சிறைச்சாலை என்கிற திரைப்படம் (மலையாளத்தில் ‘காலாபானி’) 1996-ல் வெளியானது. பிரியதர்ஷனின் இயக்கத்தில், மோகன்லாலின் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தை ‘பேன் இந்தியா’ படங்களின் முன்னோடி எனலாம்.
மலையாளத் திரையுலகத்தைத் தாண்டி பிரபு, டெல்லி கணேஷ் போன்ற தமிழ் நடிகர்களும் இந்தியிலிருந்து தபு, அம்ரிஷ் புரி, அன்னு கபூர் போன்ற இந்தி நடிகர்களும் நடித்திருந்தார்கள். இந்தியா முழுக்க 450-க்கும் மேலான திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அந்தச் சமயத்தில் இது பெரிய ரெக்கார்டு. அசல் வடிவமான மலையாளத்தைத் தாண்டி இந்தி, தமிழ். தெலுங்கு போன்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது. மோகன்லாலிற்குத் தமிழில் குரல் தந்தவர் நடிகர் ராஜீவ். ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்ஷன், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், ஆடியோகிராஃபி என்று நான்கு பிரிவுகளில் தேசிய விருதுகளைப் பெற்றது. மாநில அளவிலும் நிறைய விருதுகளைக் குவித்தது.
பிரியதர்ஷன் + மோகன்லால் = வெற்றிக்கூட்டணி
இந்தியச் சுதந்திரப் போராட்டக் காலத்தில் நாட்டின் விடுதலைக்காக அஹிம்சை முறையில் போராடியவர்கள், பயங்கரவாத செயல்களைச் செய்தவர்கள் போன்றோர்களை அந்தமான் தீவில் உள்ள சிறையில் அடைத்து கொடுமையான தண்டனைகளையும் சித்திரவதைகளையும் பிரிட்டிஷ் அரசாங்கம் செய்தது. இது தொடர்பான வரலாற்றுச் சம்பவங்களை ‘கோவர்தன்’ என்கிற புனைவுப்பாத்திரத்தின் வழியாக இந்தப் படம் உணர்ச்சிகரமாக விவரித்திருக்கிறது. மலையாளத்தில் ‘கிளாஸிக்’ திரைப்படமாகக் கருதப்படும் ‘காலாபானி’ சிறந்த இந்தியச் சினிமாக்களின் வரிசையிலும் இடம்பெறும் தகுதியைக் கொண்டது. மலையாளத்தில் பிரியதர்ஷன் + மோகன்லால் கூட்டணி உருவாக்கிய பல திரைப்படங்கள் வெற்றியடைந்திருக்கின்றன. இந்தக் கூட்டணியில் உருவான நகைச்சுவைத் திரைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். இந்த வரிசையில் ஒரு மெகா பட்ஜெட் எமோஷனல் டிராமாவாக ‘காலாபானியை’ ஹாலிவுட் தரத்திற்கு நிகராக இயக்கிய பிரியதர்ஷன் பாராட்டுக்குரியவர்.
1965-ம் ஆண்டு. சேது என்கிற இளம் ராணுவ வீரர், அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது மாமாவான கோவர்தன் என்பவரைப் பற்றிய விவரங்களைத் தேடி அந்தமானுக்குச் செல்கிறார். அதன் மூலம் இதன் திரைக்கதை பிளாஷ்பேக் காட்சிகளாக விரிகிறது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் மிதவாதியாகச் செயல்பட்ட கோவர்தன் வன்முறையை விரும்பாதவர். ரயிலைக் கவிழ்க்க நண்பர்கள் வைத்த வெடிகுண்டை அகற்றச் செல்லும் போது குற்றவாளியாகப் பழி சுமத்தப்படுகிறார். திருமணக் கோலத்தில் இருக்கும் கோவர்தனை காவல்துறை கைது செய்து அழைத்துச் செல்கிறது. இருபதாண்டுகள் சிறைத்தண்டனை என்று தீர்ப்பு சொல்லும் பிரிட்டிஷ் அரசு, கோவர்தனை அந்தமான் சிறைக்கு அனுப்புகிறது. தனது கணவர் என்றேனும் திரும்பி வருவார் என்று கோவர்தனின் மனைவி காத்திருக்கும் நிலையில் அந்தமான் சிறைக்குள் என்னவெல்லாம் நிகழ்கிறது என்பதை உணர்ச்சிகரமான காட்சிகளின் வழியாக இந்தப் படம் விவரிக்கிறது.
கோவர்தன் இந்தியா திரும்பினாரா, தனது மனைவி பார்வதியைச் சந்தித்தாரா என்பதற்கான விடையை அறிய இந்தப் படத்தைப் பார்த்தாக வேண்டும்.
‘தமிழனோட ரத்தமில்ல… இந்தியனோட ரத்தம்…’
நடிப்பு ராட்சசனான மோகன்லால், சுதந்திர தாகம் கொண்ட ‘கோவர்தன்’ என்கிற இளைஞனின் பாத்திரத்தில் அநாயசமாகப் பொருந்தி விடுகிறார். பிரிட்டிஷ் விசுவாசியாக இருக்கும் தாய் மாமன் நெடுமுடி வேணுவை எதிர்த்துப் பேசுவது, கிராமத்து மனிதரின் முதுகில் கால் வைத்து இறங்கும் வெள்ளைக்காரரிடம் “An Indian’s back is not a foot board” என்று வெடிப்பது, சிறையை நடுங்க வைக்கும் அம்ரிஷ்புரியின் ஷூவை நாக்கால் சுத்தம் செய்வது, ‘தமிழனோட ரத்தம்’ என்று சொல்லும் பிரபுவிடம் ‘இந்தியன் ரத்தம்ன்னு சொல்லு’ என்று திருத்துவது என்று பல காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். இது போன்ற உணர்ச்சிகரமான காட்சிகள் ஒருபக்கம் என்றால் தபுவிடம் செய்யும் ரொமான்ஸ் இன்னொரு அழகான டிராக். “பொய் சொன்னா குளத்துல இருக்கற முதலை கடிச்சுடும்’ என்கிற பழைய நம்பிக்கையை தபு சொல்ல ‘பார்வதியை நான் லவ் பண்றேன்’ என்று சொல்லி விட்டு முதலை காலை இழுத்துச் செல்வது போல மோகன்லால் நடிப்பது ரசிக்கத்தக்கக் காட்சி.
‘தலைல முட்டினா பதிலுக்கு முட்டிடணும். இல்லைன்னா கொம்பு முளைச்சுடும்’ என்று சந்தோஷ் சுப்ரமணியம் ‘ஹாசினிக்கு’ தெரிந்த அறிவியல் சமாச்சாரம், இந்தப் படத்தின் ஹீரோயினான தபுவிற்குத் தெரியவில்லை. எனவே மோகன்லாலில் நெற்றியில் அவ்வப்போது முட்டி தன்னுடைய நெற்றிக் குங்குமத்தை ஒட்ட வைப்பதைப் பல காட்சிகளில் ஒரு பொழுதுபோக்காகவே செய்கிறார். சுதந்திரத் தியாகிகள் தொடர்பான படம் என்பதாலோ, என்னவோ, ‘செம்பூவே’ பாடலில் தபுவை மிகவும் சுதந்திரமான உடையில் இயக்குநர் காட்டியுள்ளார். கோவர்தனின் மீதுள்ள காதலைக் கண்கள் விரியும் சிரிப்பினாலேயே உணர்த்தி விடும் தபு, அவருக்காகப் பல ஆண்டுகள் காத்திருப்பது துயரம் கலந்த கவிதைத்தனம்.
தபுவிற்கும் மோகன்லாலிற்கும் உள்ள கெமிஸ்ட்ரியை விடவும் பிரபுவிற்கும் மோகன்லாலிற்கும் இடையிலான கெமிஸ்ட்ரிதான் நிறைய படத்தில் வந்திருக்கிறது. சிறையிலிருந்து தப்பிப்பதையே தன் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் பாத்திரம் பிரபுவிற்கு. ‘தப்பிப்பதற்கு தெம்புதான் முக்கியம்’ என்று நினைக்கும் பிரபு, சுற்றி நடப்பது எதைப் பற்றியும் கவலைப்படாமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். இந்தப் படத்திற்காக ஒப்பந்தம் செய்யும் போது, கால் எலும்பு முறிந்து சிகிச்சைக்காக பல நாள்கள் பிரபு படுக்கையிலிருந்துள்ளார். பிரபுவின் உடல் எடை கூடி விட்டதால் ‘எப்போதும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவராக’ முகுந்த் கேரக்ட்டரை இயக்குநர் படத்தில் சித்திரித்தாராம்.
கோகலேவின் ‘பாரத் சேவா’ சங்கத்தைச் சேர்ந்த மிதவாதி கோவர்தனாக மோகன்லால் நடித்திருக்க, இதன் எதிர்முனையில் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவராக பிரபு நடித்திருந்தார். தான் எப்படி சிறைக்கு வந்தேன் என்பதை பிரபு விவரிக்கும் அந்தச் சுருக்கமான ஃபிளாஷ்பேக் ‘நச்’சென்று பரபரப்பாக இருக்கும். நீரில் மூழ்கி பிரபு தப்பிக்க நினைக்கும் ஒரு தருணத்தில், ஒரு வெள்ளைக்காரர் பார்த்து விட்டுச் சுடப் போக, அவரைத் தள்ளி விட்டு பிரபுவைத் தப்பிக்க வைக்கும் ஒரு பெண் போராளி, பிறகு இருவரும் பரஸ்பரம் புன்னகைக்கும் காட்சி ஒரு ஹைக்கூ கவிதை. சாவர்க்கரின் உண்ணாவிரதத்தை மற்றவர்கள் ஆதரிக்க பிரபு மட்டும் கெத்தாகச் சாப்பிடச் செல்வார். “நாலு வேலையில்லாத வக்கீலுங்களும் முதலாளிமார்களும் அவங்க சொந்த நலனுக்காக ஆரம்பிச்ச கட்சி” என்று காங்கிரஸ் பற்றி காரசாரமாக விமர்சனம் செய்வார் பிரபு.
தப்பிக்கும் போதெல்லாம் பிடிபட்டு கடுமையான அடிவாங்கி முகத்தில் ரத்தம் வழியச் சாப்பாட்டை ஊர்ந்து சாப்பிடும் முதல் காட்சியிலேயே பிரபுவின் நடிப்பு மிரட்டலாக இருக்கும். ‘தமிழனோட ரத்தம்’ என்று அடிக்கடி சொல்லும் பிரபு, தன் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தண்டனையை ஏற்றுக் கொள்ளும் மோகன்லாலைப் பார்த்து கடைசியில் ‘இந்தியனோட ரத்தம்’ என்று சொல்வது உணர்ச்சிகரமான காட்சி.
ஒற்றுமையைக் குலைக்கும் மத அரசியல்
வரலாற்று ஆய்வாளர்களுக்கு சில மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால், இந்தப் படத்திற்குள் சாவர்க்கர் ஒரு முக்கியமான பாத்திரமாக வருகிறார். கொடுமையான ஜெயிலரான டேவிட் பெர்ரி கைதிகள் தேசபக்தி கோஷம் எழுப்புவதை ஆட்சேபிக்க அதையும் மீறி கோஷம் போட்டு சாவர்க்கர் மிதி வாங்கும் காட்சியில் நமக்கே வலிக்கிறது. அப்படியொரு சித்திரவதை. உணவில் பல்லி விழுந்திருப்பதால் சாப்பிட மறுப்பார் ராம் லக்கன் என்கிற பிராமணர். ‘சிறையில் மத அடையாளங்களை அணியக்கூடாது’ என்று அவருடைய பூணூலை அறுத்தெறிவார் மிர்ஸா கான். ராம் லக்கானின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கும் சாவர்க்கர் அதற்காக கோவர்தனின் ஆதரவை நாடுவதும், கைதிகள் அவரவர்களின் மத வழக்கங்களைப் பின்பற்றும் உரிமைக்காக அவர் போராடுவதும் சிறப்பான காட்சிகள்.
உண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் ராம் லக்கானின் வாயில் மலத்தைப் பலவந்தமாக ஊற்றும் காட்சியும், கட்டடத்தின் உச்சியிலிருந்து கீழே விழுந்து ராம் தற்கொலை செய்து கொள்ளும் காட்சியும் மனம் பதைக்கச் செய்பவை. “எங்களுடைய கலாசாரம் பாரம்பரியம் மிக்கது. ஒருவரையொருவர் மதித்து வாழ்கிறோம். எங்களுடைய பொறுமையைக் கோழைத்தனம் என்று எண்ணி விட வேண்டாம்” என்று தங்களின் உண்ணாவிரத முடிவை ஜெயில் டாக்டரிடம் சாவர்க்கர் ஆவேசமாகத் தெரிவிக்கும் காட்சி உணர்ச்சிகரமானது. சாவர்க்கராக அன்னு கபூரும் ராம் லக்கானாக டினு ஆனந்த்தும் சிறப்பாக நடித்திருந்தார்கள்.
ஸ்வராஜ் பத்திரிகை ஆசிரியர்களுள் ஒருவராக இருந்த டெல்லி கணேஷூம் அந்தமான் சிறைக்கு அனுப்பப்படுவார். இவர்கள் ஒரு குழுவாகச் சிறையிலிருந்து தப்பிப்பதற்கு எடுக்கும் முயற்சிகளும், அந்த முகூர்த்த நாள் தொடர்பான காட்சிகளும் அப்போது நடக்கும் திருப்பங்களும் ‘திக்… திக்’ நாடகம். மிகவும் சிரமப்பட்டு பொருள்களைச் சேர்த்துத் தயாரிக்கும் வெடிகுண்டுகள், திடீரென்று பெய்யும் பெருமழையினால் அணையும் போது நமக்கே ‘அய்யோ’ என்றிருக்கிறது. ‘எப்படியும் மாட்டிக்கப் போறாங்க’ என்று நமட்டுச்சிரிப்பு சிரிக்கும் பிரபுவை மோகன்லால் கண்டிப்பார். தப்பிக்கும் முயற்சிக்காக இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாகச் சுட்டுக் கொல்லப்படும் காட்சி, ஒரு ‘மினி ஜாலியன் வாலாபாக்’ சம்பவம். இந்தக் காட்சிக்கோர்வை எடுக்கப்பட்ட விதமும் பின்னணியில் ஒலிக்கும் இசையும் மனதை உருக வைக்கும் அளவில் இருக்கும். ஒரு சடலத்தின் கையிலிருந்து பெண் குழந்தையின் புகைப்படத்தை மோகன்லால் எடுக்கும் காட்சி துயரமான கவிதைத்தனம் கொண்ட காட்சி.
மிரட்டலாக நடித்த அம்ரிஷ் புரி, சிரிக்க வைத்த ஸ்ரீனிவாசன்
கொடூரமான சிறை அதிகாரி மிர்ஸாகானாக அம்ரிஷ் புரி தனது நடிப்பில் மிரட்டியிருந்தார். வெள்ளைக்காரர்களிடம் பணிபுரிந்தாலும், தப்பிக்கும் தியாகிகளுக்கு உதவும் நல்ல பாத்திரத்தில் கொச்சின் ஹனீஃபா. ஸ்ரீனிவாசனின் பாத்திரம் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. கைதிகளை உளவு பார்த்து அதிகாரிகளிடம் போட்டுக் கொடுக்கும் கேரக்ட்டர். ‘நானும் சுதந்திரத்திற்காகப் போராடியவன்தான்’ என்று இவர் கெத்தாக விவரிக்கும் காட்சி சுவாரஸ்யமானது. ‘பொம்பளை கேஸ்ல உள்ள வந்தவன்தானே நீயி’ என்று அதைப் போட்டு உடைப்பார் பிரபு. கடைசியில் மனம் பேதலித்துச் சிரித்துக் கொண்டே அலையும் தனது பாத்திரத்தை ஸ்ரீனிவாசன் சிறப்பாகக் கையாண்டிருந்தார். ஜெயிலர் டேவிட் பெர்ரியாக அலெக்ஸ் டிராப்பரின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. கைதிகளின் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளுக்காக அவர்கள் மீது அனுதாபம் கொண்டு சிறை அதிகாரிகளை எதிர்க்கும் உன்னதமான மருத்துவர் பாத்திரத்தில் ஜான் கோல்வென்பாக் நடித்திருந்தார்.
அசத்தலான மேக்கிங், உருக்கமான எமோஷனல் காட்சிகள்
இந்தப் படத்தின் சிறப்பான மேக்கிங் ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தது. அப்படிப் பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருந்தார் பிரியதர்ஷன். டைட்டில் கார்டின் இருளான பின்னணியில் ஒலிக்கும் தேசபக்தி கோஷமும், அதைத் தொடர்ந்து பலர் அடிவாங்கி வலியால் கதறும் காட்சியும் ஆரம்பத்திலேயே அசத்தலாக இருந்தது. கைதிகளைக் கப்பலில் அழைத்துச் செல்லும் போது அம்மை நோய் வந்தவர்களைக் கப்பல் கேப்டன் கொடூரமாகச் சுட்டுத்தள்ளும் காட்சி பயங்கரமானது. தீர்ப்பு நகலின் ஒரு பகுதி தண்ணீர் பட்டு அழிந்திருப்பதால் கூடுதலான ஆண்டுகளுக்கு ஒருவர் தண்டனையை ஏற்க நேரும் பரிதாபக் காட்சியும் வரும்.
வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து பிரபு தப்பிப்பது, அவரைத் தடுப்பதற்கக்ச் செல்லும் மோகன்லால் வேறு வழியின்றி கூடவே குதிப்பது, மனிதர்களை உண்ணும் வழக்கமுள்ள காட்டுவாசிகளிடம் மாட்டிக் கொள்வது, தங்களுக்குள் சண்டையிட்டுத் தப்பிப்பது, புயலில் மாட்டிக் கொள்ளும் படகில் போராடுவது போன்ற சாகசக் காட்சிகள் அருமையாகப் படமாக்கப்பட்டிருந்தாலும் மையத்திற்குத் தொடர்பில்லாத தேவையில்லாத ஆணிகளாகவே தோன்றியது. பசி தாங்க முடியாத ஒருவன் மண்ணை அள்ளி உண்ண நினைப்பதும், இன்னொருவனைக் கொன்று ரத்தம் குடித்து தாகத்தைத் தணிக்கும் அளவிற்கு மனம் பேதலிப்பதும் பயங்கரமான காட்சிகள். பிரபு ஒரு பக்கமாகச் செல்லும் போது, “ஏன் அங்க ஏதாவது ஹோட்டல் திறந்திருக்கா?” என்று மோகன்லால் கேட்பது சீரியஸிற்கு இடையில் ஆறுதலான நகைச்சுவை.
கைதிகளுக்கு இடையே மத ரீதியிலான மோதலை ஏற்படுத்தி ஒற்றுமையைக் குலைக்கும் செயலில் மிர்ஸாகான் ஈடுபட, அதன் விளைவாகக் கைதிகளுக்கு இடையில் பயங்கரமான மோதல் ஏற்படும். அவர்களைத் தடுத்து நிறுத்தும் முஸ்லியார், ‘உன் மார்க்கம் உனக்கு, என் மார்க்கம் எனக்கு’ன்னுதான் திருக்குரான்ல சொல்லியிருக்கு’ (லகும் தீனுக்கும் வலியதீன்) என்று சொல்லும் வசனம், இக்காலத்திற்கு மட்டுமல்ல, என்றைக்கும் பொருந்தக்கூடியது. “நாங்க வந்த அப்புறம்தான் இந்தியான்னு ஒரு நாடே உருவாச்சு… அதுக்கு முன்னாடி பல துண்டுகளா இருந்தது” என்று சொல்லும் வெள்ளைக்கார டாக்டரின் மனைவியின் குற்றச்சாட்டிற்கு மோகன்லால் பதிலடி தரும் காட்சியும் சிறப்பானது.
இளையராஜா, சந்தோஷ் சிவன் – அற்புதமான கூட்டணி
இந்தப் படத்தின் தொழில்நுட்பக்கூட்டணி மிக அருமையாக அமைந்திருந்தது. சிம்ஃபொனி பாணியில் இசையமைத்திருந்த இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்குப் பெரிய உறுதுணையாக இருந்தது. ‘செம்பூவே’, ‘ஆலோலம் கிளி தோப்பிலே’, ‘சுட்டும் விழிச்சுடர்’ என்று ஒவ்வொரு பாடலும் தேனாக ஒலித்தது. இந்தப் படத்தின் மூலம் இளையராஜாவிற்குத் தேசிய விருது கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அத்தனை அட்டகாசமான இசையை அள்ளி வழங்கியிருந்தார். இந்தியா மட்டுமல்லாது, உலகின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களுள் ஒருவராக மதிக்கப்படும் சந்தோஷ் சிவனின் நேர்த்தியான ஒளிப்பதிவு ஒவ்வொரு பிரேமிலும் அற்புதமாகப் பதிவாகியிருந்தது. அந்தக் காலகட்டத்தின் இன்ஜின் ரயில் முதற்கொண்டு பல நுட்பமான கலைப்பொருள்கள், அந்தமான் சிறை செட் என்று அசத்தியிருந்தார், கலை இயக்குநர் சாபு சிரில். இதைப் போலவே ஒலிப்பதிவிலும் இந்தப் படம் கணிசமான தரத்தைக் கொண்டிருந்தது. சண்டைக்காட்சி முதல் ஒவ்வொரு சத்தமும் அத்தனை சிறப்பாக இருந்தது. இந்தப் பணியை தீபன் சட்டர்ஜி சிறப்பாக மேற்கொண்டிருந்தார். மலையாள சினிமாவிற்கு ‘டால்பி ஸ்டீரியோ’ நுட்பத்தை இந்தப் படம்தான் அறிமுகப்படுத்தியது.
தேசத்தின் விடுதலைக்காக அஹிம்சை முறையிலும் அதற்கு எதிரான வழியிலும் பலர் போராடியிருக்கிறார்கள். ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டன. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒடுக்குமுறையையும் வன்முறையையும் அனுபவித்த தியாகிகளை இந்தத் திரைப்படம் உணர்ச்சிகரமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறது. மிகவும் பாடுபட்டு வாங்கிய சுதந்திரத்தை எந்தவொரு தலைமுறையும் நினைவுகூர்வதோடு, அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கடமையையும் இந்தப் படம் அழுத்தமாக உணர்த்தியிருக்கிறது.
+ There are no comments
Add yours