Bigg Boss 7 Day 20: கேப்டன் ஆன பூர்ணிமா, கொந்தளித்த நிக்சன்; எவிக்ட் ஆகப்போவது யார்?

Estimated read time 1 min read

கடந்த வாரத்தில் விக்ரம் இருந்ததைப் போலவே யுகேந்திரனும் ஒரு குழப்பமான கேப்டனாக இந்த வாரத்தில் செயல்பட்ட விஷயம், கமலின் விசாரணை நாளில் துல்லியமாக வெளிப்பட்டது.

Bigg Boss 7 Day 20

இரண்டு வீட்டிற்கு பொதுவாகவும் நல்லவராகவும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினாலும் பல இடங்களில் தடுமாற்றம் இருந்தது. மீண்டும் அதேதான். ஒரு தலைவர் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது, வல்லவராகவும் இருக்க வேண்டும். பல பேருக்குத் தடையாக இருந்து அதிக எண்ணிக்கையிலான கற்களைப் பெற்றார் மாயா. அதற்காக அவர் சந்தோஷப்பட்டது சரியான விஷயம்தான். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, மாயாவை வெறுக்கும் நபர்கள் ஒருவேளை அதிகமிருந்தாலும் ஏதாவது ஒரு செயல் தொடர்ந்து நிகழ்வதற்கு அவர் காரணமாக இருக்கிறார்.

கமல்ஹாசன்

மாயா, பிரதீப் போன்றவர்கள் இல்லையென்றால் இந்த ஆட்டம் சுவாரசியத்தை இழந்து விடும்.பெரிய வீடு வசதியானது என்றும், சின்ன வீடுதான் தண்டனை என்று இந்த சீசன் பற்றி நாம் கருதிக் கொண்டிருந்தது தலைகீழாக மாறி விட்டது. சிறிய வீட்டில் இருப்பவர்கள்தான் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதில் ஒரு முக்கியமான பாடம் உள்ளது.

டை கட்டிய வாத்தியார் மாதிரி அரங்கிற்குள் நுழைந்தார் கமல். ‘ரிகார்ட் பிரேக்’ என்று அவர் ஆரம்பித்த போது ‘இந்த சீசனின் பார்வையாளர் எண்ணிக்கை பற்றி ஏதாவது பெருமிதமாகப் பேசுவாரோ’ என்று தோன்றியது. இல்லை. ‘வீட்ல மொத்தம் 16 பேரு இருக்காங்க. அதுல 11 பேரு நாமினேட் ஆயிருக்காங்க. சின்ன வீடா இருந்தாலும் ஒத்துமையா இருந்து அவங்க சாதிச்சிருக்காங்க. கிச்சன்ல வெறுமனே கூட்டு மட்டும் அவங்க செய்யலை. கூட்டு முயற்சியாகவும் செயல்பட்டிருக்காங்க” என்கிற முன்னுரையுடன் வெள்ளிக்கிழமை நிகழ்வுகளுக்குச் சென்றார்.

Bigg Boss 7 Day 20

சுரேஷ் காமிராவைப் பார்த்து கலங்கிக் கொண்டிருந்தார். ‘அப்பா.. பரிசு வாங்கியிருக்கேன்.. வரும் போது எடுத்துட்டு வரேன்’.. என்று தன் குடும்பத்தாரிடம் அவர் நெகிழும் போது சுரேஷின் இன்னொரு பக்கத்தைப் பார்க்க முடிந்தது. இது போல் ஓவர் ரியாக்ட் செய்பவர்களிடம் என்னவொரு பிரச்சினையென்றால், அவர்கள் எப்போது நடிக்கிறார்கள், எப்போது உண்மையாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது கஷ்டம். உண்மையாகவே அழும் போது ‘நடிக்கறாம்ப்பா’ என்று சொல்லி விடும் ஆபத்து இருக்கிறது.

சுரேஷ் பற்றி உயர்வாகவும் கலாய்த்தும் மாற்றி மாற்றிப் பேசி நிக்சன் செய்த காமெடி உண்மையிலேயே அருமை. நிக்சன் இப்போது பிரகாசமாக வெளிப்படத் துவங்கியிருக்கிறார். இது தொடர்ந்தால் வலிமையான போட்டியாளராக மாறுவார். நகைச்சுவையின் மூலம் குத்தலான விமர்சனங்களை வைக்க முடியும் என்பதற்கு நிக்சனின் இந்த நிகழ்ச்சி உதாரணம்.

Bigg Boss 7 Day 20

“விசித்ராவை எதுக்கு மன்னிப்பு கேக்கச் சொன்னே?’ என்று பிரதீப்பிடம் விசாரித்துக் கொண்டிருந்தார் ரவீனா. ஏதோவொரு பெரிய காரணமாக இருக்கும் என்று பார்த்தால் அது அற்பமானது. ‘எங்க வீட்டு குக்கர்ல பருப்பு வெச்சா நிறைய வரும்ன்னு சொல்றாங்க. அப்ப உங்க வீட்டுல இருந்தே குக்கர் எடுத்துட்டு வந்திருக்க வேண்டியதுதானே.. ஏதாவது குறை சொல்லிட்டே இருக்காங்க.. இவங்க என்ன குக் வித் கோமாளிக்கா வந்திருக்காங்க?’ என்று பிரதீப் அனத்த, டெலிபோன் மணி போல சிணுங்கி சிணுங்கி சிரித்தார் ரவீனா. விசித்ராவிடம் எல்லை மீறி பல விஷயங்களைப் பேசும் பிரதீப், இந்த சிறிய விஷயத்திற்காக மன்னிப்பு கேட்கச் சொல்வது நியாயமானதல்ல.

‘மனோ.. கருவாட் வந்திருக்கு’ என்கிற மாதிரி ஆடைகள் திரும்ப வந்திருக்கும் தகவலை மக்களுக்குச் சொன்னார் யுகேந்திரன். தாயுள்ளம் கொண்ட பிக் பாஸ், அதே சாம்பார் சாதத்தை சுடவைத்து வழங்க, மக்கள் முகச்சுளிப்புடன் சாப்பிட்டார்கள்.

ஒற்றுமையாக இருந்து சாதித்துக் காட்டிய சின்ன வீட்டார்

அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல் “சின்ன வீட்டார் தனியா உக்காருங்க.. என்னதான் மனசுக்குள்ளே நெனச்சிட்டு இருக்கீங்க.. நீங்க என்ன பிஸ்தாவா?’ என்றெல்லாம் முறைப்பாக கேட்க அவர்கள் சற்று ஜெர்க் ஆனார்கள். ஆனால் அது பாராட்டாம். ஒற்றுமையாக செயல்பட்டு நாமினேஷனில் எதிர் வீட்டில் ஆறு பேரை தட்டித் தூக்கியதை திட்டுவது போல் பாராட்டுகிறாராம்.

“சின்ன வீட்டில் சௌகரியங்கள் குறைவு. என்றாலும் நீங்கதான் மகிழ்ச்சியா இருந்தீங்க. உழைப்பிற்கும் சந்தோஷத்திற்கு தொடர்பு இருக்கு. சந்தோஷம்-ன்றது வெளில இருந்து வர்றது இல்ல. உள்ளே இருந்து வரணும்” என்றெல்லாம் கமல் சொன்னது நடைமுறை வாழ்க்கைக்கும் பொருந்தும். எப்போதுமே பெரிய உயரங்களை நினைத்து ஏக்கப்பட வேண்டியதில்லை. எனில் அருகில் இருக்கும் சிறிய சொர்க்கங்களை நாம் கவனிப்பதில்லை என்று பொருள்.

Bigg Boss 7 Day 20

பெரிய வீட்டாரும் இதையே பிரதிபலித்தார்கள். “ஆமாம் சார்.. அவங்களுக்கு வேலை இருந்தது.. எங்களுக்கு இல்லை. போர் அடிச்சது.. தனிமையா உணர்ந்தோம்.. பைத்தியம் பிடிக்கற மாதிரி இருந்தது…’ என்றெல்லாம் இவர்கள் சொல்வதைப் பார்க்கும் போது ‘சும்மா உக்காந்து இருக்கறது ஈஸியான விஷயமா..? நீ செஞ்சு பாரு.. அப்பத்தான் அந்தக் கஷ்டம் தெரியும்..’ என்கிற வடிவேலு காமெடிதான் நினைவிற்கு வந்தது. “நாங்க எதுவும் இன்டரஸ்டிங்கா பண்ணலை’ என்று ஜோவிகா சொன்னதும் “உண்மை. அதை ஒப்புக் கொண்டதற்கு நன்றி’ என்றார் கமல்.

ஜோவிகா

‘எனக்கு அப்படியில்ல சார். நான் இங்க ஜாலியாத்தான் இருந்தேன். எப்படி ஜாலியா இருக்கணும்னு சின்ன வீட்ல சொல்லிக் கொடுத்து வந்தேன்’ என்று டைமிங்கில் பின்னினார் சுரேஷ். “சின்ன வீடுன்றதால அவங்க ஒரே இடத்துல நெருக்கமா இருக்காங்க’ என்கிற முக்கியமான அப்சர்வேஷனை சொன்னார் விக்ரம். பங்களா மாதிரியான பெரிய வீடுகளில் ஆளுக்கொரு அறையின் தனிமையில் முடங்கிக் கிடப்பதை விடவும் சிறிய அறையில் நெருக்கமாக இருக்கும் மேன்சன் நண்பர்கள் உருவாக்கும் மகிழ்ச்சியும் குதூகலமும் எப்போதும் பெரியது.

பிரதீப்பிற்கு மக்கள் அளித்த அமோக வரவேற்பு. (ஹிஹிஹி..)

‘கத்தரிக்கா குழம்புல காஃபி பொடி போட்டு ஒரு சமையல் புரட்சியே பண்ணிட்டீங்க’ என்று பூர்ணிமாவை சர்காஸ்டிக்காக கலாய்த்தார் கமல். குழம்பை ருசித்து சாப்பிட்ட பெரிய வீட்டாருக்கு இப்போது ஜெர்க் ஆகி வயிற்றைக் கலக்கியிருக்கும். பிரதீப் எழுந்த போதே பார்வையாளர்களிடமிருந்து அமோகமான கைத்தட்டல் கிடைத்தது. ஆம்னி பஸ்ஸில் கார்னர் சீட் பிடித்தவர் போல “ஒரு நல்ல இடத்தை துண்டு போட்டு வெச்சிருக்கேன் சார். பிக் பாஸ் காமிரால தெரியாத வியூ கூட அங்க இருந்து தெரியும்” என்று சொன்ன பிரதீப் மறக்காமல் பின்குறிப்பில் தனது பிரத்யேக பிராண்ட் சிரிப்பை அள்ளித் தெளித்தார்.

Bigg Boss 7 Day 20

விஜய் செய்த வன்முறை பற்றி பிரதீப் விவரிக்கும் போது ‘வார்த்தையால நான் சொன்னதுக்கே எங்க வீட்ல என்ன நெனப்பாங்கன்னு சொன்னான். இப்ப அவன் என்னைத் தூக்கிப் போட்டதை எங்க வீட்ல பார்த்தா.. என்ன நெனப்பாங்க. என்று நைசாக போட்டுக் கொடுத்த பிரதீப், பின்குறிப்பாக ‘மத்தபடி அவன் நல்ல பையன்தான்’ என்றது அருமையான கிண்டல். மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றிருக்கும் பிரதீப், காப்பாற்றப்பட்டிருக்கும் தகவலை முதலில் தெரிவித்த கமல், பிரேக்கில் சென்றார். அவருடைய தலை மறைந்ததுமே, ‘இனிமே பிரதீப்பை கையிலேயே பிடிக்க முடியாது’ என்று அதிருப்தியுடன் முனகினார் விசித்ரா. ‘சும்மாவே ஆடுவான். இப்ப மக்கள் சலங்கையும் கட்டி விட்டிருக்காங்க’ என்றார் சுரேஷ்.

சொதப்பல் திலகமாக தடுமாறிய யுகேந்திரன்

பிரேக் முடித்து திரும்பிய கமல் ‘ஓகே.. யுகேந்திரனோட கேப்டன்சி பத்தி இப்ப பேசுவோமா?’ என்று ஆரம்பிக்க, யுகேந்திரனின் முகத்தில் அப்போதே விசாரணைக் கைதியின் களை வந்து விட்டது. பெரிய வீட்டிற்கும் விசுவாசமாக இல்லாமல் சின்ன வீட்டிற்கும் ஆதரவாக இல்லாமல் தடுமாறியதுதான் யுகேந்திரனின் பெரிய மைனஸ் பாயிண்ட். இதன் மூலம் இருவீட்டாரின் நம்பிக்கையையும் அவர் இழந்து விட்டார்.

சில விஷயங்களில் தங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதால், சின்ன வீடு கேப்டனைப் பாராட்டியது. ‘சாப்பாடுல்லாம் நல்லா கொடுத்தார்’ என்று பாராட்டினார் மாயா. ஆனால் நிக்சனோ இறங்கி அடித்தார். ‘கேப்டனுக்கு அவங்க துளி கூட மரியாதை தரலை சார். மதிக்கவேயில்லை. ஆனா நாங்க பணிஞ்சு போனோம்” என்று நிக்சன் கொதித்த போது ‘மரியாதைன்றது எப்படி வரும்.. நாம நடந்துக்கறதைப் பொறுத்துதானே?’ என்று கமல் சொன்னது முக்கியமானது.

Bigg Boss 7 Day 20

ஆக்சிஜன் சிலிண்டர் டாஸ்க்கில் யுகேந்திரன் பெரிய வீட்டிற்கு சாதகமாக ஆடிய பிளானை இப்போது அறிந்த சீன்ன வீட்டார் அதிர்ச்சியடைந்தார்கள். “நான் சிலிண்டரை எடுத்து உங்க கிட்ட கொடுத்துடறேன்” என்று பெரிய வீட்டாரிடம் சொல்லி விட்டுச் சென்ற யுகேந்திரன், அந்த பிளானையாவது ஒழுங்காகச் செய்தாரா என்றால் அதுவும் இல்லை. திடீரென்று மனம் மாறி சின்ன வீட்டுக்கு சார்பாக ஆடத் துவங்கி விட்டார். (குறும்பட அச்சம் காரணமோ?!). எந்த அணிக்கு ஆட ஒப்புக் கொள்கிறோமோ, அதற்கு விசுவாசமாக இருப்பதுதான் நேர்மையான ஆட்டக்குணம். மேலும் காப்டன் என்பவர் நடுநிலையாகத்தான் இருக்க வேண்டும். இப்படி பல விஷயங்களில் சொதப்பி ‘கேப்டன்’ என்கிற அடையாளத்திற்கு களங்கம் தந்து விட்டார் யுகேந்திரன்.

விசித்ரா

“நீங்க தப்பு செஞ்சீங்கன்னு கூட நான் சொல்லல. அது உங்க ஸ்ட்ராட்டஜியான்னு சொல்லிடுங்க. உண்மையைப் பேசினாத்தான் மக்களுக்குப் பிடிக்கும்” என்று கமல் சூசகமாக சொன்ன போது கூட ‘Failed Strategy’ என்கிற மழுப்பலான பதிலைத்தான் யுகேந்திரனால் சொல்ல முடிந்தது. ‘நிக்சன் காப்பாற்றப்பட்ட’ தகவலைச் சொன்ன கமல் பிரேக்கில் சென்றார். கமலின் தலை மறைந்ததும் “நீங்க ஏன் சரியாவே விளக்கம் தரலை?” என்று யுகேந்திரனிடம் சலித்துக் கொண்டார் விசித்ரா.

யார், யாருக்குத் தடை?.. உண்மையைப் போட்டு உடை..

பிரேக் முடிந்து திரும்பிய கமல் ‘சாபம்.. வரம் மாதிரியான விஷயங்கள்ல எனக்கு நமபிக்கை கிடையாது. எனவே ‘சாபக் கல்’ என்பதற்கு புது நாமகரணம் சூட்டுவோம். ‘தடைக்கல்’ன்னு வெச்சுக்கலாம்.” என்ற கமல், அதற்கும் முன்பாக அக்ஷயாவின் சாபத்தைப் போக்கி அவரிடமிருந்த பாரத்தை இறக்கி வைத்தார்.

‘அக்ஷயாவிற்கு கல்லு கொடுத்தது நியாயம்ன்னு நெனக்கறவங்க கை தூக்குங்க’ என்றதும் யுகேந்திரன் மற்றும் சுரேஷ் மட்டுமே கை தூக்கினர். மற்றவர்களுக்கு இதில் ஒப்புதல் இல்லை. சுரேஷூடன் இணைந்து கல்லைத் தந்த மணி இப்போது ஏனோ அமைதியாக இருந்து விட்டார். “எந்தத் தண்டனையா இருந்தாலும் குப்பைத் தொட்டி மாதிரி என் மேல கொட்டிட்டு போயிடறாங்க சார்” என்று சுரேஷ் காமெடியாக சொன்னாலும் அதில் சிறிய வலி தெரிந்தது.

பூர்ணிமா ரவி

“சரி. ஆளுக்கு ரெண்டு கல் எடுத்துக்கங்க.. உங்க முன்னேற்றத்திற்கு யார் தடையா இருப்பாங்கன்னு நெனக்கறீங்களோ.. அவங்களுக்கு ஒரு கல்லும், இன்னாரின் முன்னேற்றத்திற்கு இன்னார் தடையாக இருப்பாங்கன்னு நெனக்கறீங்களோ, அவங்களுக்கு ஒரு கல்லும் கொடுங்க’ என்று கல்லாட்டத்தின் விதியை விளக்கினார் கமல்.

Bigg Boss 7 Day 20

இந்த டாஸ்க்கில் மாயாவிற்கு அதிக கற்கள் கிடைத்தன. ‘மற்றவர்களின் மண்டையைக் கழுவுகிறார்.. இன்ப்ளூயன்ஸ் செய்கிறார். டிஸ்கரேஜ் செய்கிறார்’ என்பது போன்ற காரணங்களை போட்டியாளர்கள் அடுக்கியதால் அதிகபட்சமாக 11 கற்கள் மாயாவிற்கு கிடைத்தன. இதே போல் மணி – ரவீனாவின் கூட்டுச் செயற்பாடுகளும் தொடர்ந்து சுட்டிக் காட்டப்பட்டன. இதனால் ரவீனாவிற்கு ஐந்து கற்கள் கிடைத்தன. இதைப் போலவே எப்போதும் ஒன்றாகச் சுற்றும் மாயா – பூர்ணிமாவின் கூட்டணியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பூர்ணிமாவின் முன்னேற்றத்திற்கு மாயா தடையாக இருப்பாராம்.

இதற்காக விளக்கம் அளிக்க எழுந்த ரவீனா, ‘எனக்குத் தெரியல சார்.. நான் மணியை இன்ப்ளூயன்ஸ் பண்ணலை. யாரை நாமினேட் பண்ணலாம்ன்னு அவரும் எனக்கு சொல்ல மாட்டாரு. நான் அவர் வளர்ச்சிக்குத் தடையா இல்ல’ என்கிறார். அடுத்து எழுந்த மாயா `ஒரு வீடே கட்டற அளவிற்கு கல்லு வந்திருக்கு. மத்தவங்க வெற்றிக்கு தடையா இருக்கறதுதானே சார் கேம்? அதுல எனக்குப் பெருமைதான்’ என்று சொன்னது சரியான விளக்கம். ஒரு நல்ல ஆட்டக்காரனைப் பார்த்து மற்றவர்கள்தான் பயப்படுவார்கள். மாயாவின் சில செயற்பாடுகள் எரிச்சலை அளித்தாலும் பிக் பாஸ் என்னும் ஆட்டத்தை சிறப்பாக கையாள்பவர்களில் மாயாவும் பிரதீப்பும் முக்கியமானவர்கள்.

Bigg Boss 7 Day 20

“மத்தவங்களுக்கு எப்படியோ.. பூர்ணிமாவின் வெற்றிக்கு நிச்சயம் நான் தடை கிடையாது” என்றார் மாயா. ‘ஏன்னா அவன் என் நண்பன்’ என்கிற தளபதி சூர்யா மாதிரி மாயா சொன்னது முரண். விளையாட்டு என்று வந்து விட்ட பிறகு நட்புணர்ச்சிக்கு இடம் இருக்கக்கூடாது. அதுதான் விளையாட்டு தர்மம். இதைத்தான் பிரதீப்பும் அடிக்கடி சுட்டிக் காட்டுகிறார். மாயா காப்பாற்றப்பட்ட தகவலைச் சொன்ன கமல், `சரி.. கல்லையெல்லாம் பத்திரமா திருப்பிக் கொடுத்துடுங்க.. ஏன்னா.. அடுத்ததா கேப்டன் போட்டி இருக்கு’ என்று சிரித்தபடியே விடைபெற்றார்..

கேப்டன் ஆன பூர்ணிமா, கொந்தளித்த நிக்சன்

‘இந்த வாரம் யார் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதை ஆலோசித்து சொல்லுங்க’ என்றார், சபையைக் கூட்டிய பிக் பாஸ். பெரிய வீட்டிலிருந்து விஜய், நிக்சன் மற்றும் சின்ன வீ்ட்டில் இருந்து பூர்ணிமாவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மூவருக்கும் இடையே நடந்த கேப்டன் போட்டியில் பூர்ணிமா தேர்ந்தெடுக்கப்பட்டார். “நான் கேப்டனா வந்தா முதல் பெண் தலைமையா அது இருக்கும்.. நேர்மையா இருப்பேன். மாயாவே தப்பு செஞ்சாலும் தண்டனை கொடுப்பேன்.. என்டர்டெயின்மென்ட்டா வீட்டை வெச்சுப்பேன்’ என்றெல்லாம் அவர் பேசியது ஜூரிகளைக் கவர்ந்தது. எனவே அவர் கேப்டன் போட்டியில் வெற்றி அடைந்தார்.

Bigg Boss 7 Day 20

பூர்ணிமா தேர்ந்தெடுக்கப்பட்டது, சக போட்டியாளரான நிக்சனுக்குப் பிடிக்கவில்லை. “முதல் பெண் தலைமைன்றதெல்லாம் ஒரு காரணமா.. ஆண், பெண் என்று இங்கு பிரித்துப் பார்க்கலாமா.. கடந்த ரெண்டு வாரமும் கேப்டன் தன் பவரைக் காட்டலைன்றதுதான் பிரச்சினை…அதச் செய்யாம எண்டர்டெயின்மென்ட்டா வீடு இருக்கும்ன்றது நல்லாவா இருக்கு” என்றெல்லாம் ஆவேசமாக பேசியபடி உலவிக் கொண்டிருந்தார். நிக்சன் சொன்னவற்றில் நியாயம் இருக்கிறது. கடந்த இரு வாரங்களிலும் கேப்டன்கள் சொதப்பி விட்டார்கள்.

ஆனால் நிக்சன் தன்னுடைய வாக்குறுதிகளை அளிக்கும் போது ‘ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர்’ மாதிரி பேசியது சரியான உத்தி அல்ல. ஏனெனில் வெளிப்படையாகவும் கறாராகவும் உண்மையைப் பேசுபவர்களை மக்களுக்குப் பிடிக்காது. அவர்களுக்குப் பிடித்த இனிமையான மொழியில் பேசுவதுதான் அதிகாரத்தில் நுழைவதற்கான ஒரு வழி. அரசியல்வாதிகள் இதில் விற்பன்னர்கள்.

Bigg Boss 7 Day 20

‘சின்ன வீட்டுல இருந்து ஒருத்தர் கேப்டன் ஆனா.. அவங்களை வெச்சு செய்யலாம்’ என்று அடிக்கடி சொல்கிற மாயாவின் நெடுங்கால கனவு இப்போது நிறைவேறியிருக்கிறது. சொன்னபடியே பூர்ணிமா நேர்மையாக நடப்பாரா அல்லது மாயாவுடன் இணைந்து கூட்டுச்சதியில் ஈடுபடுவாரா?’ என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours