கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தன் மனைவி வித்யா (அபிராமி), அம்மா (கலையரசி) மற்றும் கை குழந்தையாக இருக்கும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் தொழிலதிபரான பாலன் (சமுத்திரக்கனி). அப்போது “சொல்லாததும் உண்மை’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து தொகுப்பாளர் ராஷ்மி ராமகிருஷ்ணனிடமிருந்து (லட்சுமி ராமகிருஷ்ணன்) வித்யாவிற்குத் தொலைபேசி அழைப்பு வருகிறது. ஷோபாவின் (முல்லை அரசி) குழந்தையைச் சட்டத்திற்குப் புறம்பாக ‘தத்தெடுத்தல்’ என்ற பெயரில் கடத்தி வைத்திருப்பதாக வித்யா மேல் குற்றச்சாட்டை வைக்கிறார் ராஷ்மி ராமகிருஷ்ணன். பதறும் வித்யா அதை மறுக்கிறார்.
பிரதான கதாபாத்திரங்களாக சமுத்திரக்கனியும் அபிராமியும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்தாலும், அவர்களையும் தாண்டி நம்மைக் கவனிக்க வைப்பது முல்லை அரசிதான். தனியாளாகப் பல காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறார். ராஷ்மி ராமகிருஷ்ணன் என்ற பெயரில் ‘மரு வைத்து மாறு வேஷத்தில்’ (!) வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். தொடக்கத்தில் திரையை ஆக்கிரமித்து சிறிது ரசிக்க வைத்தாலும் அடுத்தடுத்து வரும் தேவையில்லாத காட்சிகளால் சோதிக்கவே செய்கிறார்.
நிகழ்ச்சி இயக்குநராக வரும் பாவெல் நவகீதன் சில காட்சிகள் வந்தாலும் தன் நடிப்பால் தனித்து நிற்கிறார். வினோதினி வைத்தியநாதன், கலையரசி, அனுபமா குமார், விஜே ஆஷிக், ஆடுகளம் நரேன், ரோபோ ஷங்கர், ‘முருகா’ அசோக், உதய் மகேஷ் எனத் துணை கதாபாத்திரங்கள் எந்த அழுத்தமும் தராமல் திரையில் வரிசை கட்டி நிற்க, இவர்களோடு கௌரவத் தோற்றத்தில் மிஷ்கினும் தலைகாட்டி விட்டுச் செல்கிறார்.
+ There are no comments
Add yours