சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள, ‘ஜப்பான்’ மற்றும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படங்களின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம் ‘ஜிகர்தண்டா’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தில், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் வெளியாகி ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடித்துள்ளார்.. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்துக்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் தரப்பில் 10-ம் தேதி முதல் 20-ம் தேதி வரையில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை பரிசீலித்ததன் அடிப்படையில் வரும் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 6 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளை (ஒரு நாளைக்கு 5 காட்சிகள்) திரையிட அரசு அனுமதி அளிக்கிறது. சிறப்பு காட்சியை நாள்தோறும் காலை 9.00 மணி அளவில் தொடங்க வேண்டும். இறுதிக் காட்சியை 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகும் ‘ஜப்பான்’ படத்தின் சிறப்புக்காட்சிக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
முறையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி சிறப்பு காட்சி திரையிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான ‘லியோ’ படத்துக்கும் இதே போல சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours