மும்பை பாந்த்ராவில் கடற்கரையையொட்டி நடிகர் ஷாருக் கானின் இல்லம் இருக்கிறது. இந்த வீட்டுக்குக் கடந்த வாரம் குஜராத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அத்துமீறி நுழைந்துவிட்டனர். அவர்கள் ஷாருக் கானை அருகில் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் வீட்டுக்குள் வந்ததாக விசாரணையில் தெரிவித்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர்களது பெயர் சாஹில் சலீம் ஷேக் (18), ராம் குஷுவா (19) என்பது தெரியவந்தது.
இருவரும் குஜராத்திலிருந்து ஷாருக் கானைப் பார்க்கும் நோக்கத்தில் மும்பைக்கு வந்தனர். கடந்த இரண்டாம் தேதி இரண்டு பேரும் அதிகாலை 3 மணிக்கு ஷாருக் கானின் மன்னத் பங்களாவின் தடுப்புச்சுவர்மீது ஏறி குதித்துச் சென்றனர். உள்ளே பங்களாவில் பழுதுபார்ப்புப் பணிகளுக்காகக் கட்டப்பட்டிருந்த கம்பி வழியாக பங்களாவுக்கு மேலே ஏறிச் சென்றனர். உள்ளே சென்ற அவர்கள் ஷாருக் கானின் மேக்கப் அறையில் சென்று இரவு முழுவதும் பதுங்கியிருந்தனர்.
காலை 10:30 மணி வரை உள்ளே இருந்தனர். 10:30 மணிக்கு ஷாருக் கான் மேக்கப் அறைக்குள் நுழைந்தபோது இரண்டு பேர் வீட்டுக்குள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஷாருக் கான் அவர்களிடம் யார் என்று கேட்டதற்கு, அவரைப் பார்க்க வந்திருப்பதாகத் தெரிவித்தனர். உடனே வீட்டு வேலைக்காரர்களைக் கூப்பிட்ட ஷாருக் கான் இரண்டு பேரையும் அவர்களிடம் ஒப்படைத்து வெளியில் கொண்டு போகும்படி கேட்டுக்கொண்டார். வேலைக்காரர்கள் இரண்டு பேரையும் வீட்டுப் பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். இருவரும் சுவர் ஏறிக் குதித்ததில் லேசாக காயமடைந்திருந்தனர். அவர்களுக்கு முதலுதவி செய்து இரண்டு பேரையும் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அதோடு போலீஸார் அவர்களைக் கைதுசெய்தனர்.
போலீஸார் அவர்களிடம் விசாரித்ததில் ஷாருக் கானைப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு எந்த உள்நோக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர்களின் பெற்றோர் குஜராத்திலிருந்து வரவழைக்கப்பட்டனர். இருவரையும் ஜாமீனில் எடுத்து குஜராத்துக்கு அழைத்துச் சென்றனர். இரவில் இரண்டு பேரும் வீட்டுக்குள் சுவர் ஏறிக் குதிக்கும் அளவுக்கு ஷாருக் கான் வீட்டுப் பாதுகாவலர்கள் கவனக்குறைவாக இருந்தது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. ஷாருக் கான் நடிப்பில் வெளியான `பதான்’ படம் உலகம் முழுவதும் 1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.
+ There are no comments
Add yours