பேய்பட ஹீரோ இமேஜை ‘ஜிகர்தண்டா’ மாற்றும்: ராகவா லாரன்ஸ்
06 நவ, 2023 – 14:21 IST
கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கிய படம், ‘ஜிகர்தண்டா’. 2014ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடித்திருந்தனர். ஒரு திரைப்பட இயக்குனருக்கும், தாதாவுக்கும் இடையிலான மோதலை சுவாரஸ்யமாக சொல்லி வெற்றி பெற்ற படம். தற்போது இதன் இரண்டாம் பாகம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற பெயரில் தயாராகி உள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
இப்படம் குறித்து ராகவா லாரன்ஸ் நிருபர்களிடம் கூறியதாவது: 1975களில் நடப்பது மாதிரியான கதை இது. பெல்பாட்டம் பேண்ட், பெரிய காலர் சட்டை என அந்த காலகட்ட இளைஞர்களின் தோற்றத்தில் நடித்திருக்கிறேன். நான் ஒரு இயக்குனராக இருந்தாலும் இந்த படத்தில் நான் ஒரு நடிகனாக அதுவும் புதுமுக நடிகன்போல கார்த்திக் சுப்புராஜ் சொன்னதை செய்தேன். படத்தில் நான் ஆதிவாசியாக நடிப்பதால் எந்த இடத்திலும் ராகவா லாரன்ஸ் தெரிந்து விடக்கூடாது, முனி, காஞ்சனா சாயல் வந்து விடக்கூடாது என்று கவனமாக நடித்திருக்கிறேன்.
நடிப்பில் எனக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் பெரிய போட்டியே இருக்கும். அதுவும் கிளைமாக்சில் ஒரு பிரளயம் ஏற்பட்ட மாதிரி இருக்கும். எனக்கு விருதுகளில் பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால் இந்த படத்திற்காக எஸ்.ஜே.சூர்யாவுக்கு விருது கிடைக்கும் என்று நம்புகிறேன்.
எங்கள் இருவருக்கும் இணையான கேரக்டர் நிமிஷாவுக்கு. அவர் ஒரு நடிப்பு ராட்சஷி. கொஞ்சம் ஏமாந்தால் உடன் நடிப்பவர்களை தூக்கி சாப்பிட்டு விடுவார். எனவே ரொம்ப உஷாராக அவருடன் நடித்தேன். லாரன்ஸ் என்றால் பேய் படம்தான் என்கிற இமேஜை இந்த படம் மாற்றும். இந்த படம்தான் தீபாவளிக்கு வெளியாகும் எனது முதல் படம். என்றார் ராகவா லாரன்ஸ்.
+ There are no comments
Add yours