கடந்த சில நாட்களாக சுணக்கமாகப் பயணித்துக் கொண்டிருந்த சீசன், இந்த எமோஷனலான எபிசோடின் மூலம் மீண்டும் உயிர் பெற்றது எனலாம். ஆம், இந்த நாளில் சில பல சுவாரசியமான உணர்ச்சி மோதல்கள், தரமான சம்பவங்கள் நிகழ்ந்தன.
குறிப்பாக மாயாவிற்கும் விசித்ராவிற்கும் இடையே நடந்த மோதலும் அதற்குப் பிறகான கட்டியணைப்பும் ஒரு நல்ல எமோஷனல் டிராமா. மனிதர்கள் எவ்வாறெல்லாம் உண்மையும் புனைவுமாக எதிர்வினையாற்றுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள ஒரு நல்ல சந்தர்ப்பம்.
சொல்ல மறந்து விட்டேனே! பிக் பாஸ் வீட்டில் கூடுதலாக ஒரு ரொமான்ஸ் டிராக் துவங்கியிருக்கிறது. கண்ணைச் சிமிட்டிக் கொண்டே பிக் பாஸிற்கு விசித்ரா ‘லவ் பிரபோஸல்’ செய்த காட்சி கலவரத்தை ஏற்படுத்தியது. இந்நேரம் பிக் பாஸ் உயிர் தப்புவதற்காக அண்டார்ட்டிக்காவிற்கு சென்றிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
‘பேரு வெச்சாலும் வெக்காம போனாலும்’ என்கிற ரகளையான பாடலோடு நாள் 24 விடிந்தது. செல்போன் டாஸ்க்கில் நேற்று அத்தனை சண்டை போட்டு விட்டு ‘சண்டையா.. நாங்க பார்க்கலையே?’ என்கிற ரேஞ்சிற்கு ஒவ்வொருவரும் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் எல்லாம் ரொமான்ஸ் டிராக்கில் பயணித்து ‘கால் கட்டு’ ரேஞ்சிற்கு சென்று கொண்டிருக்க விஷ்ணு மட்டும் கை கட்டோடு பரிதாபமாக அமர்ந்திருந்தார். (சிங்கம் எப்பவும் சிங்கிளாத்தான் இருக்கும். ஆனா இது முரட்டு சிங்கிளா ஆயிடும் போல!).
செல்போன் டாஸ்க்கில் நடந்த குளறுபடிகள் பற்றி ஜலதோஷக் குரலில் மாயாவுடன் பேசிக் கொண்டிருந்தார் ஐஷூ. “சுரேஷ் கையில் ரெண்டு அட்டை இருந்தது. ஒண்ணு விஷ்ணு.. இன்னொன்னு ஜஷூ. விஷ்ணு சுரேஷோட பெஸ்ட் பிரெண்டு. அப்ப ஏன் அதை வெக்காம தடுமாறி காமெடி பண்ணாரு?’ என்று இவர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். ‘நான் அட்டாக் பண்றதாலதான் மணிக்கு கன்டென்ட்டே கிடைக்குது.. சரி. ஆடிட்டு போ’ன்னு விட்டுட்டேன்’ என்று பெருமை பீற்றிக் கொண்டிருந்தார் மாயா.
ஜோவிகாவின் வெற்றிக்கு அக்ஷயா உறுதியாக போராடியதுதான் முக்கியமான காரணம். எனவே ‘ஒரு ஸ்டாரை அக்ஷயாவிற்கு கொடுத்திருக்கலாம்’ என்று பாசமாகப் பரிந்துரை செய்து கொண்டிருந்தார் சுரேஷ். (என்ன திடீர்னு ஆயில் போட்ட சப்பாத்தி மேல அக்கறை வருது?!)
விசித்ராவிற்கும் மாயாவிற்கும் இடையே ஒரு மோதல்
‘தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தை வைத்து இதர போட்டியாளர்களைப் பற்றி ஒரு நல்ல விஷயத்தையும் இம்ப்ரூவ் செய்ய வேண்டிய ஒரு விஷயத்தையும் பற்றி விசித்ரா சொல்ல வேண்டும்’ என்கிற புதிய டாஸ்க்கை பிக் பாஸ் தந்தார். சபை ஒன்று கூடிய பின்னரும் விசித்ரா தன்னுடைய ஒப்பனையை முடித்து வராததால், மக்கள் சற்று அதிருப்தியடைந்தார்கள். குறிப்பாக மாயா இது குறித்து குரல் எழுப்பினார். “மத்தவங்க கூடத்தான் லேட் பண்ணியிருக்காங்க” என்று தன் தாமதத்தை விசித்ரா நியாயப்படுத்த, மாயாவிற்கும் இவருக்கும் முட்டல் ஆரம்பித்தது.
‘ரொம்ப ஓவரா பண்ணாத. என்ன?’ என்று முகச்சுளிப்புடன் விசித்ரா சொல்ல, ‘ஹலோ.. இப்படில்லாம் என் கிட்ட பேசாதீங்க’ என்று மாயா உஷ்ணமாக, இந்த உரையாடலில் தீ பற்றிக் கொண்டது. ஒரு வழியாக தன்னை நிதானப்படுத்திக் கொண்ட விசித்ரா, டாஸ்க்கை துவங்கினார். மற்றவர்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்து ‘மாயாவிற்கு கடைசியா வரேன்’ என்று பில்டப் தந்தார்.
‘இருக்கு.. ஏதோ சம்பவம் இருக்கு’ என்று நாம் ஆவலாக காத்துக் கொண்டிருந்த போது ‘மாயாவைப் பத்தி சொல்லணும்னா.. எனக்கு அவளை ரொம்பவும் பிடிக்கும். ஆனா யாரையும் நம்ப மாட்டா. அவ ஆடறது மட்டுமே கேம் இல்ல. மத்தவங்க ஆடறதும் கேம்தான்.. அவளோட நெகட்டிவ் சைட் மட்டும்தான் காட்டறா.. நல்ல பக்கத்தையும் காண்பிச்சா நல்லாயிருக்கும்’ என்று சொல்லி டாஸ்க்கை முடித்தார் விசித்ரா. ‘மம்மி. சொதப்ப போறாங்கன்னு நெனச்சேன். ஒவ்வொருத்தர பத்தியும் கரெக்ட்டா பேசிட்டாங்கப்பா’ என்று மணியும் நிக்சனும் விசித்ராவின் அப்சர்வேஷன் திறமையைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.
சபையில் கெத்தாக பேசி விட்டாலும் விசித்ராவின் கமெண்ட் மாயாவின் மனதைப் புண்படுத்தி விட்டதைக் காண முடிந்தது. தனியாகச் சென்ற மாயா ‘நீ யாருன்னு உனக்குத் தெரியும். இந்த உலகமே உன்னை எதிர்த்து நின்றாலும்.. நீயா ஒப்புக்கற வரைக்கும்.. நீ அழாத.. உன் கேமை விளையாடு” என்று கண்ணீர் வழிய பேசிக் கொண்டிருந்தார். பிறகு, ‘தென்பாண்டிச் சீமையில.. யாரடித்தாரோ’ என்கிற பாடலையும் பாடி தனக்குத் தானே ஆறுதலையும் சொல்லிக் கொண்ட போது மாயாவின் இன்னொரு பக்கத்தைக் காண முடிந்தது.
‘சபாஷ் பூர்ணிமா..’ – பிக் பாஸிடம் அடிக்கடி பாராட்டு பெறும் கேப்டன்
மனிதாபிமான அடிப்படையில் சின்ன வீட்டிற்கு நான்கு நாற்காலிகளை வழங்கினார் கேப்டன் பூர்ணிமா. “எப்படி அந்த சேர்கள் அங்க போச்சு?’ என்று கறாரான குரலில் பிக் பாஸ் விசாரணையை ஆரம்பிக்க “அவங்க நின்னுக்கிட்டே இருந்தது, பார்க்க கஷ்டமா இருந்தது. எனவே முடிவெடுத்திட்டேன். இதன் விளைவுகளைச் சந்திக்க தயாராக இருக்கிறேன்’ என்று பூர்ணிமா கெத்தாக சொல்ல, ‘வெரி குட். ஒரு கேப்டன்னா.. இப்படித்தான் துணிச்சலா முடிவு எடுக்கணும். ஒரு செயலோட அடிப்படையான நோக்கம் முக்கியம்’ என்று பாராட்டியதில் இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார் பூர்ணிமா. இதன் மூலம் கடந்த வாரங்களில் சொதப்பிய கேப்டன்களான விக்ரமிற்கும் யுகேந்திரனுக்கும் ஓர் ஊமைக்குத்தை பிக் பாஸ் பரிசாக வழங்கினார் என்றும் புரிந்து கொள்ளலாம்.
தன்னுடைய டாஸ்க்கில், ஐஷூவிற்கான உபதேசத்தை விசித்ரா சொன்ன போது ‘ஐஷூ என்னோட செல்லக்குட்டி. இந்த ஆட்டத்தை நீ ஜாக்கிரதையா ஆடணும். எல்லோரையும் நம்பி சில விஷயங்களை சொல்லிடாத. அவங்க சொல்றதையும் நம்பிடாத’ என்றார். இது தன்னைத்தான் மறைமுகமாக குறிக்கிறது என்பது மாயாவிற்குப் புரிந்தது. “இந்த விசித்ரா நல்லது சொல்றா மாதிரி நடிக்கறாங்க. ஆக்சுவலி அது அப்படி கிடையாது. இந்த விளையாட்டே அவங்களுக்குப் புரியலை” என்று மாயா சொன்னதை ‘ஆமாமாம்’ என்று தலையாட்டி ஆமோதித்தார் ஐஷூ. (தெ.மரத்துல ஒரு குத்து – ப. மரத்துல ஒரு குத்து! ஐஷூ இன்னொரு ரவீனா!)
பிறகு மக்களைக் கூட்டிய மாயா, ‘எனக்கு ஒண்ணு சொல்லணும்.. விசித்ரா பேசும் போது எல்லோரையும் பத்தி சொல்லிட்டு ஒவ்வொண்ணிலும் என்னையும் சேர்த்துக்கி்ட்டாங்க.
இதன் மூலம் என்னை தவறாக சித்தரிக்க டிரை பண்றாங்க. நான் இங்க இண்டஸ்ட்ரிங்கா கேம் ஆட வந்திருக்கேன். அவங்க வாழைப்பழத்துல ஊசி வெச்சு அட்டாக் பண்றாங்க” என்று பொதுவில் புகார் சொன்னார்.
‘அம்மா’ கேரக்ட்டர்கள் நிகழ்த்தும் அன்பு என்கிற வன்முறை
பிறகு மாயாவிற்கும் விசித்ராவிற்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. ‘உனக்கு என்னதாம்மா பிரச்சினை?.. நான் உன்னைப் பத்தியே சொல்லலையே.. நீயா வந்து ஏன் வாக்குமூலம் தரே..? எல்லாமே கேம் கிடையாது’ என்று விசித்ரா ஆரம்பிக்க `நீங்க நேரடியா சொல்லியிருந்தா நானே பாராட்டியிருப்பேன். கோழைத்தனமா பேசறீங்க. மறைமுகமா சொல்லி என்னைத் தப்பா காண்பிக்க டிரை பண்றீங்க. யாரையும் நம்பாதே..ன்னு ஐஷூ கிட்ட சொன்னதுக்கு என்ன அர்த்தம்? உங்களுக்கு இந்த கேம் புரியலை. ஆனா நான் சுவாரசியமா ஆட வந்திருக்கேன்’ என்று மாயா படபடத்தது ஒருவகையில் சரியானது.
ஒவ்வொரு சீசனிலும் இதைப் பார்த்திருக்கலாம். ‘அம்மா’ கேரக்ட்டரில் வருபவர்கள், தங்களுக்கு இணக்கமாக இருக்கிறவர்களிடம் பிரியத்தைக் கொட்டி அவர்களை ‘பாதுகாப்பது’ போன்ற செயல்களைச் செய்வார்கள். உண்மையான அம்மா என்கிற பாவனையில் ‘அங்க போகாத.. இங்க நிக்காத..’ என்று கட்டுப்படுத்த முயற்சிப்பார்கள். அந்தப் பிள்ளைகள் தங்களுக்கு எதிராக எதையாவது செய்து விட்டால் ‘உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன்.. தெரியுமா’ என்று பிலாக்கணம் வைக்க ஆரம்பிப்பார்கள்.
அதாவது அன்பு என்கிற ஆயுதத்தை மிக நுட்பமாகப் பயன்படுத்துவார்கள். ஏனெனில் அவர்களால் இளைய தலைமுறையுடன் நேரடியாகப் போட்டி போட முடியாது. எனவே இப்படி பிரியத்தைக் கொட்டுவதன் மூலம் தனக்கென ஒரு குழுவை ஏற்படுத்தி அதன் நடுவே பாதுகாப்பாக இருக்க முடியுமா என்று பார்ப்பார்கள். உண்மையான அன்பு என்பது இன்னொருவரைக் கட்டுப்படுத்துவதல்ல. சுதந்திரமாக இருக்க விடுவது.
இப்படி ஒவ்வொருவருமே பாசாங்கான அன்புடன், விக்ரமன் திரைப்படங்களின் காட்சியைப் போல ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்கிற டிராமாவை சீசன் முழுக்க ஆடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். என்னவாகும்? சில நாட்களிலேயே இதிலுள்ள பாசாங்கும், போலித்தனமும் நமக்கு குமட்டலை ஏற்படுத்தி விடும். இந்தப் பாவனைகளை உடைப்பதற்குத்தான் பிரதீப், மாயா போன்ற அதிரடியான போட்டியாளர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களைப் போன்றவர்கள் இல்லையென்றால் இந்த ஆட்டம் சுவாரசியமாகாது. இதைத்தான் மாயா சொல்ல விரும்புகிறார்.
தனியாகச் சென்று கலங்கிக் கொண்டிருந்த மாயாவிடம் `ஏ.. என்னப்பா.. நீ ரொம்ப டெரரான ஆளுன்னு நெனச்சேன். உன்னை மாதிரி இது மாதிரி பார்த்ததே இல்லையேப்பா..’ என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார் விக்ரம். `நான் இந்த ஆட்டத்தை உண்மையா ஆட டிரை பண்றேன். சில சுவாரசியங்களை ஏற்படுத்தறேன். இதுவே ஒரு பையன் பண்ணியிருந்தா பாராட்டியிருப்பாங்கள்ல.. இவங்க வெறுமனே இங்க வாழ வந்திருக்காங்க. நான் ரிஸ்க் எடுத்து ஆடறேன்’ என்றெல்லாம் மாயா அனத்தியது உண்மையான விஷயம்.
பிக் பாஸிடம் ரொமான்ஸ் செய்து கலவரப்படுத்திய விசித்ரா
`நான் எமோஷனலி ரொம்ப வீக். ரிலேஷன்ஷிப் விஷயத்துல சீக்கிரம் அழுது உடைஞ்சுடுவேன். அம்மா ஞாபகம் வருதுன்றதாலதான் விச்சு கிட்ட நான் போகவே மாட்டேன்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார் மாயா. இதுவும் அவரது இன்னொரு பக்கம்தான். பிறகு மாயாவும் விசித்ராவும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டது கண்கொள்ளா காட்சி. “குத்திடுவேன். நான் உன்னைச் சொல்லவேயில்ல.. நீ ஃபைனல் வரைக்கும் போக வேண்டிய ஆளு” என்று செல்லமாக கோபம் காட்டினார் விசித்ரா. மனித உணர்வுகள் என்பது வெறும் கறுப்பும் வெளுப்புமானதல்ல. நாமே புரிந்து கொள்ள முடியாதபடி பல்வேறு விசித்திரமான வண்ணங்களையும் சிக்கல்களையும் கொண்டது.
‘நீங்க சுவாரசியமா கேம் ஆடலை’ என்று மாயா சொன்ன புகார், விசித்ராவின் ஈகோவை உசுப்பி விட்டதோ, என்னமோ. ‘தள்ளுங்கடா.. நான் ஆடறேன் பாரு இப்போ ஒரு கேம்’ என்று களத்தில் இறங்கி விட்டார். நேரடியாக மேலிடத்தையே அப்ரோச் செய்ய ஆரம்பித்து விட்டார். `பிக் பாஸ்.. உங்க மேல எனக்கு க்ரஷ்ஷா இருக்கு. உங்க குரலைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு வெட்கம்.. வெட்கமா வருது.. ரூல்ஸ் எல்லாம் மீறி உங்க கூட வந்துட தயாரா இருக்கேன்.. அந்த மூணு வார்த்தையை உங்க கிட்ட சொல்லணும்.. ஆனா வெட்கம் தடுக்குதே.. உங்களுக்காக டீயும் குடிப்பேன்… தீயும் குளிப்பேன்’ என்றெல்லாம் கண்ணைச் சிமிட்டிக் கொண்டே விசித்ரா பேசுவதைப் பார்த்த பிக் பாஸ் நிச்சயம் ஜொ்க் ஆகி மெடிக்கல் லீவில் சென்றிருக்கலாம். ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸிடம் ரொமான்ஸ் செய்யும் பெண்களின் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போகிறது. நாட்டி ஃபெல்லோ..
மாயா – விசித்ரா டிராமா ஒருவழியாக முடிந்ததா? அடுத்ததாக மணி – ரவீனா நாடகம் ஆரம்பித்தது. பொசசிவ்னஸ் என்பது காதலின் ஒரு பகுதி மட்டுமே. ஆனால் இது மிகையாகிப் போனால் வாழ்க்கை நரகமாகி விடும். ஒரு பொதுவான ஆட்டத்திலேயே ரவீனாவிற்கு இத்தனை கட்டுப்பாடுகளை இடுகிறார் மணி. சுதந்திரமாக இருக்க அனுமதிப்பதில்லை. விசித்ரா காட்டும் பாவனையான தாயன்பு போலவே ‘கேட்டை சாத்தும்’ இந்த அன்பும் ஒருவகையான வன்முறைதான்.
மணியின் ‘பொசசிவ்’ இம்சைகள்
அடுத்த கோல்டன் ஸ்டார் டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். போட்டியாளர்களின் குடும்பத்தினர் பேசும் வீடியோ காட்டப்படும். இதை சம்பந்தப்பட்டவர்கள் பார்க்க முடியாது என்பதுதான் சுவாரசியமான டிவிஸ்ட். ஒருவர், இரண்டு சக போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்து காரணங்களைச் சொலலி அவர்களின் குடும்ப வீடியோவைப் பார்க்கலாம். அதில் சொல்லப்படுகிற விஷயங்களோடு ஒப்பிட்டு ஒற்றுமை எத்தனை சதவீதம் இருக்கிறது, முரண் எத்தனை சதவிகிதம் இருக்கிறது என்பதைப் பொறுத்து சம்பந்தப்பட்டவருக்கு லைக் அல்லது டிஸ்லைக் பட்டனை குத்த வேண்டும். அதிக லைக் வாங்குபவர் வெற்றியாளர்.
முதலில் வந்த பிரதீப், சுரேஷ் மற்றும் ஜோவிகாவின் குடும்ப வீடியோக்களைப் பார்க்க ஆசைப்பட்டார். இவருக்கு வனிதாவை ரொம்பவும் பிடிக்குமாம். (பார்றா!). வீடியோ பார்த்து விட்டு திரும்பிய பிரதீப், ஜோவிகாவிற்கு லைக் பட்டனும், சுரேஷிற்கு டிஸ்லைக் பட்டனும் தந்து அதற்கான காரணங்களைச் சொன்னது அருமை. சுரேஷ் தனது குடும்பத்தைப் பற்றி சொன்னது போல் வீடியோவில் இல்லையாம். பெருமையாகத்தான் பேசினார்களாம். ஆனால் ஜோவிகாவின் தங்கை உணர்வுபூர்வமாக பேசியது நன்றாக இருந்தது என்று விவரித்தார் பிரதீப். பொதுவாக முகத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தாத ஜோவிகா, இதைக் கேட்டு கண்கலங்கினார்.
‘அப்பா.. கப் ஜெயிச்சுட்டு வாங்கப்பா’ன்னு சுரேஷோட பையன் வீடியோல சொன்னான்.. அதக் கேட்டதும் உள்ளுக்குள்ள எனக்கு சிரிப்பா வந்துச்சு.. எப்படியும் அது நடக்கப் போறதில்ல’ என்று பட்டவர்த்தனமாக உடைத்துப் போட்டு பிரதீப் பேசியது அருமையான, நேர்மையான நகைச்சுவை. இதுதான் பிரதீப்.
அடுத்ததாகச் சென்றவர் ரவீனா. இவர் மணியின் குடும்ப வீடியோவைத் தேர்ந்தெடுத்திருக்கவே வேண்டாம். அதன் விளைவுகளை பின்னர் அனுபவித்தார். பிரதீப் மற்றும் மணியின் வீடியோக்களைப் பார்த்த ரவீனா, பிரதீப்பிற்கு லைக்கும் மணிக்கு டிஸ்லைக்கும் அளித்தார். இதற்காக அவர் சொன்ன காரணங்கள் மிக மிகப் பொருத்தமாக இருந்தன. ரவீனாவின் குழந்தைத்தனமான பிம்பத்திற்குள் இன்னொரு அறிவாளிப் பெண் ஒளிந்திருப்பதை இப்போது கண்டுகொள்ள முடிந்தது.
சும்மாவே ஆடும் மணி, சலங்கையை கட்டி விட்டால் ஆடாமல் இருப்பாரா? தனக்கு டிஸ்லைக் பட்டனை தந்தது தொடர்பாக விதம் விதமாக ரவீனாவை வறுத்தெடுத்தார். `ஆக்சுவலி. உன் வீடியோதான் பிடிச்சது.. பிரதீப்பிற்கு யாரும் லைக் தர மாட்டாங்க.. அதனாலதான் நான் தந்தேன்’ என்று ரவீனா சமாளிக்க முயன்றாலும் மணியின் இம்சை அடங்கவில்லை. `ஈஸியா. என்னை விட்டுக் கொடுத்துட்டல’ என்று படுத்தியெடுத்தார். இவர்களைப் போன்ற ஆசாமிகளுடன் குப்பை கொட்டுவது ஆகச் சிரமமான விஷயம்.
‘தனியா இருந்தா ரவீனா நல்லா ஆடுவா.. இவன்தான் தடுக்கறான்’ என்று மாயாவும் ‘மூளையே இல்லாத முட்டாப் பயலா இருக்கான்’ என்று பூர்ணிமாவும் தூரத்தில் இருந்து இவர்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தனர்.
அடுத்ததாக மணிக்கு வாய்ப்பு. ரவீனா மற்றும் விக்ரமின் குடும்ப வீடியோக்களைப் பார்த்து விட்டு வந்த மணி, ரவீனாவிற்கு லைக் பட்டனும் விக்ரமிற்கு டிஸ்லைக் பட்டனும் தந்தார். இதற்காக அவர் சொன்ன காரணங்கள் பொருத்தமாக இருந்தன. ‘நான் ஒண்ணும உன்னை மாதிரி இல்லை’ என்று காட்டுவதற்காகவே ரவீனாவிற்கு லைக் பட்டனை மணி அளித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இதன் மூலம் குற்றவுணர்ச்சியை ரவீனாவிற்கு ஏற்படுத்தலாம்.
வெறும் 45 நிமிட வீடியோவில் எத்தனை உணர்ச்சி மோதல்கள், பாசாங்குகள், அன்பு என்கிற பெயரில் நிகழ்த்தப்படும் துரோக வன்முறைகள், முகத்திற்கு நேராக பேசப்படும் உண்மைகள் போன்றவை நிகழ்கின்றன என்று பாருங்கள். இதில் வெறுமனே பார்வையாளாராக நின்று வேடிக்கை பார்த்து வம்பு பேசுவதை விடவும் இப்படிப்பட்ட சூழல்களில் ‘நாம் என்னவாக இருந்தோம்’ என்பதை நேர்மையாக யோசித்து அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள முயல்வதுதான், இந்த நிகழ்ச்சியைப் பார்க்க செலவிடும் நேரத்தின் உண்மையான பயனாக இருக்க முடியும்.
உங்களுக்கு யாருடைய குடும்ப வீடியோ பிடித்திருந்தது என்பதைக் கமென்ட்டில் தெரிவியுங்கள்!
+ There are no comments
Add yours