சேலம்:
சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் மாம்பழங்கள் அதிகம் விளைச்சல் இருக்கும். அதன்படி இந்தாண்டும் அதிக விளைச்சல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து தற்போது சேலத்திற்கு மாங்காய், மற்றும் மாம்பழங்கள் அதிகம் வரத்தொடங்கி உள்ளது.
சில வியாபாரிகள் ரசாயனம் மூலம் செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து சேலம் மாநகரில் உள்ள மாம்பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பழங்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைப்பதை தடுக்கும் வகையில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் மாம்பழ வியாபாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
இதற்கு உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: –
செயற்கை முறையில் பழுக்க வைக்கும் பழங்களில் சுவை, மனம், நிறம் ஆகியவை முற்றிலும் மாறுபட்டு இருக்கும். பழங்கள் மீது கருப்பு நிற வட்டம் காணப்படும். அவைகளை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் என்பதை பொதுமக்கள் கண்டு பிடித்து விடலாம். செயற்கை முறையில் பழுக்க வைக்கும் மாம்பழங்கள் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிறு எரிச்சல் ஏற்பட்டு இறுதியில் புற்று நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
+ There are no comments
Add yours