நீண்ட நாள் கிடப்பில் இருந்த விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வெளியாகும் தேதி என்ற பெயரில் ஒரு தகவல் சமூகவலைத்தளத்தில் பரவி வருவதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
கெளதம் மேனன் – விக்ரம் கூட்டணியில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீசர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்த நிலையில், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. அதன்பிறகு, மீண்டும் சில காலம் படப்பிடிப்பு துவங்கி நடந்துவந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு மறுபடியும் டீசர் வெளியானது.
இதனால் விரைவில் படம் வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில், தொடர்ந்து அந்தப் படம் கிடப்பில் போடப்பட்டது. பல நாடுகளில் படப்பிடிப்பு நடந்த நிலையில், இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்திருந்தார். மேலும் பேட்ச் ஒர்க்கெல்லாம் முடிந்து, இறுதிக்கட்டத்தில் என்ற கேப்ஷனுடன் ‘துருவ நட்சத்திரம்’ படம் விரைவில் வெளிவர உள்ளதாக சமீபத்தில் படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் மே மாதம் 19-ம் தேதி ‘துருவ நட்சத்திரம்’ படம் திரைக்கு வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளதால் விக்ரமின் ரசிகர்கள் அதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்தப் படத்தில் விக்ரமுடன், ரிது வர்மா, சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்ஷினி, விநாயகன், ராதிகா சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிகர் விக்ரம், ஜான் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படம், இன்னும் 10 படமாக (Spy Universe) எடுக்குமளவுக்கு கதைக்களம் கொண்டது என்றும், கண்டிப்பாக இரண்டாவது பாகம் வெளிவரும் வகையில், லீட் கொடுக்கப் பட்டிருப்பதாகவும் அண்மையில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours