பிரித்விராஜ் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் யோகிபாபு
10 ஏப், 2023 – 12:42 IST
நடிகர் யோகிபாபுவை பொருத்தவரை தமிழில் பிஸியான நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் சரியான கதைகளை தேர்ந்தெடுத்து கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தமிழிலேயே பல படங்கள் கைவசம் வைத்திருக்கும் யோகிபாபுவை இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து தான் இயக்கி வரும் ஜவான் படத்தின் மூலமாக பாலிவுட்டுக்கும் அழைத்து சென்று விட்டார். இதைத்தொடர்ந்து தற்போது முதல் முறையாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார் யோகிபாபு.
சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி 50 கோடிக்கு மேல் வசூலித்த படம் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே. இந்த படத்தை இயக்கிய விபின் தாஸ் அடுத்ததாக மலையாளத்தில் இயக்கவுள்ள குருவாயூர் அம்பலநடையில் என்கிற படத்தில் தான் தற்போது யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் கதை பிடித்துப்போனதால் நடிகர் பிரித்விராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் தானே முன் வந்து நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தில் கதாநாயகனாக நடித்த இயக்குனர் பசில் ஜோசப் தான் இந்த படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார்.
+ There are no comments
Add yours