சினிமா விபத்துக்கள் – பாபு நிலை யாருக்கும் வரக் கூடாது – Cinema accidents

Estimated read time 1 min read

சினிமா விபத்துக்கள் – பாபு நிலை யாருக்கும் வரக் கூடாது

19 செப், 2023 – 13:25 IST

எழுத்தின் அளவு:


Cinema-accidents---No-one-should-face-Babu's-situation

திரைப்படங்களில் ஸ்டன்ட் காட்சிகள் எப்படி படமாகிறது என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அவ்வளவாகத் தெரியாமல் இருந்தது. ஜாக்கி சான் படங்களைப் பார்த்த பிறகுதான் சினிமாவில் எடுக்கப்படும் சண்டைக் காட்சிகளில் அவ்வளவு ஆபத்துக்கள் இருக்கிறதா என்பது ரசிகர்களுக்குத் தெரிய வந்தது.

30 ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த ஜாக்கி சான் படங்களின் முடிவில் அந்த சண்டைக் காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டது என்பதைக் காட்டுவார்கள். அவ்வளவு பாதுகாப்பு உபகரணங்களை வைத்து படப்பிடிப்பு நடத்தியும் அவருக்கு பலத்த அடி ஏற்பட்ட சம்பவங்களும் உண்டு. தனது ஒவ்வொரு படத்திலுமே ரிஸ்க் எடுத்து சண்டைக் காட்சிகளில் நடித்தவர் ஜாக்கி சான்.

அவரைப் போலவே பல ஹாலிவுட் படங்களின் சண்டைக் காட்சிகளும் மிகுந்த ரிஸ்க் எடுத்து படமாக்கப்பட்ட காலம் உண்டு. இப்போதுதான் ப்ளூ மேட், க்ரீன் மேட், விஎப்எக்ஸ் என பல தொழில்நுட்பங்கள் அந்த சண்டைக் காட்சிகளை மிகுந்த சிரமம் இல்லாமல் படமாக்க துணையாக இருக்கின்றன. ஆனால், அந்தக் காலங்களில் அப்படியான வசதிகள் கிடையாது.

இந்திய சினிமாவிலும் காலம் காலமாக பல விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. சிலர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர், பலர் உயிர் இழந்த சோகமும் நிகழ்ந்திருக்கிறது. பல ஸ்டன்ட் கலைஞர்களின் உயிர் இப்படித்தான் பறி போனது.

இந்தியத் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் 1983ம் ஆண்டில் வெளிவந்த ‘கூலி’ படத்தில் நடித்த போது கண்ணாடி அவரது வயிற்றில் கிழித்து பலத்த காயமடைந்தார். நல்ல வேளையாக சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்து வந்தார்.

‛என் உயிர் தோழன்’ பாபு
1990ம் ஆண்டு ‘என் உயிர் தோழன்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் பாபு. அவரது முதல் படம் தோல்வியடைந்தாலும் அவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. தமிழ் சினிமாவில் அடுத்த ஒரு திறமையான ஹீரோவாக வலம் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அதன்பின் ‘பெரும்புள்ளி, தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு’ ஆகிய படங்களில் நடித்தார். அவரது அதீத நடிப்பார்வத்துக்கு அவரது வாழ்க்கையைப் பறி கொடுக்க வேண்டிய ஒரு நிலை அவருக்கு ஏற்பட்டது.

முதுகெலும்பு உடைந்தது
1991ம் ஆண்டு பார்த்திபராமன் இயக்கத்தில் அவர் கதாநாயகனாக நடித்து வந்த படம் ‘மனசார வாழ்த்துங்களேன்’. அப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வந்தது. ஒரு சண்டைக் காட்சிக்காக மேலே இருந்து கீழே குதிக்க வேண்டிய காட்சி. இயக்குனர் மற்றும் படக்குழுவினர் டூப் போட்டு எடுத்துக் கொள்ளலாம் என எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அவரே மேலிருந்து கீழே குதித்தார்.

அப்போதெல்லாம் இப்படி குதித்தால் தரையில் ‘பெட்’களை மட்டும்தான் போட்டு வைப்பார்கள். சில சமயங்களில் வலைகளும் வைக்கப்படும். ஆனால், பாபு குதித்த போது டைமிங் மிஸ்ஸாகி அவர் அந்த பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி கீழே விழ நேரிட்டது. விழுந்த வேகத்தில் முதுகெலும்பு உடைந்தது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

30 ஆண்டுகள் வேதனை
இருந்தாலும் அவரால் முன்பைப் போல எழுந்து நடமாட முடியவில்லை. தீவிர சிகிச்சைக்குப் பின் கொஞ்சம் நடந்தவர் மீண்டும் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. படுத்த படுக்கையாக வாழ்க்கையத் தள்ள வேண்டிய கட்டாயம். ஒரு வருடம், இரண்டு வருடமல்ல, சுமார் 30 ஆண்டுகள்.

அவருடைய மருத்துவ செலவுகளுக்கு பணம் கொடுத்து வந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான அவரது அப்பா, சீட்டு கட்டியதில் ஏமாந்து பணத்தைப் பறி கொடுத்தார். அதன்பின் பாபுவின் மருத்துவ செலவுகளைப் பார்த்து வந்த அவரது தம்பி திடீரென மரணமடைந்தார். பின்னர் அவரது அப்பாவும் இறந்து போனார்.

மறைவு
தினசரி வாழ்க்கையை நகர்த்தக் கூட முடியாமல் பெரும் அவதிக்குள்ளானார் பாபு. சினிமா உலக நண்பர்கள் சிலர் சேர்ந்து அவருக்கு உதவி செய்தனர். பாபுவின் நண்பர்களும் உதவி செய்ய கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக படுத்த படுக்கையிலேயே தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர் உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானார்.

பாரதிராஜா இரங்கல்
சினிமாவில் பெரும் உச்சத்தைத் தொட வேண்டிய ஒருவரது கனவு, ஆரம்ப காலத்திலேயே சிதைந்து போனது. பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர் பாபு. அவரது மறைவுக்கு பாரதிராஜா தெரிவித்துள்ள இரங்கலில், “திரைத்துறையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வந்திருக்கவேண்டியவன், படப்பிடிப்பில் நடந்த விபத்தில்30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த ” என் உயிர் தோழன் பாபு ” வின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பல திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் அவர்களது இரங்கலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் பலத்த காயமடைந்து தனது வாழ்க்கையைத் தொலைத்த பாபுவின் நிலை யாருக்கும் வந்துவிடக் கூடாது என்பதுதான் பலரது இரங்கலாக உள்ளது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours