இந்த சீசனின் முதல் குறும்படம் ஒளிப்பரப்பானது. அப்படியொன்றும் அது சுரத்தாக இல்லை. விஷ்ணுவை யார் தள்ளி விட்டார்கள் என்பதெல்லாம் ஒரு மேட்டரா?
அனைத்து சீசன்களில் வந்த குறும்படங்களையும் நினைவுகூரும்போது, இதுவரை வெளியானதில் ‘ஜூலி – ஓவியா’ சர்ச்சைதான் டாப். அப்படியொரு நெருப்பு அதில் இருந்தது. `ஜூலி.. அது manipulation இல்ல.. hallucination..’ என்று கமல் அதிரடியாகச் சொன்னதெல்லாம் புல்லரிப்புத் தருணம்.
பூர்ணிமா இரண்டாவது முறையாக கேப்டன் ஆகியிருக்கிறார். இக்கட்டான நிலைமைகளைக் கூட ஒரு மாதிரியாக சமாளித்த ‘கூல்’ கேப்டன். ஆனால் ஒருவேளை ஜோவிகா கேப்டனாகியிருந்தால் அவருடைய தலைமை எப்படியிருக்கும் என்பதைப் பார்த்திருக்கலாம்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
ஃபிரிட்ஜ்ஜூக்குள் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கீரிம் போல கூலாக வந்து நின்றார் கமல். ‘உள்ள டீமா இருக்காங்க. நட்புணர்ச்சி பீறிட்டு வருது.. அனிருத் போட்டது மாதிரி ஏதோ டியூன் தப்பா இருக்கு.. விசாரிப்போம்’ என்றபடி வெள்ளிக்கிழமை நிகழ்வுகளிடம் சென்றார்.
சாப்பிட்ட தட்டைக்கூட கழுவாமல் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தது ஒரு கூட்டணி. இந்த சதிக்குழுவின் லீடர் மாயா. “மொக்கையா ஆடறவங்கள்லாம் நாமினேஷன்ல இருக்கணும். சுவாரசியமா ஆடறவங்க போயிட்டா போர் அடிக்கும்” என்று அவர் சொன்னது உண்மைதான். ‘பெண்கள் அனைவரும் சின்ன வீட்டுல ஒண்ணா நின்னு பசங்களை அடிச்சுத் தூக்கலாம்’ என்று அதிரடியாக முரட்டு பெண்ணியம் பேசிக் கொண்டிருந்தார் பூர்ணிமா.
குடைக்குள் மழையாக ஐஷூவிடம் தீவிரமாக ரொமான்ஸ் ரகசியம் பேசிக் கொண்டிருந்தார் நிக்சன். ‘நிக்சன். உங்க மைக்கை ஒழுங்கா மாட்டுங்க’ என்று பிக் பாஸ் மறுபடியும் மறுபடியும் எச்சரிக்க ‘இந்தாளு வேற இம்சைப்பா’ என்று எரிச்சலானார். ‘கண்ணாடி போட்ட அங்கிள் வீட்டு கதவு மேல் பந்து பட்டா ஃபோர்’ என்கிற ஸ்ட்ரீட் கிரிக்கெட் விதிகளுடன் ஒரு ஆட்டம் பிறகு நடந்தது. ஒரு ஓவர் விளையாடுவதற்கு ‘உலக கோப்பை’ ரேஞ்சுக்கு ஓவர் அலப்பறை தந்தார்கள்.
ஐஷூவிடம் ஐஸாக மாறி உருகிய நிக்சன்
பாவமன்னிப்புக் கூண்டு போல கண்ணாடித் தடுப்பிற்கு இருபுறமும் காதை வைத்து மீண்டும் ரகசியம் பேச ஆரம்பித்தார்கள், நிக்சனும் ஐஷூவும். கிளுகிளுப்பு பொங்கி வழிந்த அவர்களின் உடல்மொழியைப் பார்த்தால் ‘பிரெஞ்சு படக்காட்சி’ மாதிரி ஏதாவது வந்து விடுமோ என்று நமக்குத்தான் கலவரமாக இருந்தது. விட்டால் நிக்சன் கண்ணாடியையே உடைத்து இந்தப் பக்கம் வந்து விடுவார் போலிருந்தது. பிக் பாஸ் வீட்டில் ஏற்கெனவே கண்ணாடி உடைத்த அனுபவம் வேறு அவருக்கு இருக்கிறது. அப்படி முகத்தை ஒட்ட வைத்து முரட்டு ரகசியம் பேசிக் கொண்டிருந்தார். ‘வசனமாடா முக்கியம்.. படத்தைப் பாருங்கடா’ என்பது மாதிரி சும்மா இல்லாமல் ‘நிக்சன்.. மைக்கை ஒழுங்கா மாட்டுங்க’ என்று தொடர்ந்து இம்சித்துக் கொண்டிருந்தார் பிக் பாஸ்.
`சீனியர்.. நான் சொல்றேன். உங்களுக்குப் பிடிச்சத பண்ணுங்க.. ஊரு உலகம் எதையாவது பேசிட்டு போகட்டும்’ என்று அடுத்ததாக பாவமன்னிப்புக் கூண்டில் நின்று நிக்சனுக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார் ரவீனா. ஆனால் போகிற வேகத்தைப் பார்த்தால் மணி – ரவீனா கூட்டணியை, நிக்சன் – ஐஷூ கூட்டணி அநாயசமாக ஓவர்டேக் செய்து விடுவார்கள் போலிருக்கிறது.
கண்களைப் பார்த்தே ‘காதல் ஜோசியம்’ சொல்வதில் மாயா திறமைசாலியாக இருக்கிறார். ‘உன்னைப் பார்க்கும் போதெல்லாம் விஷ்ணு கண்ல பல்ப் எரியுது’ என்று முன்பு பூர்ணிமாவிடம் சொன்னார் மாயா. இப்போதோ “உன் கண்ல அதைப் பார்த்துட்டேன்.. ஆனா அவ கண்ல அது இல்ல” என்று நிக்சனின் ரொமான்ஸ் நெருப்பு மீது ஐஸ் வாட்டரை ஊற்றிக் கொண்டிருந்தார்.
விஷ்ணுவைத் தள்ளி விட்டது யாரு? – இந்த சீசனின் முதல் குறும்படம்
அகம் டிவி. உள்ளே வந்த கமல், முதலில் செல்போன் சார்ஜிங் டாஸ்க் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். ‘யார், யாருக்காக விளையாடினீங்க’ என்று ஆரம்பித்தவர் `விஷ்ணுவைத் தள்ளிவிட்டது யாரு?’ என்கிற விசாரணைக்கு அடுத்ததாக நகர்ந்தார். ‘இன்னிக்கு குறும்படம் இருக்கு’ என்பதை வித விதமாக கமல் உணர்த்தினாலும் ஒன்றும் ஆர்வமாக இல்லை.
இரண்டு சிம் கார்டுகளில் ஒரே சமயத்தில் ரீசார்ஜ் செய்ய முயன்ற சுரேஷைப் பற்றி விசாரிக்கும் போது ‘அய்யா. எனக்கு ஒண்ணும் புரியலைங்கய்யா’ என்று அவர் வாக்குமூலம் தர ‘நெஜம்மாவா?’ என்று குழந்தையை விசாரிக்கும் மாடுலேஷனில் கமல் கேட்டது ஒரு நல்ல குறும்பு. பிரதீப் பேச எழுந்ததும் பார்வையாளர்களிடமிருந்து பலத்த கைத்தட்டல் எழுந்தது.
‘ஹே .ஹிஹி.. என்று தனது பிராண்ட் சிரிப்பை உதிர்த்த பிரதீப். ‘அப்படித்தான் நல்லாத் தட்டுங்க’ என்கிற மாதிரி தலையசைத்தார். இந்தச் சமயத்தில், வில்லங்கம் பிடித்த காமிரா சரியாக விசித்ராவின் முகத்திற்கு ஜூம் சென்றது. ‘இந்த லூஸூப் பயலுக்கு இவங்க ஏன் இப்படி கைத்தட்டறாங்க’ என்பதை அவரது எரிச்சலான முகம் சொல்லாமல் சொல்லியது. செல்போன் டாஸ்க்கில் வெற்றி பெற்ற ஜோவிகாவிடம் ‘நீங்க SAVED’ என்று சொல்லி பிரேக்கில் சென்றார் கமல்.
மீண்டும் திரும்பி வந்த கமல் ‘விஷ்ணுவைத் தள்ளிவிட்டது யாரு?’ என்று அதே கேள்வியை மீண்டும் ஆரம்பிக்க ‘அய்யா.. சாமி. அந்தக் குறும்படத்தை சீக்கிரம் போட்டுருங்களேன்’ என்பது மாதிரிதான் இருந்தது. ஆனால் ஏதோ பெரிய சஸ்பென்ஸ் மாதிரி இதை விடாமல் இழுத்த கமல், ‘புல்தடுக்கி பயில்வானா அவர் நிச்சயம் இருக்க மாட்டார்’ என்று விஷ்ணுவை மறைமுகமாக கிண்டலடித்து விட்டு ஒருவழியாக படத்தைத் திரையிட்டார்.
ஐஷூவின் கால் தடுக்கி விஷ்ணு விழுவது படத்தின் மூலம் தெளிவாகத் தெரிந்தது. ‘ஒருவேளை என் கால் பட்டிருக்கலாம்’ என்று ஐஷூ அப்போதே சொல்லவில்லை. கள்ள மௌனத்துடன் இருந்து விட்டார்.
ஒருவேளை விளையாட்டு மும்முரத்தில் அவருக்கே அது தெரியாமல் போனதோ, என்னமோ.. ஆக. விஷ்ணு ஆவேசமாக சண்டையிட்டது, திட்டியது அத்தனையும் வீண். அக்ஷயா குற்றவாளியில்லை என்பது இப்போது தெளிவாகி விட்டது.
குறும்படத்தில் என்ன வெளிப்படுமோ என்கிற பதட்டத்தில் இருந்த அக்ஷயா, இப்போது தந்த விளக்கத்தில் பயங்கர குழப்பம். ‘சத்தியம் பண்ணீங்களா?’ என்று கமல் கேட்க “நான் அதைப் பண்ணல.. ஆனா சத்தியம் பண்ண தயாரா இருந்தேன்’ என்று குழப்பி “ஆமாம்.. என் கை பட்ட மாதிரியும் தெரியுது” என்று தானே சென்று ஜீப்பில் ஏற முயன்றார்.
குறும்படத்தில் இன்னொரு வில்லங்கமான சாட்சியமும் பதிவாகி இருந்தது. எல்லோரும் ஒட ஆரம்பிக்கும் போது அக்ஷயாவை விஷ்ணு தள்ளி ஒதுக்கி விடுவது தெளிவாக இருந்தது. இதைப் பற்றி மறைமுகமாக குறிப்பிட்ட கமல் ‘மறுபடியும் வீடியோவைப் பார்க்கலாமா. ஆனா போரடிச்சுரும்’ என்று விஷ்ணுவிற்கு மறைமுக வார்னிங் தந்தார். ஆக அக்ஷயாவைத் தள்ளி விட்டு மூர்க்கமாக முன்னேற முயன்ற விஷ்ணுவின் கால்களை ஐஷூவின் கால்கள் தன்னிச்சையாக தடுத்து நிறுத்தியது. எனவே இந்தக் குறும்படத்தின் நீதி: `வினை விதைத்தவன், வினை அறுப்பான்’. “நீ எப்படி சார்ஜிங்ல வெச்சுடறேன்னு பார்த்துடறேன்’ என்று சவால் விட்டார் விஷ்ணு. ஆனால் போட்டியில் மட்டுமல்ல, இந்த நீதி நாடகத்திலும் வென்றது அக்ஷயாதான்.
சில முன்தீர்மான காரணங்களால் ஒருவரை நமக்குப் பிடிக்காமல் போய் விடும். எனவே நமக்கு எதிராக நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் அவர்தான் காரணம் என்று நாமாக நினைத்துக் கொள்வோம். வீம்பாக சண்டைக்குச் செல்வோம். அநியாயமாக வெறுப்பைக் கொட்டுவோம். விஷ்ணுவிற்கு ஆரம்பத்திலிருந்தே அக்ஷயாவை ஏனோ பிடிக்கவில்லை. ‘பிக்னிக் வந்தவங்க மாதிரி ஜாலியா இருக்காங்க’ என்று புகார் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த வெறுப்புதான் இப்படி ஆத்திரமாக மாதிரி அவருக்கு எதிரான ‘குறும்பட நீதி’யாக வந்து சேர்ந்து விட்டது.
‘இதெல்லாம் அழுகுணி ஆட்டம். அடிக்க கையை ஓங்கறீங்க. கையை முறுக்கறீங்க. இதெல்லாம் ஏத்துக் கொள்ள முடியாதது. அப்புறமா ஸாரி கேட்டீங்க. அது ஒண்ணுதான் உங்களுக்கு இப்போ ஜாமீன் தர வைக்குது. உங்களுக்கு ஸ்ட்ரைக் கார்டு தரலைன்னாலும் தந்துட்டதாகவே வெச்சுக்கலாம். இனிமே இந்த வீட்டுல இப்படி நடக்கக்கூடாது’ என்று விஷ்ணுவை காட்டமாக எச்சரித்தார் கமல். ‘ஸாரி ஸார்.’ என்று அப்படியே பம்மி அமர்ந்தார் விஷ்ணு. அக்ஷயாவிடம் உடனே அவர் மன்னிப்பு கேட்டிருக்கலாம். அடுத்த பிரேக்கில் அதையும் கமல்தான் சொல்லித் தர வேண்டியிருந்தது.
நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வந்த சிலர்
பிரேக் முடிந்து திரும்பிய கமல், அடுத்ததாக ‘கை ஜோசிய டாஸ்க்’ ஆரம்பித்தார். ‘வீட்டுக்குள்ள வந்தப்ப உங்களுக்கு ஒருத்தர் மேல நம்பிக்கை வந்திருக்கலாம். ஆனா அப்புறம் அது மாறி இன்னொருத்தர் மேல ‘புதிய நம்பிக்கை’ பிறந்திருக்கலாம். அது யாருன்னு சொல்லுங்க’ என்று இந்த ஆட்டத்தின் அடிப்படையை விளக்க, முதலில் எழுந்த யுகேந்திரன், பிரதீப்பின் பெயரைச் சொல்ல பார்வையாளர்களின் கூட்டத்தில் பலத்த கைத்தட்டல். ‘ஹெஹி..ஹி.’ என்று அந்த நம்பிக்கையைப் பெற்றுக் கொண்டார் பிரதீப். (தெய்வீகச் சிரிப்பய்யா உமது!).
அக்ஷயா தனக்கு நம்பிக்கை தந்த போது கண்கலங்கினார் சுரேஷ். ஆனால் இவர் யாருக்கும் தரவில்லை. ‘யார்மேலயும் எனக்கு நம்பிக்கையில்ல சார்.. உங்களுக்குத் தந்துடட்டுமா.. இந்த வீட்ல இருக்க அஞ்சறிவு தேவை. ஆனா பத்தறிவு தேவைப்படுது’ என்று வாய்க்கு வந்தபடி சுரேஷ் உளறிக் கொட்ட ‘ஒருத்தருக்கு ஆறறிவு இருக்கணும்ல?’ என்று குறும்பாக இடைமறித்தார் கமல். `இங்க யாரையும் நம்ப முடியலை சார்.. காலை வாரிடறாங்க’ என்று தன்னை வெள்ளந்தியாகச் சித்தரித்துக் கொண்டு ‘பகுத்தறிவுடன்’ சுரேஷ் சொன்ன போது ‘அப்ப ஏன் ரெண்டு கார்டு எடுத்தே?!’ என்று சரியாக மடக்கினார் நிக்சன். ‘தன்னம்பிக்கையின் அடையாளமா நீங்களே வெச்சுக்கங்க’ என்று கமலும் சுரேஷை சற்று கூடுதலாக கலாட்டா செய்து கொண்டிருந்தார்.
வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்று யோசித்து கோணங்கித்தனமாக செய்தால் அது வினையாக வந்து முடியும். சுரேஷ் செய்த அதே கொனஷ்டையை பிறகு வந்த சிலரும் செய்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்கள். ‘என்னை ஆட்டத்துலயே சேர்த்துக்க மாட்றாங்க சார்’ என்று புகார் சொன்னார் விசித்ரா. ‘வீட்டுக்குள்ள கூடி கூடி பேசறீங்க.. ஆனா யார் மேலயும் நம்பிக்கையில்லைன்னு இப்ப சொல்றீங்க. நீங்க பொய் சொல்றதை மக்கள் ஈஸியா கண்டுபிடிச்சுடுவாங்க.. “ என்று எச்சரித்த கமல், இந்த டாஸ்க்கில் ‘அதிகமான நம்பிக்கையைப்’ பெற்ற மாயா, காப்பாற்றப்பட்ட தகவலைத் தெரிவித்தார்.
‘யார் மீதும் நம்பிக்கையில்லை’ என்று டாஸ்க்கின் போது வாயை விட்டு விட்ட நிக்சன், இப்போது ஐஷூவின் முன்னால் குற்றவுணர்வுடன் அமர்ந்திருந்தார். ‘ஏதோவொரு வேகத்துல சுரேஷ்ஜிக்கு கொடுத்துட்டேன். அது தப்போன்னு இப்ப தோணுது. நீ வாங்கிக்கறியா?’ என்று ஏதோ அளவு சரியில்லாத சட்டையை திருப்பிக் கொடுப்பது போல் விக்ரமிற்கு மாற்ற முயன்றார் அக்ஷயா.
ரேங்க்கிங் டாஸ்க் – பிரதீப்பிற்கு கமல் உபதேசம்
பிரேக் முடிந்து திரும்பி வந்த கமல் ‘ரேங்க்கிங் டாஸ்க்கை புரிஞ்சுக்கிட்டுதான் விளையாடினீங்களா.. பிரதீப்பும் மாயாவும்தான் முதல் இடத்துக்கு போட்டி போட்டாங்க. ரொம்ப நேரம் கழிச்சுதான் ஜோவிகா வந்தாங்க. மத்தவங்கள்லாம் ஆயுதபூஜைக்கு பொரி பாக்கெட் வாங்க வந்த மாதிரி தூரமா நின்னுட்டிங்களே..ஏன்?’ என்று அடுத்த விசாரணையைத் தொடங்கினார். இந்த விசாரணை நிச்சயம் நடக்கும் என்று தெரியும். கடந்த சீசன்களிலும் இப்படித்தான் நடந்தது.
“யாராவது குறுக்க வந்தா. பச்ச பச்சயா திட்டுவேன்னு பிரதீப் முன்னாடியே வார்னிங் தந்தான் சார்” என்று பயந்தது போன்ற பாவனையுடன் சுரேஷ் சொல்ல `ஹெஹிஹி’ என்று அதை ரசித்து அனுபவித்து சிரித்தார் பிரதீப். ‘நானும் ஏதோதோ சொல்லிப் பார்த்தேன். ஆனா பிரதீப் ஸ்மார்ட். ஐம்பது லட்ச ரூபா டீலை வெச்சுதான் அவனை மடக்க முடிஞ்சது’ என்றார் மாயா.
‘அய்யா.. நான் ஒரு தப்பு பண்ணிட்டேங்கய்யா.. அதனாலதான் முதல் இடத்திற்கு போட்டி போடலை’ என்று முன்ஜாமீன் வாங்கினார் விஷ்ணு. `சரி.. நீங்களா சொன்னது ஓகே.. கோபத்தைக் குறைங்க. நீங்க SAVED’ என்று சொல்லி விஷ்ணுவிற்கு இன்ப அதிர்ச்சி தந்தார் கமல்.
‘இதுல ஏழை பணக்காரன்ன்றதுலாம் எப்படி வந்தது?’ என்று அடுத்ததாக பிரதீப்பிடம் நகர்ந்தார் கமல். “லாஜிக்கலா நெறய சொன்னேன் சார்.. இங்க செல்லுபடியாகல..” என்று பிரதீப் சொல்ல “உண்மையை தொடர்ந்து செல்லுபடியாகற மாதிரி சொல்லணும்.. நல்லா விளையாடறீங்க. ஆனா ‘டபக்’குன்னு எதையாவது அவசரப்பட்டு பேசிடறீங்க.. அப்புறம் தனக்குத்தானே தண்டனையும் கொடுத்துக்கறீங்க.. ஜோவிகா சொன்னது கடந்து வந்த பாதை. இப்போ நிறைய செருப்பு, டிரஸ் இருந்தா என்ன.. அந்தப் புரிதல் உங்களுக்கு இல்ல” என்று பிரதீப்பிற்கு கமல் உபதேசம் தந்ததும், ‘கரெக்ட்டா சொன்னீங்க சார்’ என்பது போல் அதை ஆமோதித்து தலையாட்டினார் ஜோவிகா.
போட்டியாளர்கள் கோபத்தில் உதிர்த்த பொன்மொழிகள்
‘ஸ்டோர் ரூம்ல சில பொருட்கள் இருக்கு. எடுத்துட்டு வாங்க’ என்று அடுத்த பகுதிக்கு நகர்ந்தார் கமல். போட்டியாளர்கள் வீட்டில் உதிர்த்த சில பொன்மொழிகள் அச்சிடப்பட்டு போர்டுகளில் இருந்தன. ‘இதற்கெல்லாம் விளக்கம் தேவை. சொல்லுங்க’ என்றார். ‘காசுதான் முக்கியம். டைட்டில் தேவையில்லை’ என்கிற நிலையில் இருக்கிற பிரதீப்பிடம் “ஒரு கலைஞனுக்கு மேடைதான் பிரதானம். பணம் மட்டுமே பிரதானம் இல்லை” என்று கமல் அறிவுறுத்தியது நன்று. ‘டைட்டில் ஜெயிக்கணும்ன்னு ஒரு குட்டிப்பையன் வீடியோல சொன்னான். கட்டாயம் ஜெயிப்பேன் சார்’ என்கிற உறுதிமொழியுடன் அதை ஏற்றுக்கொண்டார் பிரதீப்.
தான் உதிர்த்த பொன்மொழியை தானே ஜோவிகா வாசித்த போது ‘தமிழ். ஆங்கிலம்.. ரெண்டுமே நல்லாத்தானே வாசிக்கறீங்க?’ என்று கமல் சர்காஸமாக சொன்னபோது, அதே வில்லங்கம் பிடித்த காமிரா, திரும்பவும் விசித்ராவிற்கு ஜூம் வைத்து விளையாடியது. ஏதோ தான் ஒழுங்காக விளையாடிக் கொண்டிருப்பது போலவும், மற்றவர்கள்தான் சொதப்புகிறார்கள் என்பது போலவுமான தொனியில் ‘பிக் பாஸ்.. மன்னிச்சிருங்க’ என்று வார்த்தைகளை விட்ட சுரேஷிடம் ‘மொதல்ல நீங்க ஒழுங்கா விளையாடினீங்களா. யார் யாருல்லாம் விளையாடலை.. சொல்லுங்க’ என்று வம்புக்கு இழுத்தார் கமல். ‘வெளியே சொன்னா நாமினேட் பண்ணிடுவாங்க சார்’.. என்று தலையைச் சொறிந்தார் சுரேஷ்.
‘உங்க ஓட்டும் வேணாம். ஒரு ————–ம் வேணாம்’ என்று கோபத்தில் வார்த்தைகளை விட்ட நிக்சனையும் காட்டமாக ஒரு பிடி பிடித்தார் கமல். ‘மக்கள் செருப்பு கொண்டு அடிப்பாங்க’ என்று பிரதீப்பை வசைந்த விஷ்ணுவிடம் ‘மக்கள் ஓட்டாலதான் அடிப்பாங்க. வன்முறைல அவங்களுக்கு நம்பிக்கையில்ல’ என்றார். ‘எத்தனை முறை வேணுமின்னாலும் ஓட்டு போடலாம்’ என்பது போல் விக்ரம் விட்ட வார்த்தையை ‘அது கள்ள ஓட்டுல்ல.. அப்படியெல்லாம் பழக்கப்படுத்தாதீங்க.. என் கவலை எனக்கு’ என்று அரசியல் நிலவரத்தோடு இணைத்து கமல் செய்தது சுவாரசியமான குறும்பு. கிளம்பும் போது பிரதீப் SAVED’ என்ற தகவலைச் சொன்ன கமல், ‘நாளைக்கு அஞ்சு பேர் வைல்டு கார்டுல வரப்போறாங்க’ என்பதை பார்வையாளர்களுக்கு மட்டும் சொல்லி விடை பெற்றார்.
மீண்டும் பூர்ணிமா கேப்டன் – கலங்கிய ஜோவிகா
அடுத்த வார கேப்டனுக்கான தேர்வு. இந்த வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டவர்களாக தேர்வு செய்யப்பட்ட பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகா ஆகிய மூவருக்கிடையே நடந்த கேப்டன்ஸி டாஸ்க்கில் பூர்ணிமா வெற்றி. இந்த டாஸ்க்கில் ஆண்களுக்கு இணையாகப் போராடி பூர்ணிமாவிற்கு ஆதரவு தந்து உதவினார் மாயா. ‘ரொம்ப ஆசைப்பட்டு இறங்கும் போதெல்லாம் ஒரு விஷயம் எனக்கு கிடைக்க மாட்டேங்குது.. எனக்கு என் மேலயே கோபம் வருது’ என்று தோல்வி காரணமாக கண்கலங்கிய ஜோவிகாவை கட்டியணைத்து ஆறுதல் சொன்னார் விசித்ரா.
கடலை மிட்டாயை பங்கு போடுவது போல ‘வேணுமின்னா.. நீ கேப்டனா ஆயிடு.. பூர்ணிமாவிற்கு வேண்டாமாம்’ என்று மாயா ஒரு ஆஃபர் தர, ‘இல்ல.. வேண்டாம்.’ என்று மறுத்தார் ஜோவிகா. பிக் பாஸ் என்கிற ஒரு மூத்த ஆசாமி அங்கு இருப்பதையும், மக்கள்தான் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் போட்டியாளர்கள் மறந்து விட்டு தாங்களாகவே ஏதேதோ முடிவு செய்து கொள்வது அபத்தம்.
இந்த வாரம் டபுள் எலிமினேஷனாம். ‘இங்க சந்துரு.. சந்துரு..ன்னு ஒரு மானஸ்தன் இருந்தான். எங்க அவன்?’ என்கிற காமெடி மாதிரி ‘இங்க வினுஷான்னு ஒருத்தர் இருந்தாங்கள்ல?’ என்று கிண்டலடித்தார் கமல்.
எனவே இந்த வாரத்தில் வினுஷாவும் பாட்டுப் பாடுவதைத் தவிர வேறு எதையும் செய்யாத யுகேந்திரனும் வெளியே கிளம்புகிறார்கள். ஐந்து பேர் புதிதாக உள்ளே நுழைகிறார்கள். என்ன நடக்கிறதென்று பார்ப்போம்.
+ There are no comments
Add yours