பல குரல் மன்னன் எனப் போற்றப்படும் கோவை குணா தனது மிமிக்ரியால் மக்களை மகிழ்வித்தவர். தன்னுடைய குரல் வளத்தால் சம்பந்தப்பட்ட நடிகர்களை கண்முன் நிறுத்தும் ஆற்றல்படைத்தவர் பிரியா விடை கொடுத்திருக்கிறார். தனது 57 வயதில் மறைந்த அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக மிமிக்ரியால் அவர் மக்களை மகிழ்வித்த வைத்த தருணங்களை பார்ப்போம்.
சன் டிவியில் ஒளிபரப்பான ‘அசத்த போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையால் தனித்து விளங்கியவர் கோவை குணா. அந்த நிகழ்ச்சியின் எபிசோட் ஒன்றில் கவுண்டமணியின் குரலை பிரதியெடுத்திருப்பார். வடிவேலு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அந்த எபிசோட்டில் ‘கயாமத் சே கயாமத் தக்’ இந்தி பட வசனத்தை கவுண்டமணி பேசியிருந்தால் எப்படியிருக்கும் என நடித்துக்காட்டியிருப்பார். கவுண்டமணியின் அந்த உடல்மொழியை அட்டகாசமாக நேர்த்தியாக வெளிக்கொண்டுவந்திருப்பார் குணா. அதே டையலாக்கை சுருளிராஜன் வைத்து மிரட்டியிருப்பார்.
மேற்கண்ட வீடியோவில், ரஜினியின் ‘எப்போ வருவேன் எப்டி வருவேன் தெரியாது’ என்ற வசனத்தை பாக்யராஜ், மன்சூர் அலிகான், நம்பியாரின் குரலுடன் அவர்களின் உடல்மொழியில் சொல்லியிருக்கும் விதத்தில் ஈர்த்திருப்பார். அதேபோல கவுண்டமணி ஆஸ்தான நடிகர்களாக இருந்தபோதிலும், நடிகர்கள் ஜனகராஜ், லூஸ் மோகனைப்போல நடிப்பதில் அமர்க்களப்படுத்தியிருப்பார்.
https://www.youtube.com/watch?v=2o4qtzhNExU
மற்றொரு எபிசோட்டில் ஒரு பாடலை எடுத்துக்கொண்டு பல்வேறு நடிகர்களின் குரலை பயன்படுத்தி பாடியிருப்பார். அதே எபிசோட்டில் மது அருந்திய ஒருவரை தத்ரூபமாக பிரதியெடுத்து நடித்து காட்டியிருப்பார். ‘தளபதி’ பட வசனத்தை எம்ஜிஆர், ஜனகராஜ், சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் குரலில் பேசியிருப்பார். அதில் ஜனகராஜ் தனித்து தெரிவது குணாவின் ஸ்பெஷல்.
அதேபோல, பாடல் ஒன்றை நடிகர்கள் லூஸ் மோகன், அசோகன், டி.எஸ்.பாலையா,சுருளி ராஜன் குரல்களில் பாடி ரசிக்க வைத்திருப்பார்.
இன்னும் ஏராளமான அவரின் வீடியோக்கள் யூடியூப்பில் கொட்டி கிடக்கின்றன. கோவை குணா மறைந்தாலும் அவரின் மிமிக்ரி பாணிக்கும், தனித்துவ உடல்மொழிக்கும் ஒருபோதும் மறைவில்லை.
+ There are no comments
Add yours