சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மேட்டூர் அருகே விருதாசம்பட்டி பகுதியை சேர்ந்த தேன்மலர் (வயது 40) என்பவர் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகம் வந்தார்.
கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்ததும் அவர் திடீரென தான் கொண்டு வந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்ற அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தேன்மலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றிய பழனியப்பனின் முதல் மனைவி மாதம்மாளின் மகள் தேன்மலர். அவரது தாய் இறந்து விட்டதால் பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இதையடுத்து பழனியப்பன் 2-வதாக பார்வதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பழனியப்பன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். தொடர்ந்து பார்வதி தரப்பினர் வாரிசு சான்றிதழ் பெற்றுள்ளனர். அதில் பழனியப்பன் மனைவி பார்வதி என்றும், இவர்களுக்கு தேன்மலர் உள்பட 3 மகள்கள் உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. பழனியப்பன் முதல் மனைவி மாதம்மாள் குறித்து அதில் எந்த தகவலும் குறிப்பிடவில்லை. எனவே சான்றிதழில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி மனவேதனையின் தேன்மலர் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காடையாம்பட்டி அருகே கொங்குப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று கொடுத்தனர். அதில், தங்கள் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தங்களை செல்லவிடாமல் மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours