“ஒரு நல்ல படத்தைப் பற்றி பேச முடியாதது வருத்தம்” – பெங்களூரு சம்பவம் குறித்து சித்தார்த் | Siddharth on being forced to leave Chithha event in Bengaluru

Estimated read time 1 min read

சென்னை: ஒரு நல்ல படத்தைப் பற்றி பேச முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ள படம் ‘சித்தா’. இதை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் நடிகர் சித்தார்த் கலந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அரங்குக்குள் நுழைந்த கன்னட அமைப்பினர் தகராறில் ஈடுபட்டு, சித்தார்த் முன்பு சூழ்ந்துகொண்டு அவரை அங்கிருந்து வெளியேறுமாறு முழக்கம் எழுப்பினர். இதையடுத்து, நன்றி தெரிவித்துக்கொண்டு நடிகர் சித்தார்த் மேடையிலிருந்து இறங்கிச் சென்றார். இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவத்துக்கு நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சிவராஜ் குமார் இருவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் இந்த விவகாரம் குறித்து சித்தார்த் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: முதன்முறையாக ஒரு தயாரிப்பாளராக, என்னுடைய திரைப்படம் திரையரங்குகளில் வெளிவருவதற்கு முன்பாகவே பலருக்கும் அதை திரையிட்டுக் காட்டினேன். சென்னை மற்றும் கொச்சியில் ஊடகங்களுக்கும் படம் திரையிடப்பட்டது. பெங்களூருவிலும் அப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தோம். ரிலீசுக்கு முன்பாக சுமார் 2,000 மாணவர்களுக்கு இப்படத்தை காட்ட திட்டமிட்டிருந்தேன். இதுவரை அப்படி யாரும் செய்ததில்லை. அன்றிரவு கன்னட நட்சத்திரங்களுக்கும் படத்தை திரையிடும் திட்டமும் இருந்தது. ஆனால், காவிரி போராட்டத்துக்கு மதிப்பளித்து நாங்கள் அனைத்தையும் ரத்து செய்தோம். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் அதையும் தாண்டி ஒரு நல்ல படத்தைப் பற்றி அங்கிருந்தவர்களுடன் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது.

கலந்துரையாடலுக்குப் பிறகு பத்திரிகையாளர்கள் படத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அங்கு என்ன நடந்தது என்பதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள். அதுவும் பல கேமராக்களுக்கு முன்னால் நடந்தது. நான் அது பற்றி பேச விரும்பவில்லை. படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கவனத்தை சிதறடிக்கும் வகையில் எதையும் பேச விரும்பவில்லை. என் படத்துக்கும் காவிரி பிரச்னைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது பணத்தை செலவழித்து நான் தயாரிக்கும் படங்களில் எனது சமூகப் பொறுப்பு வெளிப்படும் என்று நம்புகிறேன்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours