வறுமையின் நிறம் சிவப்பு: நெபோடிசம் பற்றி அப்போதே பேசிய கே.பி! | varumaiyin niram sivappu

Estimated read time 1 min read

கே.பாலசந்தர், கமல்ஹாசன் ‘காம்போ’வின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ‘வறுமையின் நிறம் சிவப்பு’. வறுமை மட்டுமே வாழ்வாகிப் போன, அன்றைய வேலையில்லாத இளைஞர் களின் அவலத்தைக் கொஞ்சம் ஆக்ரோஷமாகப் பேசிய படம் இது.

கதை டெல்லியில் நடக்கும். ரங்கனாக கமல்ஹாசன், தேவியாக ஸ்ரீதேவி, பிரதாப்பாக பிரதாப் போத்தன், ரங்கனின் நண்பர்களாக திலீப், எஸ்.வி.சேகர், ரங்கனின் தந்தையாகப் பூர்ணம் விஸ்வநாதன், ஸ்ரீதேவியின் தந்தையாக ஒரு விரல் கிருஷ்ணாராவ் உட்பட பலர் நடித்திருந்தனர். பிரதாப், அவர் சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருந்தார்.

வாய்ப்பேச முடியாத ஓவியக் கலைஞராக நடித்திருக்கும் பரணி, கே.பாலசந்தர் படங்களின் டிசைனர். அவர் நிஜமான ஓவியர் என்பதால் அந்த கேரக்டரில் அவரையே நடிக்க வைத்தார்.

நடிகர் திலீப், இந்தப் படத்தில்தான் அறிமுகமானார். இதற்குப் பிறகு பல படங்களில் அவர் ஹீரோக்களுக்கு நண்பராகவே நடித்தார்.‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த எஸ்.வி.சேகருக்கு இதில், கமலின் நண்பராகப் படம் முழுவதும் வருகிற கேரக்டர். படத்தின் டைட்டிலில் அறிமுகம் திலீப்- சேகர்- பரணி என்றே போடுவார்கள்.

தன்னுடன் சண்டைப் போட்டுவிட்டு டெல்லிக்குப் போன மகனை, சலூன் கடையில் வேலை பார்ப்பவனாகக் கண்டதும்அதிர்ச்சியாவார் பூர்ணம் விஸ்வநாதன். அப்போது கமல் வசனம் பேசிக்கொண்டிருக்க, ஏதும் பேசாமல் முகத்திலே உணர்ச்சிகளைக் கொட்டியிருப்பார் பூர்ணம்.

இந்தப் படத்தில், வலி நிறைந்தகதையை நகைச்சுவையாகவும் நையாண்டியாகவும் தனது ஸ்டைலில் சொல்லியிருப்பார் பாலசந்தர். வசனங்கள் ஒவ்வொன்றிலும் அழுத்தம். சில இடங்களின் பாரதியின் கவிதைகளேகாட்சியின் ‘எமோஷனை’ பூர்த்தி செய்யும்.

கமல் ஒரு கோபக்கார இளைஞனை கண்முன் நிறுத்தியிருப்பார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்குப் பிறகுதான் ‘நெபோடிசம்’என்ற வார்த்தை அதிகம் பேசப்பட்டது. ஆனால், அப்போதே, இந்தப் படத்தில் வரும் இன்டர்வியூ காட்சியில் கோபமாகத் தனது சர்டிபிகேட்டுகளை கமல் கிழித்தெறியும்போது, ‘நெபோடிசம் டவுண் டவுண்’ என்ற வார்த்தையை அவர் மூலமாகப் பயன்படுத்தி இருப்பார் கே.பி. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாரதியாரின் நல்லதோர் வீணை செய்தே, தீர்த்த கரையினிலே பாடல்கள் வரவேற்பைப்பெற்றன. சிப்பி இருக்குது முத்து இருக்குது… இப்போதுவரை பலரசிகர்களின் ஃபேவரைட். ரங்கா ரங்கையா பாடலும் ஹிட்.

இந்தப் படத்தை இந்தியில் கமல்ஹாசன், அனிதா ராஜ் நடிப்பில் ‘ஜரா சீ ஜிந்தகி’ என்ற பெயரில் இயக்கி இருந்தார் பாலசந்தர். தெலுங்கில் ‘ஆகலி ராஜ்யம்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது.

தீபாவளிக்கு இந்தப் படம் வெளியான நாளில் பாரதிராஜாவின் ‘நிழல்கள்’ படமும் வெளியாகி இருந்தது. 2 படங்களும் வேலையில்லாதிண்டாட்டத்தைத்தான் பேசின. 1980-ம் ஆண்டில் இதே தேதியில் வெளியானது வறுமையின் நிறம் சிவப்பு. 43 வருடமானாலும் இன்றைய காலத்துக்கும் தேவையான விஷயத்தையே அந்தப் படம் பேசியிருக்கிறது

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours