விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அக்டோபர் 19 -ம் தேதி படம் திரைக்கு வர உள்ளது. இதற்கிடையில் இசை வெளியீட்டு விழாவும் ரத்தானது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றதை ஏற்படுத்தியது. இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாக ‘லியோ’ படக் குழு தினமும் அப்டேட்களை அள்ளித் தெளித்த வண்ணமிருக்கின்றனர். இந்நிலையில் கோலிவுட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதையடுத்து நேற்று ட்விட்டர் டைம்பாஸ் ஸ்பேஸசில் ‘லியோ’ படத்தைப் பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார் தயாரிப்பாளர் லலித் குமார், “ட்ரெய்லரை எடிட் செய்யும்போது நானும், லோகேஷும் இருந்தோம். அப்போ விஜய் சார் கால் பண்ணி ட்ரெய்லர் எப்படி இருக்குனு கேட்டார். அவருக்கு அனுப்பினோம். விஜய் சார் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு ‘ஓகே நல்ல இருக்கு’ ன்னு சொன்னார். காஷ்மீரில் 41 நாட்கள் படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். மைனஸ் டிகிரியில் எல்லோரும் வேலைபார்த்தார்கள். அதனால்தான் பணியாளர்களை அங்கீகரிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டோம்.
அந்த ஹைனா மிருகத்தின் படப்பிடிப்பின்போது விஜய் சார் 1000 ஜூனியர் ஆர்டிஸ்டுக்கு மத்தியில் எதுவுமே இல்லாமல் ஹைனா இருப்பதுபோல் கற்பனை செய்து நடித்திருப்பார். அதுதெல்லாம் பிரம்மிப்பாக இருந்தது.
பின்னர் தான் கிராப்பிக்ஸில் ஹைனா மிருகம் சேர்க்கப்பட்டது. விஜய் சார் ரொம்பக் கடுமையா உழைச்சிருக்கார். லோகேஷ், படக்குழுவினர், விஜய் சார், பணியாளர்கள் எல்லோரும் அந்தக் கடும் குளிரில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அதனால் படம் பயங்கரமாக வந்திருக்கு. அது படம் வெளியாகும்போது உங்களுகேத் தெரியும்.
படத்தை நாங்கள் பார்த்துவிட்டோம், விஜய் சாரும் பார்த்துவிட்டார். எல்லோருக்கும் முழு திருப்தி. ‘லியோ’ லோகேஷின் ‘LCU’வில் இணையுமா என்பதை படத்தில் சஸ்பன்ஸாக கடைசிவரை வைத்துள்ளோம். படம் பார்த்து எல்லோரும் தெரிந்து கொள்வீர்கள். படத்தின் முதல் பாதி பின்னணி இசை வேலைகள் முடிந்துவிட்டன. அனிருத் எப்போதும்போல பயங்கரமாக மியூசிக் போட்டிருக்கார். இரண்டாம் பாதிக்கான வேலைகள் தொடங்கியிருக்கிறது. அக்டோபர் 10ம் தேதிக்குள் எல்லா வேலைகளும் முடிந்துவிடும்.
படத்தை தமிழ்நாட்டில் ஏராளமான திரையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். உலகம் முழுவதும் 25000 – 30000 திரையில் வெளியிடவுள்ளோம். ‘லியோ’ படம் குறித்த அப்டேட்டுகள் இன்னும் நிறைய வரும் நீங்களே பார்ப்பீர்கள். காலை 4 மணி காட்சிக்காக அரசிடம் அனுமதி கேட்டு வருகிறோம். அதுகுறித்த அப்டேட் இந்த வாரம் வந்துவிடும். ப்ரீமியர் ஷோ எதுவும் கிடையாது. இசை வெளியீட்டு விழா நடக்கல, அதனால பட ரிலீஸ்க்கும் முன்னால் ரசிகர்களுக்காக எதாவது பேசமுடியுமா என்று விஜய் சார் கிட்ட கேட்டுப் பார்க்கிறேன். இந்த முறை பங்களாதேஷிலும் ‘லியோ’ வெளியாகும். அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.
+ There are no comments
Add yours