Oscars 2023: மேடையேறிய கழுதையும் கரடியும்… திரைக்கு முன்னாலும் பின்னாலும் இவ்வளவு சம்பவங்களா?

Estimated read time 2 min read

95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இவ்விழாவில் சிறந்த ஆவணக்குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை `The Elephant Whisperers’ குறும்படமும், சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதினை `RRR’ திரைப்படத்தின் `நாட்டு நாட்டு’ பாடலும் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தன. அந்தப் பிரமாண்ட நிகழ்ச்சியில் இவை தவிர பல சுவாரஸ்யமான சம்பவங்கள் திரைக்கு முன்னாலும் பின்னாலும் அரங்கேறியிருக்கின்றன. அவை என்னென்ன எனப் பார்க்கலாமா?

* ‘All Quiet on the Western Front’ என்ற ஜெர்மானியத் திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதினை வென்றது. இது 1930 ஆண்டு வெளிவந்த திரைப்படத்தின் ரீமேக்காகும். அப்போதும் இத்திரைப்படம் சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த வசனத்திற்கான ஆஸ்கர் விருதினைப் பெற்றிருந்தது. இதை அனைவரும் ‘வரலாறு திரும்புகிறது’ என்று பதிவிட்டு வருகின்றனர்.

ரூத் கார்ட்டர்

* ‘Black Panther: Wakanda Forever’ படத்திற்காக ரூத் கார்ட்டர் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதினை வென்றார். இது அவருக்கு இரண்டாவது ஆஸ்கர் விருதாகும். விருதை பெற்றுக்கொண்டவர், தனது 101 வயதான தாய்க்கு அதை சமர்ப்பணம் செய்தார்.

* நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஜிம்மி கிம்மல் ‘Top Gun: Maverick’ படத்தின் காட்சியில் வருவது போல் பாராசூட்டிலிருந்து இறங்கி வந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

ஜிம்மி கிம்மல் பாராசூட் என்ட்ரி

* விழா மேடையை மனிதர்கள் மட்டுமல்லாமல் கழுதையும் அலங்கரித்தது. ஆம், ‘The Banshees of Inisherin’ படத்தில் நடித்த ஜென்னி என்ற கழுதை ‘Emotional Support’ என்ற ஆடை அலங்காரத்துடன் மேடை ஏற்றப்பட்டது. 

The Banshees of Inisherin – ஜென்னி கழுதை

* சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்திற்கான விருதினை வென்ற மார்ட்டின் என்ற கலைஞருக்கு மேடையிலேயே பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.

* கடந்த 8 ஆண்டுகளாக #OscarSoWhite என்று நிறவெறிக்கு எதிராகக் குற்றசாட்டுகள் ஆஸ்கர் விருதுகள் மேல் சுமத்தப்பட்டு வருகிறது. இம்முறையும் அதே குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. ‘The Woman King’ திரைப்படத்தில் நடித்த வயோலா டேவிஸ் பெயர் நாமினேஷன் பட்டியலில் கூட இல்லை என்று சர்ச்சை எழுந்து. இருப்பினும் ஆசிய பின்புலம் கொண்ட திரைப்படமான ‘Everything Everywhere All at Once’ 7 விருதுகளையும், ‘Black Panther: Wakanda Forever 2’ விருதுகளையும், ‘RRR’ மற்றும் ‘The Elephant Whisperers’ தலா ஒரு விருதையும் பெற்று விமர்சனங்களுக்குச் சற்றே பதில் அளித்துள்ளது.

* விழாவின் தொடக்க உரையில் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தை பாலிவுட் திரைப்படம் என தவறுதலாக மாற்றிக் கூறினார். அதேபோல மேடையில் அதிக நேரம் பேசுபவர்களை ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடும் கலைஞர்கள் அப்படியே வெளியே அழைத்துச் சென்றுவிடுவார்கள் என்று நகைச்சுவையாகக் கூறினார். அதற்கான ஒரு டெமோவும் காட்டப்பட்டது.

ஜிம்மி கிம்மலை சுற்றி நாடு ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கான நடனம்

* சிறந்த ஆவணப்படத்திற்கான விருதினை பெற்றுக்கொண்ட நடிகை யூலியா நவல்னி தனது விருதினை சிறையிலிருக்கும் தன் கணவருக்காகச் சமர்ப்பித்தார். மேலும் ‘நம் நாடு விடுதலை அடையும். நீயும் விடுதலை பெறுவாய்’ என்று சிறையில் இருக்கும் கணவருக்காகப் பேசினார். ‘Navalny’ என்பது அவரது கணவரின் பெயராகும். ஆவணப்படத்தின் பெயரும் அதுவே! ரஷ்ய அரசுக்கு எதிராகப் பேசியதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எலிசபெத் பேங்க்

* எலிசபெத் பேங்க் தான் நடித்த ‘கோகேன் பேர்’ திரைப்படத்தின் கரடியுடன் மேடையேறி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.

* ‘Everything Everywhere All at Once’ படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதினை வென்ற ஜேமி லீ கர்டிஸ், “எனது தாயும் தந்தையும் ஏற்கெனவே ஆஸ்கருக்குப் பரிந்துரைச் செய்யப்பட்டுள்ளனர். அனால் நான் விருதினை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது!” என்று ஆனந்த கண்ணீர் சிந்தினார்.

* நடிகர்களைத் தாண்டி டெக்சாஸ் நகரில் தியேட்டரில் பாப் கார்னை வித்தியாசமாக பட்டர் தெளித்து நிரப்பி டிக் டாக்கில்  வைரலான ஜேசன் குரோஸ்பால் மற்றும் ஆஸ்கர் விருதினை போன்றே சாக்லேட் செய்து விநியோகம் செய்த ‘Wolfgang Puck’ ஆகியோரும் கவனம் பெற்றனர்.

ஜேசன் குரோஸ்பால்

* ‘Everything Everywhere All at Once’ படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதினை வென்ற Ke Huy Quan, “எனது பயணம் அகதிகளுக்கான கப்பலில் ஆரம்பித்து, இன்று ஆஸ்கர் மேடையில் நிற்கிறது. இது அனைத்தும் சினிமாவில் நடந்துதான் பார்த்து இருக்கிறேன். இப்போது என் வாழ்விலும் நடக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

ரிஹானா

* சிறந்த ஒரிஜினல் பாடலுக்காக ‘நாட்டு நாட்டு’வோடு போட்டி போட்ட ‘Hold My Hand’ பாடலை பாடிய லேடிகாகாவும் அதன் மேடை அரங்கேற்றத்தில் இணைந்தார். கடைசி நேரத்தில் அவர் பாடுவது உறுதி செய்யப்பட்டதால் எளிமையான உடையில் அரங்கேற்றினர்.

* ரிஹானாவின் ‘Black Panther: Wakanda Forever’ படத்தில் தான் பாடிய ‘Lift me up’ பாடலைத் தீயாகப் பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

* நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ஜிம்மி கிம்மல், சென்ற ஆண்டு நடந்த சர்ச்சைக்குரிய சம்பவமான வில் ஸ்மித், நிகழ்ச்சித் தொகுப்பாளரான கிரிஸ் ராக்கைத் தாக்கிய சம்பவத்தை நினைவுகூரும் வகையில், “இங்கே யாராவது வன்முறையில் இறங்கினால் அவர்களுக்குச் சிறந்த நடிகருக்கான உயரிய விருதும், 19 நிமிடம் பேசுவதற்கான அனுமதியும் கிடைக்கும்“ என்று பகடி செய்தார்.

* ‘The Fabelmans’ திரைப்படத்திற்காக நாமினேட் செய்யப்பட்ட  Michelle Williams-க்கு இது ஐந்தாவது நாமினேஷன். ஆனால் அவருக்கு இம்முறையும் விருது கிடைக்கவில்லை.

மலாலா யூசுப்

* அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மலாலா யூசுப் மற்றும் இலக்கியத்திற்காக நோபல் பரிசை வென்ற கஸுவோ இஷிகுரோ இருவரும் ஆஸ்கர் நிகழ்வில் கலந்துகொண்டனர். “Stranger at the Gate” ஆவணப்படத்தின் தயாரிப்பாளராக மலாலாவும், ”Looking” திரைப்படத்தின் திரைக்கதை ஆசிரியராக இஷிகுரோவும் விருதுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர். 

* அர்ஜெண்டினா அணி உலகக் கோப்பை வென்ற நிலையில் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான பட்டியலில் ‘அர்ஜெண்டினா 1985’ விருதினை கைப்பற்றும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ‘All Quiet on the Western Front’ என்று ஜெர்மானிய திரைப்படம் இவ்விருதினைக் கைப்பற்றியது 

* 95 வயதான ஆஸ்கர் விழாவுடன் போட்டி போடும் விதமாக 94 வயதான ஜேம்ஸ் ஹாங் எனும் நடிகர் ஆஸ்கர் விழாவில் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இவர் பல்வேறு விருதுகளை வென்ற ‘Everything Everywhere All at Once’ திரைப்படத்தின் நடிகாராவார்.

ஜேம்ஸ் ஹாங்

* பல நடிகர்கள் பல முறை நாமினேஷனில் இருந்தும் விருதினைப் பெறாத நிலையில் இந்த விழாவில் 16 நபர்கள் முதல் முறையாக நாமினேஷன் செய்யப்பட்டு விருதினையும் முதல் முறையிலேயே வென்றுள்ளனர்.

பிரெண்டன் ஃப்ரேசர்

* ‘மம்மி’ படத்தின் கதாநாயகனான பிரெண்டன் ஃப்ரேசர், தனது வாழ்நாள் திறமையை வெளிப்படுத்திய ‘The Whale’ திரைப்படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை வென்றார். விழாவிற்குத் தாமதமாக வந்த பிரெண்டன் 2005-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்கர் விழாவிற்கு வந்திருப்பதாகக் கூறினார்.

இவ்வாறாகப் பல சுவாரசியமான நிகழ்வுகள் இந்த வருட ஆஸ்கர் நிகழ்ச்சியில் நடைபெற்றன.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours