ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் மறைந்த பின்னணி பாடகர் மற்றும் திரைப்பட நடிகர் ஆன மலேசியா வாசுதேவன். அவரின் மகன் தான் யுகேந்திரன் வாசுதேவன்.
தந்தையைப் போலவே இவரும் ஒரு பின்னணி பாடகர், நடிகர் மற்றும் இசை அமைப்பாளரும் கூட. இதுவரை 600க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
ஒரு மிருதங்கக் கலைஞராக இசைப் பயணத்தை தொடங்கிய யுகேந்திரனின் முதல் பாடல், உழவன் மகன் திரைப்படத்தில் வரும் செந்தூரப்பூவே. அதில் ஆடு மேய்க்கும் சிறுவனின் குரலில் பாடி இருப்பார்.
பின்னணி பாடகராக “பொள்ளாச்சி சந்தையில்” மூலம் அறிமுகமான இவர், இன்றும் இளம் தலைமுறைகள் மத்தியில் ரசிக்கப்படும் பல எவர்கிரீன் பாடல்களின் சொந்தக்காரர். காதலர் தினத்தில் ஓ மரியா, நேபாளியில் `சுத்துதே சுத்துதே’, தேவதை கண்டேனில் `விளக்கு ஒன்று திரிய பாக்குது’, பார்த்தேன் ரசித்தேன் திரைப்படத்தில் `பார்த்தேன் பார்த்தேன்’ போன்ற பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
பார்த்தேன் ரசித்தேன் திரைப்படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக இருந்ததாகக் கூறியிருக்கிறார். இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் பத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். ஏ ஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா போன்ற பலரின் இசையில் இவர் பின்னணி பாடகராக பாடல்களை பாடியுள்ளார். பாடல்கள் மட்டுமல்லாமல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் அஜித் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், நடிகர் விஜய்யுடன் யூத், திருப்பாச்சி, பகவதி என ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டில் வெளிவந்த மிஷ்கினின் யுத்தம் செய் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். திரைப்படங்கள் அல்லாமல், சாவித்திரி, கோலங்கள், மேகலா போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
தற்போது தொடங்கியுள்ள பிக் பாஸ் சீசன் செவனில் போட்டியாளராக கலந்து கொள்கிறார். தனது பல ஃபேவரிட் பாடல்களுக்கு சொந்தக்காரர் இவர்தான் என்று தெரியாத இளைஞர்கள் மத்தியில், இந்நிகழ்ச்சியின் மூலம் அங்கீகரிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
+ There are no comments
Add yours