35 நாட்களில் 3 படங்கள் ; தொடர் அதிரடிக்கு தயாராகும் பிரியா பவானி சங்கர்
05 மார், 2023 – 12:21 IST
தமிழ் சினிமாவை பொறுத்தவரை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து வெற்றிகரமான கதாநாயகிகளாக மாறியவர்கள் மிக சிலரே. அந்த வகையில் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக இருந்து சீரியலில் நடித்து சினிமாவிற்கு வந்தவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். ஆனால் தற்போது சத்தமே இல்லாமல் முன்னணி நடிகை வரிசையில் இடம் பிடித்து விட்டார். கடந்த வருடம் தனுஷுடன் இவர் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் வெற்றி பட வரிசையில் இவரை சேர்த்தது. இந்த வருட துவக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் தெலுங்கில் இவர் முதன்முறையாக நடித்த கல்யாணமாம் கல்யாணம் என்கிற திரைப்படம் வெளியானது.
இந்த நிலையில் வரும் 35 நாட்களில் பிரியா பவானி சங்கர் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இது சமீபத்தில் வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத ஒரு பெருமை என்றே சொல்லலாம். வரும் மார்ச் 10ஆம் தேதி ஜெயம் ரவி ஜோடியாக இவர் நடித்துள்ள அகிலன் திரைப்படம் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து மார்ச் 30ல் சிம்பு, கவுதம் கார்த்திக்குடன் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள பத்து தல படம் வெளியாகிறது.
அடுத்ததாக ஏப்ரல் 14ம் தேதி ராகவா லாரன்ஸ் ஜோடியாக இவர் இணைந்து நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதற்கு அடுத்து இந்தியன் 2, பொம்மை, டிமான்டி காலனி 2, ஜீப்ரா (தெலுங்கு) என கைவசம் நிறைய படங்களும் வைத்திருக்கிறார் பிரியா பவானி சங்கர். அந்தவகையில் இந்த 2023 இவருக்கான வருடம் என தாராளமாக சொல்லலாம்.
+ There are no comments
Add yours