சென்னை: சஹாரா ஏஷியா புரொடக் ஷன்ஸ் சார்பில் உமா பாலு கதை எழுதித் தயாரித்துள்ள படம், ‘எ ஹோம் அவே ஃப்ரம் ஹோம்’. திரைக்கதை, வசனம் எழுதி வெங்கடேஷ் குமார் ஜி இயக்கியுள்ளார். பிரபு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு எழில் துரை இசை அமைத்துள்ளார். இதில், பிரெஞ்சு நடிகை மனிஷா டெய்ட், அனீஷ், நிழல்கள் ரவி, ஸ்ரீரஞ்சனி உட்பட பலர் நடித்துள்ளனர். படம்பற்றி இயக்குநர் வெங்கடேஷ் குமார் ஜி கூறியதாவது:
தயாரிப்பாளர் உமா பாலு ஆசிய அளவில் நடந்த சிறுகதைப் போட்டிக்குக் கதை ஒன்றை அனுப்பினார். உண்மைச் சம்பவம் ஒன்றின் அடிப்படையில் எழுதப்பட்ட அந்தக் கதைக்கு விருது கிடைத்தது. அதைத் திரைப்படம் ஆக்கலாம் என்று நினைத்தார். திரைக்கதை, வசனம் எழுதி நான் இயக்கி இருக்கிறேன். ஜெர்மனி பல்கலைக் கழகத்தில் இருந்து தென்னிந்தியப் பழங்குடி கிராமம் ஒன்றுக்கு மாணவி ஒருவர் ஆராய்ச்சிக்காக வருகிறார். அங்கு பல மனிதர்களைச் சந்திக்கிறார். அப்போது அவர் வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதுதான் கதை. இந்தப் படத்தில் வயநாட்டில் இருக்கிற பழங்குடியினரை நடிக்க வைத்துள்ளோம். தாய்மையைச் சொல்லும் படமான இது, பல்வேறு விழாக்களில் விருதுகளைப் பெற்றுள்ளது. இதில் ஜெர்மனி பெண்ணாக நடித்துள்ள மனிஷா டெய்ட், ஏற்கெனவே ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் நடித்துள்ளார். படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இவ்வாறு வெங்கடேஷ் குமார் ஜி கூறினார்.
+ There are no comments
Add yours