பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி.’
கரண் ஜோஹர் இயக்கிய இந்தப் படத்தில் ஆலியா பட்டிற்கு ஜோடியாக ரன்வீர் சிங் நடித்திருந்தார். கடந்த ஜூலை 28-ம் தேதி வெளியான இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக இந்தப் படத்தில் ஆலியா பட்டின் நடிப்பைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த வெற்றியை ஆலியா பட் கொண்டாடிவருகிறார்.
தவிர, ஹாலிவுட்டிலும் ஆலியாபட் அறிமுகமாகியிருக்கிறார். டாம் ஹார்பெர் இயக்கும் ‘ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ என்ற ஆக்ஷன் படத்தில் ‘Wonder Woman’ ஹீரோயின் கேல் கடோட், ‘50 Shades’ புகழ் ஜேமி டோர்னன் ஆகியோருடன் இணைந்து ஆலியா பட் நடித்திருக்கிறார். நடிகை கேல் கடோட்டே இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். ஆகஸ்ட் 11-ம் தேதி இப்படம் ஓ.டி.டி தளமான நெட்ப்ளிக்ஸில் நேரடியாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் ‘ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ படத்தில் நடிக்கபோகும் தறுவாயில்தான் அவர் கர்ப்பமானதாகவும், அதைத் தயாரிப்பாளரும் நடிகையுமான கேல் கடோட்டிடம் கூறும்பொழுது அதனை அவர் எப்படி எடுத்துக்கொண்டார் என்பது குறித்தும் பகிர்ந்திருக்கிறார்.
“’ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்புதான் கர்ப்பமானேன். எனக்கு படத்தில் பல ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கவேண்டியிருந்தது. படத்தின் தயாரிப்பாளர் என்பதால் கேல் கடோட்டுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டும் என்று நான் விரும்பினேன். காரணம், இப்படியான உடல்நிலையில் படத்தில் நடிக்கச் சில கட்டுப்பாடுகள் இருக்கலாம்.
அதனால் கேல் கடோட்டுக்கு கால் செய்து நான் கர்ப்பமாக இருப்பதை கூறினேன். அவர் இதனைக் கேட்டதும் எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றாமல் மிகவும் உற்சாகமாகிவிட்டார். இது திரைப்படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று என்னிடம் கூறினார். அதுமட்டுமன்றி, என்னைப் பாதுகாப்பாக அரவணைத்து நன்கு கவனித்துக்கொண்டார்” என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கு முன்னர் கேல் கடோட்டே ‘வொண்டர் வுமன்’ படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும்போது தான் ஐந்து மாத கர்ப்பமாக இருந்ததாக முன்னரே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours