`எதிர்நீச்சல்’ சீரியலுக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்தத் தொடர் மக்களிடையே வெகுவாகப் பேசப்படும் ஒன்று. ரசிகர்கள் கொடுத்த வரவேற்பினால்தான் வாரத்தில் எல்லா நாள்களிலும் அந்தத் தொடர் ஒளிபரப்பாக ஆரம்பித்தது. இயக்குநர் திருச்செல்வத்தின் இயக்கமும், ஶ்ரீவித்யாவின் எழுத்தும் தொடருக்கு ஒரு பலம் என்றால் இன்னொரு பலம் அந்தத் தொடரின் நடிகர்கள்!
ஆதி குணசேகரன் என்கிற ஏ.ஜி.எஸ் எனும் ஒற்றை கதாபாத்திரம்தான் இந்தத் தொடரின் மையப்புள்ளி. வில்லனாகச் சித்திரிக்கப்பட்ட இந்தக் கதாபாத்திரத்தை மக்கள் கொண்டாடியதுதான் வியப்பின் உச்சம். மாரிமுத்து அந்தக் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு உயிர் கொடுத்திருந்தார். உண்மையில் அந்தக் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவில்லை… வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
கம்பீரமான உடல்மொழி, கர்ஜனை குரல் அவரது கூடுதல் பலம். மாரிமுத்துவின் மறைவுக்குப் பிறகு ‘எதிர்நீச்சல்’ தொடர் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தொடரில் அவருடன் நடித்திருந்தவர்களும் அவருடைய இடத்தை மிஸ் செய்யாமல் இல்லை. அவருக்குப் பதிலாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதே மிகப்பெரிய கேள்வியாய் சமூகவலைதள பக்கங்களிலிருந்தது.
ஒருவழியாக ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் வேல ராமமூர்த்தி ஒப்பந்தமானார். அவர் நடிக்க வந்ததும் சட்டென அவரை ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும், அவர் தனது நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்யத் தொடங்கினார். சினிமாவில் அவர் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் தொடர்ந்து எல்லா நாள்களும் சீரியலுக்கு தேதி ஒதுக்க முடியாது. அவர் பாரிஸிற்கு ஷூட்டிங்கிற்காகச் சென்றதால் அதற்கு மேட்ச் செய்வதற்காகக் கதை ஓட்டத்தையே மாற்றினார்கள்.
அதுவரை சாந்தமாகக் காட்டப்பட்ட பிற கதாபாத்திரங்களும் ஆதி குணசேகரன் பாத்திரம் போலவே ஆக்ரோஷமாக மாற ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் ‘எதிர்நீச்சல்’ தொடரின் ரசிகர்களே அந்தத் தொடரை வெளிப்படையாக விமர்சிக்கவும் ட்ரோல் செய்யவும் தொடங்கினார்கள். பலரால் பாராட்டப்பட்ட அந்தத் தொடர் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
‘இயக்குநர் இன்னமும் கவனம் செலுத்தி மீண்டும் கதை ஓட்டத்தை வலுப்படுத்த வேண்டும். டிஆர்பி வரிசையில் முதல் இடத்தில் இல்லாவிட்டாலும் தனக்கென ஓர் இடத்தை ‘எதிர்நீச்சல்’ தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதேபோல, படிப்படியாக மீண்டும் அதே இடத்திற்கு வரவேண்டும்’ என்றும் ‘எதிர்நீச்சல்’ ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
கதையின் போக்கு மாறி மீண்டும் தனக்கென ஓர் இடத்தை இறுகப் பற்றிக் கொள்ளுமா `எதிர்நீச்சல்’? உங்கள் கருத்து என்ன? கமென்ட்டில் சொல்லுங்கள்!
+ There are no comments
Add yours