பிக் பாஸ் வீட்டில் யார் யார் எப்போது முட்டிக் கொள்வார்கள், எப்போது கூட்டணிகள் மாறும் என்று எதுவும் புரியவில்லை. திடீர் திடீரென்று ஏதேதோ விபரீதமாக நிகழ்கிறது.
நிக்சனுக்கும் பிரதீப்பிற்கும் இடையில் உக்கிரமான மோதல் நிகழும் என்பது யாருமே எதிர்பாராதது. பிரதீப்பின் பேச்சு அடாவடியாக இருந்தாலும் நிக்சனின் தன்மானத்தை உசுப்புவதுதான் அவரின் நோக்கம் என்பதாகத் தெரிகிறது.
பக்கத்து வீட்டு காம்பவுண்டு சுவரில் சாய்ந்து வம்பு பேசும் இல்லத்தரசிகள் மாதிரி மாயாவும் பூர்ணிமாவும் அவ்வப்போது கூடி சதியாலோசனை செய்கிறார்கள். அவர்களின் இப்போதைய டார்கெட் ஜோவிகா. இந்த சீசனின் ‘விஷ பாட்டில்’ என்கிற டைட்டிலை மாயாவிற்கு தாராளமாக தந்து விடலாம் போலிருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (DAY 10 EP11)
கோல்டன் ஸ்டார் போட்டி தொடர்ந்தது. “கலாய் செய்தும் வாங்கியும் மக்களை சிரிக்க வைச்சிருக்கேன். என்னோட ராப் பாட்டை, அழகான வரிகளை ரசிச்சிருக்காங்க. எனக்கும் ’கத்துத்தா’ன்னு கேட்டிருக்காங்க’ என்றெல்லாம் தான் என்டர்டெய்ன் செய்த விதத்தை நிக்சன் சொல்லிக் கொண்டிருந்த போது ஏழரையாக உள்ளே புகுந்த பிரதீப் “உன் பேரே மனசுல நிக்கல. சுரேஷ் இன்னமும் உன்னை நெல்சன்னுதான் கூப்பிட்டுக்கிட்டு இருக்காரு” என்று குத்தலாக சொல்ல ‘உங்களை கூடத்தான் கமல் சார் பிரவீன்னு கூப்ட்டாரு’ என்று நிக்சன் உடனே கவுன்ட்டர் அடித்தது நன்று.
அடுத்த வந்த பிரதீப் “பிக் பாஸ்ன்றது ஒரு சர்வைவல் கேம். நான் உள்ளே வரும் போதே கேப்டன்ஸி டாஸ்க்ல ரெண்டு பேரைத் தோற்கடிச்சேன். துண்டை வெச்சு வெறுப்பேத்தியிருக்கேன். துண்டை ஆட்டி ஆட்டி அதை ஒரு பிராப்பர்ட்டியா மாத்தியிருக்கேன்” என்று துண்டுக்கான விளம்பரம் போல துண்டுத் துண்டாக பேச “துண்டை ஆட்டறதெல்லாம் ஒரு என்டர்டெயின்மென்ட்டா?” என்று ஐஷூ சரியாகக் கேட்டார்.
‘கோல்டன் ஸ்டார்’ வென்ற கூல் சுரேஷ்
“அழுத்தப்பட்டது வைரமா மாறுவது மாதிரி உங்க எல்லோருடைய அழுத்தத்தையும் தாங்கி வைரமா மாறியிருக்கேன். பாட்டு பாடி எண்டர்டெயின் பண்ணியிருக்கேன்” என்று பிரதீப் தொடரும் போது நிக்சன் இடைமறித்தார். தன்னைக் குறித்து பிரதீப் முன்பு சொன்ன கமெண்ட் அவருக்கு உறுத்தியிருக்கும் போல. “நீ்ங்க ரூல்ஸ் படி கேம் ஆடல. சிக்கன் ஃபிரை கேட்டீங்க?” என்று சம்பந்தா சம்பந்தாமில்லாமல் ஒரு கேள்வியைக் கேட்டார். எண்டர்டெயின்மென்ட்டுக்கும் விதிமீறலுக்கும் என்ன தொடர்பு? இதற்கான பதிலைச் சொன்ன பிரதீப், பிறகு எரிச்சல் அடைந்து ‘உனக்கெல்லாம் கேள்வி கேக்க தகுதியே இல்ல. உக்காரு” என்று எகத்தாளமாகச் சொன்னவுடன் நிக்சனுக்கு பயங்கர கோபம் வந்தது. “நானும் இங்க ஒரு போட்டியாளர். எனக்கு தகுதி இல்லன்னு எப்படிச் சொல்லலாம்” என்று ஆவேசமாக ஆட்சேபித்தது சரியான விஷயம்.
விசித்ராவின் முறை வந்த போது “வீட்டுக்குள்ள நான் 15வது Contestant-ஆ உள்ளே வந்தேன். டிவி முன்னாடி உக்காந்திருந்த மக்கள் அப்பத்தான் எழுந்திருச்சி ஆர்வமா உக்காந்திருப்பாங்க. எல்லாத் துறையில இருக்கற மக்களும் ஆர்வமா என்னைப் பார்ப்பாங்க.. தாமரை இலை தண்ணீர் மாதிரிதான் விளையாடறேன். என்னோட உரையாடல்கள் சுவாரசியமா இருந்திருக்கும்’ என்று குறுக்கே பாய்ந்து கேள்வி கேட்பவர்களுக்கு வாய்ப்பே தராமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது பார்த்து சரியாக பஸ்ஸர் அடித்து அவருடைய பேச்சை நிறுத்தியது.
‘திருவிளையாடல்’ படத்தின் தருமி மாதிரி தனியாக அனத்துவது விசித்திராவின் ஒரு பழக்கமாக ஆகி விட்டது. ‘பேசறதுக்கு உரிமை இல்லன்னா.. என்ன இது ஷோ?’ என்று காமிராவிடம் பிறகு தனியாக உரிமைக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தார். (பிக் பாஸ் எப்படியும் 90’s kid ஆகத்தான் இருப்பார். எனவே விசித்ராவின் படங்களைப் பார்த்து பரவசமாக வளர்ந்த ரசிகராக இதற்கு தக்க விளக்கமளிப்பார் என்று நம்புவோம்).
அனைவரும் தங்களின் பிரதாபங்களை சொல்லி முடித்ததும் வாக்கெடுப்பு நடந்தது. “பிரதீப் லூசுத்தனமா பேசறாரோ… சரியா பேசறாரோ.. அவர் என்ன செய்யறார்ன்னு மக்கள் நிச்சயம் ஆர்வமா எதிர்பார்ப்பாங்க” என்று யூகித்துச் சொன்னது சரியான விஷயம். (பில்டப் பண்றனோ. பீலா விடறேனா.. இந்த உலகம் நம்மள உத்துப் பார்க்கணும். நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணணும்டா’ என்கிற வடிவேலு காமெடிக்கு சரியான உதாரணம் பிரதீப்).
இந்தச் சமயத்தில் பூர்ணிமாவிற்கு ஒரு பயங்கரமான சந்தேகம் வந்தது. “இங்க பேசறத வைச்சு ஓட்டு போடணுமா… அவங்க எண்டர்டெயின்னா இருக்கறத வைச்சு ஓட்டு போடணுமா?” என்று அவர் கேட்டதை பிக் பாஸ் சட்டையே செய்யவில்லை. ‘ஜோவிகா சொன்னது சரி’ என்று சொல்லி விட்டார் பூர்ணிமா அடுத்த முறை இதே சந்தேகத்தைக் கேட்ட போதும் பிக் பாஸ் மதிக்கவில்லை. “எனக்கு பிக் பாஸ் மேல கோவமா வருது. கம்ப்ளெயிண்ட் பண்ணப் போறேன். கன்பெஷன் ரூமிற்கு கூப்பிடுவாங்களா?” என்றெல்லாம் பிறகு ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார். (இது வரை பிக் பாஸ் மீதே யாரும் பிராது கொடுத்ததில்லை. கமல் எபிசோடில் பூர்ணிமா இது குறித்து உரிமைக்குரல் எழுப்பினால் அது புதுவிதமான புரட்சியாக இருக்கும்!).
அடுத்து வந்த பிரதீப், ‘கூல் சுரேஷ்’ பற்றி முற்றிலும் ஒரு புதிய பரிமாணத்தை முன்வைத்தார். “இவர் ஒரு மர்மமான நபரா இருக்காரு. கேக்கற கேள்விக்கெல்லாம் தெளிவா பதில் சொல்றாரு. எல்லோரையும் அப்சர்வ் பண்றாரு.. இன்டெலிஜெண்ட்டா கேம் ஆடறாரு. இவரோட எண்டர்டெயின்ட் வேற லெவல்ல இருக்கு” என்றெல்லாம் தலைமை ரசிகராக மாறி கூல் சுரேஷிற்கே பிரமோஷன் செய்து வாக்களித்து அமர்ந்தார்.
ஒரு ஆடு முன்னே சென்றால் அதற்குப் பின்னாலேயே மற்ற ஆடுகள் செல்வது உலக நடைமுறை. பிக் பாஸ் வீட்டிலும் அதுதான். எனவே அதற்கு அடுத்து வந்தவர்களும் பெரும்பான்மையாக சுரேஷிற்கு வாக்களித்தார்கள். எனவே ‘கூல்’ சுரேஷ் கோல்டன் ஸ்டார் வென்றார். நெகிழ்ச்சியில் அவருக்கு வார்த்தைகளே வரவில்லை. சுரேஷ் செய்யும் காமெடி, சமயங்களில் நிச்சயம் ரசிக்கும்படிதான் இருக்கின்றன. என்னவொன்று ஹைடெசிபலில் கத்துவதை மட்டும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
நிக்சனுக்கும் பிரதீப்பிற்கும் இடையில் நடந்த உக்கிரமான சண்டை
‘உனக்குத் தகுதியில்ல. உக்காரு’ என்று பிரதீப் எகத்தாளமாக சொன்னது நிக்சனின் மனதைப் பாதித்து விட்டது. எனவே டாஸ்க் முடிந்த பிறகு இருவருக்கும் இடையே உக்கிரமான வாக்குவாதம் ஏற்பட்டது. நிக்சன் அடித்தட்டு சமூகத்திலிருந்து கிளம்பி போராடி போராடி நிறைய அவமதிப்புகளைத் தாண்டி முன்னுக்கு வந்து கொண்டிருப்பவர். எனவே ஒரு சபையில் ‘உனக்குத் தகுதியில்ல.. உக்காரு’ என்று சொன்னது அவருடைய தன்மானத்தை தட்டி எழுப்பி தார்மீகமான கோபத்தை உருவாக்கியதில் முழு நியாயம் உள்ளது. அந்தக் கோணத்தில் இருந்து பார்த்தால்தான் அந்த வலி புரியும்.
“நீ யாரு தெரியுமா.. ஷோவை நல்லா பார்த்து ஃபுல் ஸ்ட்ராட்டஜியோட இங்க வந்திருக்கே.. கெட்டவன்ற மாதிரி காண்பிச்சிப்பே. திடீர்னு லோ ஆவே.. அழுவே.. அப்படியே சேஞ்ச் ஆவே.. இந்த மாதிரி கேவலமா ஜெயிக்கணும்னு எனக்கு அவசியமில்ல. நான் திறமை மூலமாக முன்னுக்கு வந்தவன். அதைக் காட்டத்தான் இங்க வந்திருக்கேன்.
என்னை தகுதியில்லன்னு சொல்றதுக்கு உனக்கு தகுதியில்ல’ என்றெல்லாம் நிக்சன் ஆவேசமாக பொங்கும் போது ‘அப்படித்தான் சொல்லுவேன்’ என்று இன்னமும் அவரை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார் பிரதீப். இவர்களின் மோதல் உச்சத்திற்குச் சென்று பிறகு சற்று தணிந்தது.
“நான் ரூல்ஸை கரெக்ட்டா ஃபாலோ செஞ்சு ஆடியிருக்கேன். அதைக் கேட்க யாருக்கும் தகுதியில்லன்னுதான் சொன்னேன்’ என்று பிறகு பிரதீப் அளித்த விளக்கத்தைக் கேட்டுக் கொண்ட நிக்சன் சமாதானத்திற்கு வந்தார். “வீரன் மாதிரி நடிக்கற கோழைன்னு என்னை சொல்றே… நான் வீரனா நடிக்கவேயில்லையே’ என்று நிக்சன் விளக்கம் அளிக்க “என்னடா நீ.. ஆர்டிஸ்ட்டுன்னு சொல்ற.. ராப்பர்ன்ற.. உரிமைக்குரல் எழுப்பறவன்னு சொல்ற.. வீரம் இல்லாத உன்னையெல்லாம் ஆர்ட்டிஸ்ட்ன்னு நெனச்ச என்னைத்தான் செருப்பால அடிச்சுக்கணும்” என்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய பிரதீப், நிக்சனை திட்டி விட்டு கிளம்பி விட்டார்.
பிரதீப் சொல்லும் உபதேசத்தின் அடிநாதம் என்னவாக இருக்கும் என்பதை யூகித்தால் “நீ உன்னை போராடி வந்தவன்னு சொல்ற.. பாடல் வரிகளில் புரட்சி பேசற.. சமூகத்தில் அப்படித்தான் தொடர்ந்து அவமதிப்புகள் வரும். போராடி போராடித்தான் மேல வரணும்.. டக்குன்னு கீழே போயிடாத’ என்கிற மோட்டிவேஷனைத்தான் பிரதீப் மறைமுகமாக தருகிறார் என்று தோன்றுகிறது. என்னவொன்று, அதை மிக அலட்சியமாக, எரிச்சலூட்டும் வகையில் சொல்கிறார் என்பதுதான் பிரச்சினை. அந்த அவமதிப்பையும் நிக்சன் எதிர்கொண்டுதான் முன்னேற வேண்டும். வலி தாங்க முடியாதவனால் முன்னேற முடியாது. அதிலும் பிக் பாஸ் என்கிற ரத்தபூமியில் நிரம்பவும் சூதானமாக இருக்க வேண்டியது பால பாடம்.
பிரதிப்பீன் குத்தலான வார்த்தைகளால் மனம் இடிந்து தனிமையில் சென்று கலங்கிக் கொண்டிருந்த நிக்சனை ஆறுதல் வார்த்தைகளால் மணி தேற்றியது சிறப்பான காட்சி. “அவரு சொல்றதால நமக்குத் தகுதியில்லன்னு ஆயிடுமா.. நாம ப்ரூவ் பண்ணுவோம். வெயிட்டை காண்பிப்போம்’ என்றார் மணி. ‘குடியா ராணி’ என்று எழுதப்பட்டிருந்த பிறந்த நாள் கேக்கை சந்தோஷமாக வெட்டினார் ரவீனா. ‘என்னது குடிகார ராணியா?’ என்று கலாய்த்தார் சுரேஷ். ‘doll queen’ என்று அதற்கு அர்த்தமாம். வீட்டில் செல்லம் கொஞ்சி எழுதியிருக்கிறார்கள்.
சேமியா உப்புமாவை ஆட்சேபித்த மாமியார் விசித்ரா
தேர்வுக்காலத்தில் எழுப்பும் அம்மா மாதிரி, காலை ஆறரை மணிக்கே மக்களை எழுப்பி விட்டார் சின்ன வீட்டு பிக் பாஸ். ‘மக்கள் வாக்கெடுப்பின் படி சின்ன வீட்டின் மக்கள் எப்போது எழுந்திருக்க வேண்டும்?” என்கிற கருத்துக் கணிப்பில் ஆறரை மணி என்று மக்கள் சொல்லியிருந்தார்களாம். (நாங்க எப்பயா சொன்னோம்?!). “ஆறரை மணின்னு எங்களுக்கு எப்படித் தெரியும். வாட்ச் வைங்க’ என்று காமெடி செய்தார் சுரேஷ்.
“என்னை இனிமேல் நாமினேட் பண்ணவே மக்கள் யோசிக்கணும். கன்.ஃபெஷன் ரூமில் உக்காரும் போது என் பேரே அவங்க வாயில் வரக்கூடாது. அந்தளவிற்கு என்னை நாமினேட் பண்ணவங்களை வெச்சு செய்யப்போறேன்..” என்று ‘ரவுடி பேபி’ ரேஞ்சில் டெரராக பேசிக் கொண்டிருந்தார் மாயா.
‘போட்டுத் தாக்கு’ என்கிற பாடலுடன் நாள் 10 விடிந்தது. பெரிய வீட்டு மக்களுக்கு மட்டும் ஜாலி. காலை பத்து மணிக்குத்தான் அவர்களுக்கு ‘வேக் அப்’ பாடல். கிச்சன் டீம் சேமியா உப்புமா செய்வதற்கான ஏற்பாடுகளில் இருந்தது. இதை எரிச்சலுடன் கவனித்துக் கொண்டிருந்த விசித்திரா ‘மாமியா’வாக மாறி “ஏம்ப்பா. நெஜம்மாவே உங்களுக்கு சமைக்கத் தெரியுமா.. சேமியாவை இப்படியா வேக வைக்கறது?’ என்று கேள்வி மேல் கேள்வியாக கேட்க ‘நாங்க செய்யறதைச் சாப்பிட்டுட்டு போங்க. அவ்ளதான்’ என்று சின்ன வீட்டு மக்கள் எகத்தாளமாகப் பேசினார்கள். “இன்னாப்பா.. இந்தப் பசங்க மரியாதை தர மாட்றாங்க?” என்று விசித்திரா அங்கலாய்க்க “சேமியா உப்புமால வெங்காயம், தக்காளிதான் போட முடியும். மரியாதையை எப்படி போடறது?” என்று பங்கமாக கலாய்த்துக் கொண்டிருந்தார், அப்போதுதான் குளித்து முடித்து விட்டு வந்த சுரேஷ்.
கூழ் மாதிரியாக வந்திருந்த சேமியா உப்புமாவை மக்கள் எரிச்சலுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அக்ஷயாவிற்கு மட்டும் பிடித்திருந்ததாம். ஜெயில் உணவிற்காக இப்போதே மனதளவில் தயாராகி விட்டார் போலிருக்கிறது. தன்னை நாமினேட் செய்த ரவீனாவிடம் எப்படியாவது ஒரண்டை இழுக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்த மாயா அதற்காக பல முயற்சிகளை செய்தார். ஆனால் அன்றைக்கு ரவீனா ‘பர்த்டே பேபி’ என்பதால் ரவுடி பேபியால் அதிக எதிர்ப்பைக் காட்ட முடியவில்லை.
பக்கத்து வீட்டு பாட்டிகள் மாதிரி பூர்ணிமாவும் மாயாவும் அவ்வப்போது காம்பவுண்டு சுவரில் சாய்ந்து புறணி பேச ஆரம்பித்து விடுகிறார்கள். என்னவொன்று இவர்கள் தாழ்ந்த குரலில் மற்றவர்களுக்கு புரியாத மாதிரி பேசுவதுதான் பிரச்சினை. ஆனால் இவர்கள் யாரைப் பற்றி பேசுகிறார்கள் என்பதை பிக் பாஸ் எடிட்டிங் டீம் சம்பந்தப்பட்ட நபரைக் காட்டி கச்சிதமாக போட்டுத் தந்து நமக்கு உதவி செய்கிறார்கள். ‘தங்களை யாரெல்லாம் நாமினேட் செய்திருக்கக்கூடும்’ என்கிற யூகத்தை இருவரும் அலசிக் கொண்டிருந்தார்கள். பழிவாங்கும் ஹிட் லிஸ்ட்டில் முதலில் இருப்பவர் ஜோவிகா. மாயா தியேட்டர் ஆர்டிஸ்ட் என்பதை அடிக்கடி நிரூபிக்கிறார். அவர் பேசும் போது முகபாவமும் உடல்மொழியும் கன்னாபின்னாவென்று மாறிக் கொண்டே இருக்கிறது.
சின்ன பிக் பாஸ் வீட்டில் தொடரும் சதியாலோசனை
ஷாப்பிங் செலவிற்கான முதல் தவணைத் தொகைக் கடனை மக்கள் திருப்பிக் கட்ட வேண்டிய நேரம். இதற்காக ஒரு புதிய டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். ஒருவேளை இதில் தோற்றால், கழிப்பறை தொடர்பான பொருட்கள், மேக்கப் சாதனங்கள், எலெக்ட்ரிக் பொருட்கள் உள்ளிட்டவை பறித்து எடுத்துச் செல்லப்படுமாம். ‘செயின் ரியாக்ஷன்’ என்கிற அந்தப் போட்டியில் ஐந்து நபர்கள் பக்கவாட்டில் நின்று தங்களின் கைகளின் இடைவெளிக்குள் ஐந்து பெட்டிகளை ஒருவருக்கொருவரின் ஆதரவில் அழுத்திப்பிடிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரம் வரை தாக்குப் பிடிக்காவிடில் அவுட். இதில் முதல் ரவுண்டில் அவுட் ஆகி ஷாக் தந்தார்கள்.
உடைந்த பெட்டிகளுக்கு மாற்றுப் பெட்டிகளை சிறிது நேரம் கழித்து எடுத்து வந்தவுடன் இரண்டாவது ரவுண்டில் வெற்றி கிடைத்தது. இந்தப் போட்டியின் போது சரமாரியான ஆங்கிலத்தில் ரன்னிங் கமெண்ட்ரி தந்து கொண்டிருந்த சுரேஷின் நகைச்சுவை ரகளையாக இருந்தது. இது போன்ற சமயங்களில் சுரேஷை ரசிக்க முடிகிறது. ‘எனக்கு ஏம்ப்பா எந்த டாஸ்க்குலயும் சான்ஸ் தர மாட்றீங்க?” என்று பலரிடமும் ஆட்சேபித்துக் கொண்டிருந்தார் விசித்ரா. (நீங்கதானே…தாமரை இலை தண்ணீர் மாதிரி இருப்பேன்னு சொன்னீங்க?’ என்று யாரும் கேட்கவில்லை).
பெரிய வீட்டிற்கு எதிராக சின்ன வீட்டின் சதியாலோசனை கன்னா பின்னாவென்று தொடர்ந்து கொண்டிருந்தது. இவர்களில் ஒருவர் எப்படியாவது கேப்டன் ஆகி எதிர் தரப்பை பழிவாங்க வேண்டும் என்று கூடி சபதம் எடுத்தார்கள். ‘ஜோவிகாவை தமிழ் எழுதிக் காட்டச் சொல்லணும்’ என்று சொல்லி வெடித்து சிரித்தார் மாயா. கூடவே பூர்ணிமாவும். (இப்படி சிரிச்சு சிரிச்சுதான் ஏற்கெனவே ஒரு கேஸ் பெண்டிங்ல இருக்கு!). “கிச்சன் ஏரியா.. ஏம்ப்பா.. இவ்வளவு கேவலமா இருக்கு. சுத்தம் பண்ணுங்கப்பா” என்று கேட்டுக் கொண்டிருந்தார் விசித்ரா. ‘பார்க்கலாம். பார்க்கலாம்’ என்று மழுப்பினார் விஷ்ணு.
விஷ்ணுவை வாக்குமூல அறைக்கு அழைத்த சின்ன பகவதி.. மன்னிக்க சின்ன பிக் பாஸ் “பிக் பாஸ் வீட்டு வாழ்க்கையை ஒரு பாடலாக எழுதி பாட வேண்டும். இதற்கு சரிப்பட்டு வருபவர்களை துணைக்கு சோ்த்துக் கொள்ளலாம்’ என்று அவருக்கு டாஸ்க் தந்தார். ‘மாஸாக வீட்டில் ஆறு பேரு’ என்று பிரதீப் முதல் வரியை ஆரம்பித்துத் தர “அங்க பதினோரு பேரும் ரொம்ப போரு’ என்று சுரேஷ் அடுத்த வரியை சொல்ல கச்சேரி களை கட்டியது.
ஆக பெரிய வீட்டிற்கும் சின்ன வீட்டிற்கும் இடையே ஓர் அறிவிக்கப்படாத போர் தொடங்கி விட்டது. இதில் ஜெயிக்கப் போகிறவர் யார்?
+ There are no comments
Add yours