‘காக்கிநாடா என்னுது.. ரேணிகுண்டா உன்னது’
ரேங்க்கிங் டாஸ்க் துவங்கியது. சொன்னது போலவே முதல் இடத்தில் துண்டு போட்டு இடம் பிடித்தார் பிரதீப். இந்த விளையாட்டைப் பொறுத்தவரை தனக்கான தகுதிகள் என்ன?.. மற்றவரை விட தான் எப்படி தகுதியானவர்?.. என்பதைத்தான் ஒருவர் முன் வைக்க வேண்டும். ஆனால் அதற்குத் தொடர்பே இல்லாமல் ஏழை – பணக்காரன், வர்க்கப் பிரச்சினை, நல்ல விஷயத்திற்கான நன்கொடை என்று பல திசைகளில் அபத்தமாகச் சுழன்றது.
‘காக்கிநாடா என்னுது.. ரேணிகுண்டா உன்னது’ என்கிற மாதிரி பிரதீப்பிடம் டீல் பேச ஆரம்பித்தார் மாயா. ‘பணத்தை நீ எடுத்துக்கோ.. டைட்டிலை நான் எடுத்துக்கறேன்’ என்று பரோட்டாவை இரண்டாகப் பிய்ப்பது போல் அவர் சொல்ல “பேச்சு பேச்சா போயிடும். ஸ்டாம்ப் பேப்பர்ல கையெழுத்து போட்டுக் கொடு” என்று கெத்தாக பேசினார் பிரதீப்.

மாயா அழுத்தமான குரலில் தனது வாக்குறுதியை அளித்ததும், அவருக்கு முதல் இடத்தை அளித்து விட்டு இரண்டாம் இடத்திற்கு பிரதீப் நகர்ந்து சென்றது, ஆச்சரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியும் கூட. ஒருவர் தன்னம்பிக்கையுடன் விளையாடினால் அவரே டைட்டிலையும் வென்று பணத்தையும் வெல்ல முடியுமே?!
‘மாப்ள.. எல்.ஐ.சி.பில்டிங் விலைக்கு வருதாம்.. வாங்கிக்கறியா.. ஒரு ரெண்டு சி அட்வான்ஸ் மட்டும் கொடு’ என்கிற ரேஞ்சுக்கு இவர்கள் தங்களுக்குள் டீல் போட்டுக் கொள்வதைப் பார்த்து எரிச்சலான பிக் பாஸ் “அப்ரண்டீஸ்களா. நீங்க ஜெயிச்சு பணத்தை எடுத்துட்டுப் போறதைப் பத்தியெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். மொதல்ல இந்த கேம்ல நீங்க தொடர்ந்து இருக்கப் போறீங்களான்னே தெரியாது. அதுக்கு நீங்க தகுதியானவங்களான்னுதான் இப்ப பேசணும். அதுதான் இந்த ரேங்க்கிங் டாஸ்க்கோட ஐதீகம்” என்பதை நடுங்கும் குரலி்ல் அழுத்தமாக விளக்கினார்.
+ There are no comments
Add yours