பாலிவுட் நடிகர் ஷாருக் கான் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள தனது ஜவான் படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் தீவிரமாக இருக்கிறார். ஜவான் படம் வரும் 7ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
படம் திரைக்கு வரும் முன்பாக 2.50 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்டன. இதன் மூலம் 8 கோடி ரூபாய் வரை வசூலாகி இருக்கிறது. தற்போது ஷாருக் கானின் மகள் சுஹானா கான் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் வெப் சீரஸில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் மற்றும் அமிதாப்பச்சன் பேரன் அகஸ்தியா நந்தா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த வெப் சீரிஸை சோயா அக்தர் இயக்குகிறார். வரும் டிசம்பர் மாதம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இது வெளியாக இருக்கிறது. ஆர்யன் கானும் வெப் சீரிஸ் இயக்கத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், பாலிவுட்டில் கஹானி 2 படத்தை இயக்கிய இயக்குனர் சுஜய் கோஷ் விரைவில் சுஹானா கான் மற்றும் ஷாருக் கானை வைத்து படம் இயக்கப்போவதாக குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது இப்படம் குறித்து மேலும் சில தகவல்கள் கிடைத்திருக்கிறது. அதன் படி சுஹானா நடிக்கும் படத்தில் ஷாருக் கான் கெளரவ தோற்றத்தில் மட்டும் நடிக்காமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக சுஜய் கோஷ் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் சுஹானாவை இப்படத்தில் பிரபலப்படுத்த முடியும் என்று ஷாருக் கான் கருதுகிறார். இப்படத்தில் சுஹானா உளவாளியாக நடிக்கிறார். இதில் உளவாளிக்கு வழி காட்டியாக நடிக்கப்போவது நடிகர் ஷாருக் கான் என்று தெரிய வந்துள்ளது. இப்படத்திற்கான படப்பிடிப்புக்கு தேவையான வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
+ There are no comments
Add yours