விஜய்யுடன் மோதிய அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட மிஷ்கின்
04 மார், 2023 – 10:27 IST
விஜய் நடிக்கும் படங்கள் ரிலீஸாகும் வரை அந்த படம் குறித்த தகவல்களை படத்தில் நடிக்கும் சக கலைஞர்கள் யாரும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இயக்குனர் மிஷ்கின் அந்த படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து பொதுமேடை ஒன்றிலேயே சிலாகித்துக் கூறியுள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு பல்கலைக்கழகம் ஒன்றின் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த மிஷ்கின் அந்த நிகழ்வில் பேசும்போது சமீபத்தில் காஷ்மீரில் படமாக்கப்பட்ட லியோ படத்தின் படப்பிடிப்பில் விஜய்யும் தானும் இணைந்து சண்டை காட்சிகளில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.
“சண்டைக்காட்சிகளை படமாக்குவதற்கு முன்பு விஜய் என்னிடம் வந்து சண்டைக்காட்சிகளில் நான் உங்களை அடிக்கும்போது தவறுதலாக அடிபட்டு விட்டால் தயவு செய்து பொறுத்துக் கொள்ளுங்கள் என்று முன்கூட்டியே கேட்டுக் கொண்டார். அதேபோல அவர் என்னை தாக்கும் காட்சி படமாக்கப்பட்டு முடிந்த அடுத்த வினாடியே என்னை கட்டிப்பிடித்து எனக்கு எதுவும் அடிபட்டு விட்டதா என்று அக்கறையுடன் விசாரித்தார்” என்று விஜய் குறித்து புகழ்ந்து கூறியுள்ளார் மிஷ்கின்.
மேலும் இந்தப்படத்தில் தன்னுடைய காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்து விட்டன என்றும் கூறியுள்ளார் இயக்குனர் மிஷ்கின்.
+ There are no comments
Add yours