சாதாரண கதையை எடுத்துக்கொண்டு, அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், சாம்பார் பொடி, ரசப்பொடி, இட்லி பொடி, பருப்பு பொடி என எல்லாவற்றையும் பரபரவென மழைச்சாரல் மாதிரி தூவி, ஆங்காங்கே குடைமிளகாய், கேரட், பீன்ஸ் போன்றவற்றை நறுக்கிப்போட்டு, தேவைக்கேற்ப உப்பை போட்டு, அடுப்பை ஹை ஃப்ளேமில் வைத்து அப்படியொரு பிரட்டு, இப்படியொரு பிரட்டு என பிரட்டி போட்டு, தொட்டுக்கொள்ள டொமாட்டோ கெட்ச்சப் வைத்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் பொயப்படி ஶ்ரீனு. ‘நல்லாயிருந்தா சொல்லுங்க. இன்னொன்னு பண்ணித்தரேன்’ என்பது போல சீக்வெலுக்கான லீடையும் கொடுத்து ‘நன்றி மீண்டும் வருக !’ என போர்டு போட்டு முடிக்கிறார்.
படத்தில் ஸ்டன்ட் காட்சிகள் இருக்கலாம். ஆனா, இதில் ஸ்டன்ட் காட்சிகளுக்குள் படத்தை வைத்திருக்கிறார்கள். ‘அகண்டா’வின் இயக்குநர் பொயப்படி ஶ்ரீனு – ஸ்டன்ட் இயக்குநர் ஸ்டன் சிவா கூட்டணியில் உருவான ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் பயங்கரமாக பேசப்பட்டது. அகண்டா வைபிலிருந்து இன்னும் அவர்கள் வெளியே வரவில்லை போல. ‘வழி நெடுக காட்டுமல்லி’ என்பது போல படம் நெடுக ஆக்ஷன் தான். ஒருவர் திரையில் சும்மா நிற்கிறார் என்றால், அடுத்த ஷாட்டில் அவர் முகத்தில் பன்ச் விழுகிறது. ‘வார்டன்னா அடிப்போம்’ என்ற வடிவேலுவின் காமெடியை போல, ஃப்ரேமில் இருந்தாலே அடி விழுகிறது, ஈட்டி பாய்கிறது. ஜவுளி கடைகளில் பில்லிங் செக்ஷனில் படபடவென ரசீதில் சீல் குத்தப்பட்டு அதை பையோடு சேர்த்து ஸ்டாப்ளர் பின் அடிக்கப்பட்டு அத்தனை வேகமாக நகர்த்துவார்கள். அப்படி எதிர்க்க யார் வந்தாலும் குத்தி கிழித்துக்கொண்டு போகிறார்கள். அளவாக இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். பீட்சா, பர்கரில் ‘Cheese Overloaded’ என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அது போல, இதில் ஆக்ஷன் ஓவர்லோடடாக இருக்கிறது.
+ There are no comments
Add yours