இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை – செக் மோசடி வழக்கில் தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம் | Director Lingusamy sentenced to 6 months in jail check fraud case

Estimated read time 1 min read

சென்னை: செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றம்.

“எண்ணி ஏழு நாள்” என்ற படத்திற்காக பெற்ற கடனை திரும்பச் செலுத்தாத விவகாரத்தில், பிவிபி கேப்பிட்டல்ஸ் நிதி நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 மாத சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து லிங்குசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றம் தள்ளுபடி செய்ததுடன், கடனை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்த வேண்டும் என்ற உத்தரவையும் உறுதி செய்துள்ளது.

வழக்கின் பின்னணி: கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் கார்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில், “எண்ணி ஏழு நாள்” என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, இயக்குநர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூ.1 கோடியே 3 லட்சம் நிதி பெற்றிருந்தது.

இந்த கடன்தொகையை திரும்பச் செலுத்தவில்லை. இதனையடுத்து பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்த இயக்குநர் லிங்குசாமிக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, இயக்குநர் லிங்குசாமி, ரூ.1 கோடியே 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுனத்திற்கு வழங்கினார். இந்த காசோலைகள் வங்கியில் போதிய பணம் இல்லாமல், திரும்பி வந்தன. இதையடுத்து, இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர்களுக்கு எதிராக பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆகஸ்டில் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை தற்போது சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றம் உறுதி செய்துள்ளது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours