருமைப்பட்டுக்கொண்டார் விசித்ரா. இது தேவையில்லாத ஆணி. எனில் முன்னர் வாங்கிய ஸ்டார், மாயா கூட்டணி வாங்கித் தந்தது என்பதை அவராகவே ஒப்புக்கொள்கிறார். தன்னுடைய ஆசான் விசித்ரா ஸ்டார் வாங்கியது குறித்து சிஷ்யையான அர்ச்சனாவிற்கு ஒரே மகிழ்ச்சி. ஆனால் இந்தக் கூட்டணி எத்தனை நாளைக்கு ஒன்றாக இருக்கும் என்று தெரியவில்லை. வீடு மாறினால் விசித்திராவும் அர்ச்சனாவும் மறுபடியும் கூட மோதிக் கொள்ளலாம்.
+ There are no comments
Add yours