நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து இசையமைப்பாளர் டி இமான் வீசிய குற்றச்சாட்டுதான், சோஷியல் மீடியாக்களில் மட்டுமல்ல திரைத்துறையிலும் பரபரப்பாக வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் அதனால், இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம் என்றும் அதுகுறித்து, வெளிப்படையாக சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என்றும் இமான் கூறியதுதான் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி.
இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில், தனது முதல் மனைவி மோனிகா ரிச்சர்டை கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் இமான். அதன்பிறகு, அமலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அப்போதே, என்ன காரணம் என ஆச்சர்யத்துடன் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், ‘சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார்’ என்று இமான் குற்றம் சாட்டியிருப்பதை, இமான் விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.
அதேநேரத்தில், என்ன துரோகம் என்று வெளிப்படையாக சொல்லாமல் வெறும் துரோகம் செய்துவிட்டார் என்று சொல்வது சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை கெடுக்கத்தான் என்று அவரது ரசிகர்கள் இமானுக்கு பதிலடி கொடுத்துவருகிறார்கள். இந்த சூழலில் இமானின் முதல் மனைவி மோனிகா ரிச்சர்டிடம் பேசினேன்.
“சிவகார்த்திகேயன் எங்களோட குடும்ப நண்பர். ரொம்ப டீசன்ட்டான மனிதர். இமானுக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டு. நண்பர் என்ற அடிப்படையில, எங்கக் குடும்பத்துமேல அக்கறையா இருப்பாரு. என் மகள்களுக்கும் அவரைப் பிடிக்கும். அதனாலதான், எங்களுக்குள்ள விவாகரத்து நடக்கக்கூடாதுன்னு சமாதானம் பேசி பஞ்சாயத்துப் பண்ணி வைக்க வந்தார். ஒரு குடும்பம் சிதறிடக்கூடாதுங்குற நல்லெண்ணத்துல நாங்க ஒற்றுமையா வாழணும்னு நினைச்சு சமாதான முயற்சிகளையும் எடுத்தார்.
இமானோட விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் பண்ணல. நியாயத்துப் பக்கம் நின்னார். அது இமானுக்குப் பிடிக்கல. சிவகார்த்திகேயன் தனக்கு சப்போர்ட் பண்ணலங்கிறதைதான், இமான் துரோகம்னு சொல்றார்ங்கிறது எனக்குப் புரியுது. ஆனா, அதை வெளில வேறமாதிரி புரிஞ்சுக்குறாங்க. பொதுவா குடும்ப நண்பர்கள்னு இருந்தா, நண்பரோட குடும்பம் பிரியக்கூடாதுன்னுதானே நினைப்பாங்க? இதுல, சிவகார்த்திகேயன் மேல என்ன தப்பு இருக்கு? ஒரு வருசத்துக்கு முன்னாடி பொண்ணையெல்லாம் ரெடியா பார்த்து வெச்சிட்டுத்தான், இமான் எனக்கு விவாகரத்தே கொடுத்தார். நான் முடியாதுன்னு சொன்னதுக்கு, அரசியல்வாதிகளை வெச்சு ‘உங்கப்பாவைக் கொன்னுடுவோம்’னு மிரட்டல் எல்லாம் கொடுத்து 46 நாட்களிலேயே விவாகரத்தும் வாங்கினார்.
எனக்கு எந்தவொரு ஜீவனாம்சமும் கொடுக்கல. காசு வேணுமா? பிள்ளைகள் வேண்டுமான்னு கேட்டாங்க. எனக்குப் பிள்ளைகள்தான் முக்கியம்னு சொல்லிட்டு எந்த ஜீவனாம்சமும் வாங்காம வந்தேன். அந்த வாழ்க்கையில இருந்து ஒன்னுமே இல்லாம, வெளில வந்து இப்போ நான் ஒரு கம்பெனியை வெற்றிகரமா நடத்திட்டிருக்கேன். 30 பேருக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு சுயமாக முன்னேறி என் ரெண்டு மகள்களோட ரொம்ப சந்தோஷமாக இருக்கேன். இந்தக் கம்பெனியை வளர்க்கிறதுக்கு, எனக்கு மூணு வருசம் ஆச்சு. என் வலிகளையும் வேதனைகளையும் இதுல செலுத்தி கடுமையா உழைச்சேன். அதுக்கான பலனும் கிடைச்சிருக்கு. உண்மையைச் சொல்லணும்னா இமான் சொல்றதைப் பத்தியெல்லாம் யோசிக்கக்கூட, இப்போ எனக்கு நேரம் கிடையாது.
அவரே விட்டுட்டுப் போயிட்டு, இப்போ எதுக்கு எங்களைப் பத்தி பேசணும். என் மகள்கள்மேல அவருக்கு கொஞ்சமும் பாசம் கிடையாது. அவரோட இன்ஸ்டா பாருங்க. என் மகள்களோட போட்டோவையா போடுறாரு? திருமணத்தைக்கூட பிள்ளைங்கக்கிட்ட சொல்லல. எல்லாம் முடிஞ்சபிறகு கொஞ்சநாள் கழிச்சு வந்துப் பார்த்தாரு. ஆனா, பிள்ளைங்க பார்க்கவேணாம்னு சொல்லிட்டாங்க. நான் பட்டக் கஷ்டத்தை பொண்ணுங்க கூடவே இருந்து பார்த்திருக்காங்க. அவங்களுக்கு என் கஷ்ட நஷ்டங்கள் எல்லாமே தெரியும். இமான் நல்லவரா இருந்தா, பொண்னுங்க அவரைப் பார்த்திருப்பாங்களே? ஏன் பார்க்கல?
இப்போ, இமானுக்கு பட வாய்ப்புகள் சரியா இல்லை. அதனாலதான், இப்படியெல்லாம் பேசி பப்ளிசிட்டி தேடிக்க விரும்புறார். பட வாய்ப்புகளையும் பிடிக்க நினைக்கிறார். யூட்யூப்ல அவர் இப்படி பேசினது, என்னைவிட சிவாகார்த்திகேயனையும் அவரது குடும்பத்தையும் எந்தளவுக்கு பாதிக்கும்னு அவர் யோசிக்கல. இதை, நினைக்கும்போது 12 வருசம் இப்படிப்பட்டவரோடு வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிட்டேனேன்னு மீண்டும் வருத்தப்படுறேனே தவிர, அவர் பேசினதை விவாதிக்கிறதுக்கு எனக்கு நேரமே இல்ல.
ஒவ்வொரு இசையமைப்பாளரும் அவங்க பண்ணிட்டிருக்க படங்களைப் பத்திதானே பேசுவாங்க. இப்போ, பட வாய்ப்புகள் இல்லைங்குறதால புராஜெக்ட் பத்தி பேசமாட்டேங்குறார் இமான். அவரோட புது வாழ்க்கையில, நிம்மதியா சந்தோஷமா இருந்திருந்தாருன்னா எங்களைப் பத்தி பேசயிருக்கமாட்டாரே? இதுல, பாதிக்கப்பட்டது சிவகார்த்திகேயன்தான். பாவம் அவரு.
எங்களுக்கு நல்லது பண்ண நினைச்சவருக்கு இப்படியொரு சங்கடம் ஆகிடுச்சு. இதுக்காக, நான் வருத்தப்படுறேன். அதுக்கூட சிவகார்த்தியேன், அந்தப் பஞ்சாயத்து டைம்ல பேசினார். அவ்ளோதான். அதுக்கப்புறம் அவர்கிட்ட நான் பேசவேக்கிடையாது.
என் மகள்களோட எதிர்காலத்துலயும் வேலையிலும் கவனத்தை செலுத்தி பிஸியா இருக்கேன். கடவுளும் என்னை ஆசிர்வதிச்சிருக்கார். மகள்களோட சந்தோஷம்தான் எனக்கு முக்கியம். மத்தபடி, இவர் பேசுறதையெல்லாம் கவனிக்க எனக்கு விருப்பமில்ல. தப்பு செய்றவங்கதான் ஃபீல் பண்ணிகிட்டு புலம்பிக்கிட்டு அழுதுகிட்டு இன்டர்வியூ கொடுத்துக்கிட்டு இருப்பாங்க. இமான், இப்போ அதைத்தான் செஞ்சிட்டிருக்கார்” என்கிறார்.
+ There are no comments
Add yours