விடுதலை படத்தின் படப்பிடிப்புப் பணிகள் திண்டுக்கல் சிறுமலை பகுதியில் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தன. படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் வெற்றிமாறன் விகடனுக்காக அளித்த பிரத்யேக நேர்காணல் இதோ
படப்பிடிப்பு தளத்தின் வானிலை தொடங்கி அங்குள்ள சிறு துகள் வரை காட்சியை மேம்படுத்த உதவும் என்பார்கள். இந்த நிலப்பரப்பு உங்களுக்கு எந்தளவுக்கு உதவிகரமாக இருந்தது?
“என் படங்கள் எவற்றையும் நான் உருவாக்கினேன் என்று கூறிக்கொள்வதில்லை. ஒரு திரைப்படம் தன்னை உருவாக்கிக்கொள்கையில் அதைக் காட்சிப்படுத்தும் ஊக்கியாக மட்டுமே நான் செயல்படுகிறேன். சினிமா உருவாவதற்கான ‘காட்டலிஸ்ட்’ மட்டுமே நான். காரணம், இங்கு எதுவுமே நம் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. மேகமூட்டமான காட்சியை எடுக்க அதற்கான சூழல் ஏற்படும் வரை காத்திருக்க வேண்டும். அப்படி நிகழாமல் வெயில் அடித்தால் அதற்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். இயற்கை, வானிலைக்கு மட்டுமல்ல அனைத்திற்கும் இது பொருந்திப்போகும்.
நடிகர்களை பார்க்க படப்பிடிப்பு தளத்துக்கு பொதுமக்கள் வருவது இயல்பான ஒன்று. ஆனால், தினந்தோறும் இயக்குநர் வெற்றிமாறனைக் காண பெரிய கூட்டமே சிறுமலைக்கு வருவதாக கேள்விப்பட்டோமே…
“( சிரிக்கிறார்) அது உண்மையா என்று எனக்கு தெரியவில்லை. விஜய் சேதுபதியை பார்க்க பலரும் வந்தார்கள். என்னைப் பார்க்கவும் சிலர் வந்தார்கள். நடிகர்களை பார்க்க வருபவர்களுக்கும் இயக்குநர்களை பார்க்க வருபவர்களுக்குமான வித்தியாசம் நிறைய இருக்கிறது. இயக்குநர்களை சந்திக்க எல்லா காலத்திலும் குறிப்பிட்ட சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஊடகங்களின் வளர்ச்சி மற்றும் இயக்குநர்கள் தற்போது அதிக அளவில் வெளியே உரையாடுவதால் இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்திருக்கிறது.”
படப்பிடிப்புக்குச் செல்லும் வரை கதையின் முடிவை எழுதுவதில்லை என்றும் படப்பிடிப்பின்போதும் நிறைய மாற்றங்களை தான் செய்வதாகவும் மணிரத்னம் கூறியிருந்தார். உங்கள் வழக்கம் என்ன ?
“சிலமுறை அதை சரியாகச் செய்துவிடுகிறோம், சிலமுறை அது சரியாகக் கைகூடுவதில்லை. அதற்கான முயற்சியைத்தான் நாம் மேற்கொள்கிறோம். சீன் பேப்பரில் நாம் எழுதியது ஒன்றாக இருக்கும், படப்பிடிப்பின்போது அக்காட்சியின் தன்மை வேறொன்றாக இருக்கும்.”
கதை சிம்பிளாக இருந்தாலும் டெக்னிக்கலாக மிகப்பெரிய மெனக்கடல் தேவைப்படும் படமாக விடுதலை தெரிகிறது. அதைப் பற்றிச் சொல்லுங்கள்?
“ஒரு காட்சி முழுமை பெறுவதற்கு என்ன வேண்டுமோ அவை அனைத்தையும் செய்கிறோம். அதை டெக்னிக்கல் எக்சலன்ஸ் என்று கூறுவதா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் திட்டமிடுதலில் மிக பெரிய உழைப்பு இப்படத்திற்கு தேவைப்பட்டிருக்கிறது.”
இதனால் மூன்று காட்சிகளை எடுக்க வேண்டிய நேரத்தில் எங்களால் ஒரேயொரு காட்சியை மட்டுமே எடுக்க முடிகிறது. இவை தவிர்த்து, உடல் ரீதியாக மிகுந்த சவாலாக இருந்தது. இந்த சரிவின் கீழே இறங்கினால் ஈரப்பதம் காரணமாக அட்டைகள் நிறைய இருக்கும். மேலே ஏறினால் காட்டு மாடு, மான்களில் இருக்கக்கூடிய உண்ணிகள் இருக்கின்றன. இது மாதிரியான சவால்களே அதிகமிருந்தன. “
விஜய் சேதுபதி வந்தபின் `வாத்தியார்’ கதாபாத்திரத்தில் என்ன மாதிரியான மாற்றங்களைச் செய்தீர்கள்?
“பாரதிராஜாவை நடிக்கவைக்க நினைத்தபோது, ஒரு சிறிய மக்கள் கூட்டத்தின் ஆசானாக, அவர்களுக்கான சிந்தனையாளராக மட்டுமே அக்காதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தேன். விஜய் சேதுபதியைப் பொறுத்தவரையில் அவர் உடல் தோற்றத்திற்கு ஏற்றவாறு ஆக்ஷன் காட்சிகளாகவும் சிலவற்றை யோசிக்க முடிந்தது. ஆனால், கதாபாத்திர வடிவமைப்பில் மிக சிறிய அளவே மாறியிருக்கிறது.”
அப்படியென்றால் ஆக்ஷன் காட்சிள் அதிகமிருக்குமா?
“ஆக்ஷன் காட்சிகளுக்கான மதிப்பீடு தற்போது மாறிக்கொண்டே இருக்கிறது. என் முந்தைய படங்களைப்போல இதிலும் ஓரளவுக்கு இருக்கும்.”
எந்தத் தவறும் இல்லாமல் காட்சிகளைப் படமாக்கவேண்டும் என்பதே உங்களின் நோக்கமாக இருக்கும். இருந்தும், எடுத்த காட்சிகள் திருப்தி அளிக்காமல் மீண்டும் எடுக்கவேண்டிய நிலை உங்களுக்கு ஏற்படுமா?
“நடக்கும். என்னைப் பொறுத்தவரையில் `Filmmaking is a Trial and Error Process’. நமக்குத் தெரியாமல் மிக சாதாரண தவறுகள்கூட சிலநேரங்களில் நடக்கக்கூடும். படப்பிடிப்பு தளத்தில் நமக்கு திருப்தியளித்த காட்சிகள் பின்னர் சரியில்லாமல் போகலாம். அதேபோல Execution மற்றும் Staging-ஐ வேறு மாதிரி செய்திருக்கலாம் என்று சில நேரங்களில் தோன்றும். அது மாதிரி நேரங்களில் காட்சிகளை மீண்டும் எடுக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.”
நீங்கள் தொடங்கிய ‘IIFC’ கல்வி நிறுவனத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது; அதன் அடுத்த கட்டம் என்ன?
“நீண்ட நாட்களாகவே இது பற்றிய திட்டம் இருந்தது. சினிமா கல்வியும் பயிற்சியும் எளிய மக்கள் பெறமுடியாத அளவுக்கு விலையுயர்ந்ததாக இன்று இருக்கிறது. இந்த நிலை தொடர்வது தமிழ் பண்பாட்டுத் தளத்திலும் சினிமாவிலும் Representation Equality இல்லாமல் போகும். இது நடக்காமலிருக்க எங்களுடைய சிறிய பங்களிப்பு தான் IIFC . ( Socio – Economic backward) முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு full scholarship programme. கோவிட் காரணமாக கடந்த ஜூன் மாதம் தான் தொடங்கினோம். முதல் பேட்ச் மாணவர்கள் படித்துவருகிறார்கள். அடுத்த பேட்ச் மாணவர்கள் தான் அடுத்த கட்டம் என நினைக்கிறேன் (சிரிக்கிறார்). இதில் அடுத்த கட்டம் என்று எதுவுமில்லை. மாணவர்களுடன் சேர்ந்து இதில் என்னவெல்லாம் செய்யமுடியும் என்று நாங்களும் கற்று வருகிறோம். சினிமாவை கலை என்று மட்டும் சுறுக்கிவிட முடியாது. அறிவியல், சமூகவியல், வரலாறு, அரசியல், கலை, இலக்கியம் எல்லாமும் சேர்ந்தது தான் சினிமா. இவை அனைத்தையும் அவர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தமிழ் இலக்கியம், உலக இலக்கியம் பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டத்தை பாடத்திட்டத்திற்குள் கொண்டு வந்திருக்கிறோம். சினிமா கல்வி இப்பள்ளியின் ஓர் அங்கமே தவிர முழுக்கமுழுக்க அதை மட்டும் பயிற்றுவிக்கும் இடம் இது கிடையாது. ஆண்டுதோறும் சேரும் 25 மாணவர்களையும் இயக்குனராக, ஒளிப்பதிவாளர்களாக, எடிட்டர்களாக உருவாக்குவது எங்களின் நோக்கம் கிடையாது. சமூகம் மற்றும் அரசியல் தெளிவுடைய ஊடகவியலாளர்களை உருவாக்குவது தான் எங்கள் நோக்கம். தமிழ் சினிமா பற்றிய சர்வதேச கருத்தரங்கு ஒன்றை நடத்துவதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.
படப்பிடிப்பு முடிந்து எடிட்டிங் டேபிளில் பார்த்து இதெல்லாம் சரியில்லை என்று நீங்கள் நினைத்த ஒன்று?
“ `அசுரன்’ படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை கூறலாம். அக்காட்சியை, `சுத்தி இத்தனை பேர் இருக்காங்க. வேடிக்கை பார்ப்பவர்கள் யாருமே எதுவும் கேக்க மாட்டங்களா. எந்த ஊருங்க இது’ என்று அமீர் கேட்டார். அது குறித்த சந்தேகம் படப்பிடிப்பின் போதே எனக்கு இருந்தது. இருந்தும் எடிட்டிங்கில் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். அது தவறான ஒரு முடிவுதான். அதை தவிர்த்துட்டு வேறு ஒன்றை செய்திருக்கலாம்.”
‘ஆடுகளம்’ இசை வெளியீட்டு விழாவில் “ வெற்றிமாறனிடம் முதலில் ஒரு கதை கேட்டேன், முழுவதுமாக கூறிவிட்டு அதை தனுஷுக்காக யோசித்திருக்கிறேன் என்றார். பின்னர் மற்றொரு கதையை கேட்டேன். அதுவும் அருமையாக இருந்தது. அப்போதும் தனுஷிடம் ஒரு வார்த்தை கேட்டுக்குறேன்னு சொன்னார்” இவ்வாறு பேசியிருப்பார் சூர்யா. இது மாதிரி உங்களின் எத்தனை கதைகள் வெவ்வேறு நடிகர்களுக்கு சென்றுள்ளன ?
“சூர்யாவிடம் கூறிய கதைகள் அனைத்தும் அப்படியேதான் இருக்கின்றன. இன்றைக்கும் எனக்கு ஒரு ஐடியா தோன்றினால் நான் பகிர்ந்துகொள்ளக்கூடிய மிக சிலரில் தனுஷும் ஒருவர். “
ஒரு படத்தை இயக்கும்போதே அடுத்த ஸ்கிரிப்ட்டுக்கான வேலைகளைத் தொடங்கிவிடுவது உங்கள் வழக்கம். வாடிவாசல் இயக்கும் போது அடுத்ததாக எந்தக் கதையில் பணியாற்றப் போகிறீர்கள்?
“மிகுந்த நுணுக்கம் மற்றும் உழைப்பு தேவைப்படும் படமாக `வாடிவாசல்’ இருக்கும். எனவே, அதை முடித்த பிறகே அடுத்த படத்தை பற்றி யோசிக்க வேண்டும்.”
+ There are no comments
Add yours