இரண்டாம் பாதிக்குப் பிறகுதான் கதை ஓரளவு தீவிர வடிவத்தை எடுக்கிறது. ஆனால் நீதிமன்றக் காட்சி வரை சரியாகச் செல்லும் படம், நீதிமன்றத்தில் சுருண்டு படுத்துவிடுகிறது. நீதிபதி அரசு வழக்கறிஞரிடம் “உங்க அரசு ஏன் சாதியை ஒழிக்கலை” என்று அபத்தமான ஒரு கேள்வியைக் கேட்கிறார். பல நூற்றாண்டுகள் இருக்கும் சாதியை ஓர் அரசு எப்படி ஒரேநாளில் ஒழித்துவிடும் என்ற புரிதல் அந்த நீதிபதிக்கும் இல்லை; இயக்குநருக்கும் இல்லை.
சேரன் தரப்பில் வாதாடும் வழக்கறிஞரான எஸ்.ஏ.சந்திரசேகரோ வாட்ஸ்-அப் ஃபார்வர்ட்களை எல்லாம் நீதிமன்றத்தில் கொட்டுகிறார். எதிர்த்தரப்பு வழக்கறிஞரான ரவிமரியாவோ எந்தப் பக்கம் நிற்கிறார் என்றே தெரியாமல் என்னென்னவோ பேசுகிறார். மொத்தத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாக்களில் வருவதைப் போன்ற நீதிமன்றக் காட்சி அலுப்பை ஏற்படுத்துகிறது. ஒரே ஒரு சட்டரீதியிலான விஷயத்தைக்கூட யாருமே பேசாமல், கொஞ்சம்கூட எதார்த்தம் இல்லாமல் இருக்கிறது. குலத்தொழில், சாதி இழிவு, சாதி ஒடுக்குமுறை குறித்தெல்லாம் ஆதங்கமும் அக்கறையும் இயக்குநருக்கு இருக்கிறது. ஆனால் சாதியின் தோற்றம், இயங்கியல், அதை ஒழிப்பதற்கான வழிமுறைகள் என்று எதைக்குறித்தும் எந்தப் புரிதலும் அவருக்கு இல்லை என்பதைத்தான் நீதிமன்றக்காட்சியும் அதைத் தொடர்ந்து தீர்வு என்கிற பெயரிலான அரைவேக்காட்டு அபத்தமான கருத்துகளும் காட்டுகின்றன.
+ There are no comments
Add yours