ஆனால், ஒரு பெண்ணுக்கு அவரது புறஅழகு, ஒப்பனை, கவர்ச்சி போன்வற்றின் மூலம்தான் வெற்றி கிடைக்கிறது என்று எண்ணுவது அப்பட்டமான ஆணாதிக்கத்தனம் மட்டுமல்ல, அநாகரிகமான சிந்தனையும் கூட. எந்தவொரு துறையிலும் பெண் வெற்றி பெற்று முன்னேறினால், அதற்கு அவரது அழகு மட்டுமே காரணம் என்று ஆண்கள் கொச்சையாக புறணி பேசுவது முறையானதல்ல.
ஆனால் இந்த டாஸ்க்கில் பிக் பாஸ் வீடு வெற்றி பெற்றதால் ‘மேக்கப் பொருட்களை அப்புறப்படுத்தும்’ விபத்து நடக்கவில்லை. பிரதீப்பின் அதே திசையிலேயே சிந்திக்கும் சுரேஷ், ‘மேக்கப் இல்லாம அவங்களைப் பார்க்க உங்களுக்கு கொடுத்து வைக்கலை’ என்று சர்காஸ்டிக்காக கேமிரா முன்பு பேசினார். பிரதீப்பின் மட்டரகமான ஐடியா பெண்களின் காதுகளுக்குச் சென்றது. ‘மேக்கப்பினால்தான் நாம ஜெயிக்கறோம்ன்னு அவங்க என்ன சொல்றது.. நாமளே ஒப்பனையைக் கலைத்து ஒரு சிறு புரட்சியை செய்வோம்’ என்று மாயா, பூர்ணிமா, அக்ஷயா ஆகிய மூவரும் டாஸ்க்கிற்கு முன்பே அதை செயல்படுத்தியது நன்று. ஜோவிகாவிடம் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது. எந்தவொரு பிரச்சினை கிளம்பினாலும் அதை சம்பந்தப்பட்ட நபரிடமே நேரடியாக சென்று விசாரித்து விடுகிறார். எனவே ‘மேக்கப்’ பிரச்சினை பற்றி அவர் சுரேஷிடம் சென்று நேரடியாக கேட்க, அவர் எதையோ சொல்லி மழுப்ப, “கேர்ல்ஸ்.. நான் உங்க போராட்டத்துல சேர விரும்புல. அவங்க கிடக்கறாங்க’ என்று சொல்லி ஒப்பனையைக் கலைக்கவில்லை. ‘இவங்கள்லாம் ஒரு ஆளு’ என்கிற மாதிரி நினைத்தார் போலிருக்கிறது.
அக்ஷயாவும் ‘மேக்கப் விவகாரம்’ பற்றி நேரடியாக பிரதீப்பிடம் உரையாடினார். ‘அழகுன்றது சப்ஜெக்டிவ். புற அழகு முக்கியமில்லை. அதை உடைக்கத்தான் ஐடியா சொன்னேன்’ என்று சற்று பிளேட்டை மாற்றிய பிரதீப், மீண்டும் நிலைக்கு வந்து ‘இப்ப நீயே பாரேன்.. டிவி பார்க்கறவன் யாருக்கு ஓட்டு போடுவான்.. எனக்கா.. இல்ல அழகா இருக்கற பொண்ணுக்கா’ என்று அபத்தமாக வாதாட “அழகா இருக்கறதாலயே வாக்களிக்க மாட்டாங்க.. கேரக்ட்டரையும் பார்ப்பாங்க’ என்று அக்ஷயா சுருக்கமாகச் சொன்னது சிறப்பு. பிரதீப் நிறைய புத்தகங்களை வாசிக்கிறார் என்பது ஆரம்ப நாள் வீடியோவில் தெரிந்தது. என்றாலும் ஏன் இப்படி பல திசைகளிலும் வக்கிரமான கோணல்களில் பாய்கிறார் என்பது புரியவில்லை. படித்ததின் மூலம் வருகிற சிந்தனைகளை செயல்களிலும் பின்பற்ற முயல்வதுதான் நல்ல வாசிப்பிற்கான லட்சணம்.
+ There are no comments
Add yours