நேற்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் ‘ஸ்பைடர்மேன்’ திரைப்படங்களுக்குத் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்பதால் இப்படத்தை நாடு முழுவதும் பிரமாண்டமாகப் பல்வேறு மொழிகளில் வெளியிட சோனி பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் இப்படம் ஆங்கிலம் தவிர, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய 10 மொழிகளில் வெளியாகிறது.
இது பற்றிக் கூறியுள்ள சோனி பிக்சர்ஸ் ரிலீசிங் இன்டர்நேஷனல் (SPRI) இந்தியா துறையின் பொது மேலாளரும் தலைவருமான ஷோனி பஞ்சிகரன், “ஸ்பைடர்மேன் இந்தியாவில் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் சூப்பர் ஹீரோ. ஸ்பைடர்மேனின் எல்லாப் படங்களும் இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. இறுதியாக வந்த ஸ்பைடர் மேன் திரைப்படம், ‘நோ வே ஹோம்’, ஸ்பைடர்மேனின் ரசிகர்களைத் தீவிர ரசிகர்களாக மாற்றியது. எனவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோவைச் சொந்த மொழியில் கண்டு அனுபவிக்க விரும்புவார்கள்.
அந்த வகையில் ‘ஸ்பைடர்-மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் திரைப்படத்தை 10 மொழிகளில் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம். இந்தியா, ஸ்பைடர்மேனை விரும்புகிறது, ‘இந்திய ஸ்பைடர்மேன் பவித்ர பிரபாகர்’ உட்படப் பல இந்தியக் கூறுகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தப் படம் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இப்படத்தை விரும்புவார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்றார்.
+ There are no comments
Add yours