சமீபகாலங்களாக இவரது மோட்டிவேசன் பேச்சால் உணர்ச்சிவசப்பட்டு காவலர்கள் முதல் மாணவர்கள் வரை கண்ணீர்விட்டு கதறி அழும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஒரு தரப்பினர் இதைப் பாராட்டினாலும் மற்றொரு தரப்பினர் அவரைக் கடுமையாக விமர்சித்தே வருகின்றனர்.
`எதுவும் அறியாத குழந்தைகளைத் தேவையில்லாத குற்றவுணர்ச்சிக்குத் தள்ளுகிறார். இதனால் அவர்கள் அதீத மனஅழுத்தத்துக்குள்ளாகின்றனர். இது முற்றிலும் தவறான போக்கு. இதன் மூலம் அவர் சாதிக்க விரும்புவது என்ன? பெற்றோர்களை, ஆசிரியர்களை மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் குழந்தைகளை இது மாதிரி குற்றவுணர்ச்சியில் தள்ளித்தான் அதைச் செய்ய வேண்டுமா?” என்பதே அவர்களின் கேள்வியாக இருக்கிறது. இதுகுறித்து நடிகர் தாமுவிடமே கேட்டோம்…
“கடந்த 12 வருஷமா மாணவர்களைச் சந்தித்து தன்னம்பிக்கை ஊட்டிக்கிட்டு வர்றேன். இதுவரைக்கும் என் நிகழ்ச்சியை யாருமே விமர்சித்தது கிடையாது. பள்ளிகளுக்கு நான் வெறும் மோட்டிவேட்டரா மட்டும் போகல. ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான தூதுவரா போயிட்டிருக்கேன். ஆசிரியர்கள், பெற்றோர்களின் அற்புதத்தை, மகத்துவத்தை மாணவர்களுக்குப் புரிய வைக்கிறேன். பெற்றோர் பிள்ளைங்களுக்கு நல்லதுதான் நினைப்பாங்க, நல்லதுதான் சொல்வாங்க. ஆனா, பிள்ளைங்க பெத்தவங்கப் பேச்சை கேக்கிறதில்லை. முன்னேற்றும் ஆசிரியர்களையும் உதாசீனப்படுத்திடுறாங்க.
இதெல்லாம், தப்புன்னு நான் மாணவர்களை உணர வைக்கிறேன். அவங்களும் உணர்ந்து புதுசா பிறக்குறாங்க. குழந்தைங்க பிறக்கும்போது, அழத்தானே செய்வாங்க? அப்படித்தான், மாணவர்களும் தங்கள் தவற்றை உணர்ந்து புதுசா பிறக்கும்போது அழுகறாங்க.
இன்னும் சொல்லப்போனா, பெற்றோர் இல்லாம நான் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக்கிறதில்ல. ஆசிரியர்களும் பெற்றோரும் இருந்தா மட்டும்தான் பேசுறேன். ‘உங்கப் பேச்சைக் கேட்டதுலருந்து, என் பிள்ளைங்க நல்லா படிக்கிறாங்க. ஆளே மாறிட்டாங்க’ன்னு பல பெற்றோர்கள் மனநிறைவா சொல்றாங்க.
+ There are no comments
Add yours