பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், தனக்கு மாரடைப்பு ஏற்பட்டு உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு, தற்போது நலமுடன் இருப்பதாக, தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், தமிழில் `ரட்சகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 1994-ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றவர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, படப்பிடிப்பின்போது சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து, தனது சமூக வலைதளத்தில் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, சுஷ்மிதா சென் பதிவிட்டுள்ளார். அதில், `உங்கள் இதயத்தை எப்போதும் மகிழ்ச்சியுடனும் தைரியத்துடனும் வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு நலமாக உள்ளேன். முக்கியமாக எனக்கு சிகிச்சை செய்த இதயநல மருத்துவரும், எனக்கு பெரிய இதயம் இருப்பதாகக் கூறினார்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதனிடையே, சுஷ்மிதா சென்னுக்கு எப்போது மாரடைப்பு ஏற்பட்டது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, சுஷ்மிதா நடித்துக் கொண்டிருந்த ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு நெஞ்சில் லேசான வலி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த மருத்துவர் அவரை பரிசோதனை செய்து, உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர்.
மருத்துவமனையில் இதயநல மருத்துவரின் பரிசோதனையில் சுஷ்மிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டு, `ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது. சுஷ்மிதா சென் பிப்ரவரி 27-ம் தேதி மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு மார்ச் 1-ம் தேதி வீடு திரும்பியுள்ளார்.
+ There are no comments
Add yours