முதல் காட்சி தொடங்கி கடைசி காட்சி வரை சிரிப்பலைகளை உண்டாக்கி, 2K கிட்ஸ் மத்தியில் “மஜா படம் ப்ரோ” என்கிற பெயரை வாங்கியிருக்கிறது `ரொமன்ஜம் (Romancham)’ என்கிற மலையாளத் திரைப்படம். வெளியாகி 3 வாரங்கள் கடந்த நிலையில் 50 கோடி வசூலித்து, இந்த வருடத்தின் முதல் ப்ளாக்பஸ்டரை கேரள சினிமாவில் பதிவு செய்து இருக்கிறது.
கதையைப் பொறுத்தவரை வெகுநாள்களாக மருத்துவமனையில் சுயநினைவில்லாமல் இருந்த ஜிபி என்ற வாலிபன் இயல்பு நிலைக்குத் திரும்புகிறான். அவன் தன் பேச்சுலர் வாழ்க்கையில் நண்பர்களோடு விளையாட்டாக எடுக்கும் ஒரு முடிவு எப்படி அவர்கள் வாழ்க்கையையே திருப்பிப் போட்டது என்பதே இந்த ‘Romancham’.
பெங்களூரில் ஏழு இளைஞர்கள் சேர்ந்து ஒரு வீட்டில் குடியிருக்கிறார்கள். அவர்கள் வாழ்வில் இறந்தவர்களிடம் பேசக்கூடியது என்று சொல்லப்படுகிற ‘Ouija Board’ நுழைகிறது. ஆரம்பத்தில் விளையாட்டாக அதைக் கையாண்டாலும் போகப் போக அது நடத்தும் விபரீதங்களால் நடக்கும் சம்பவங்களைத் திகிலும் நகைச்சுவையும் கலந்து அளித்திருக்கிறார் இயக்குநர் ஜித்து மாதவன்.
குப்பைக்குள் வீடா, வீட்டிற்குள் குப்பையா என்னும் நிலையில் இருக்கும் வீட்டிற்குள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சிகரெட் பாக்கெட்கள், மதுபான பாட்டில்கள், சுவரெங்கும் கிறுக்கல்கள், போஸ்டர்கள், பொறுப்பற்ற பலரில் பொறுப்பான ஒரு ரூம் மெட், வீட்டிற்குள்ளேயே விளையாட்டு, ஒரே வண்டியில் நால்வர் பயணம், கலாய், ரகளை, சேட்டைகள் எனக் கலகலப்பான பேச்சுலர் வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்கின்றன முதல் 30 நிமிடங்கள்.
இப்படிச் சென்று கொண்டிருக்கும் கதையில் திருப்பமாக ‘Ouija Board’ உள்ளே நுழைகிறது. ஆரம்பத்தில் ஷோபின்னும் அவனது நண்பனும் விளையாட்டாகத் தானே கையை அசைத்து ‘அனாமிகா’ என்னும் பெயரை போர்ட்டில் வரவைக்கிறார்கள். அப்படி உருவாகிற அனாமிகா உண்மையில் நிஜமானால் என்ன நடக்கும் என்பதே படத்தின் மீதிக்கதை.
வருகின்ற 7 கதாபாத்திரங்களில் தெரிந்த முகமென்றால் ‘கும்பலங்கி நைட்ஸ்’ புகழ் ஷோபின் ஷாஹிர் மட்டுமே என்றாலும், தங்கள் இயல்பான குறும்புத்தனமான நடிப்பின் மூலமாக மற்றவர்களும் ஏதோ ஒரு பேச்சுலர் ரூமில் கேமராவை வைத்து நிஜமாக ஷூட் செய்தது போன்ற யதார்த்த உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
‘ரொமன்ஜம்’ எனும் மலையாள வார்த்தையின் அர்த்தம் ‘புல்லரிப்பு’ (Goosebumps). தலைப்பைப் போலவே காட்சிக்குக் காட்சி தனது பின்னணி இசையின் மூலமாகப் புல்லரிக்கச் செய்து இருக்கிறார் இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம். குறிப்பாக போர்ட்டில் 4+3 எவ்வளவு என்று அசால்ட்டாக விளையாடிக் கொண்டிருந்த பேய் விளையாட்டில், இறந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வைக் கேட்க, அதைச் சரியாகச் சொல்லி, விளையாட்டு தீவிரமாக உருமாற்றம் அடையும் காட்சியில் பின்னணி இசையில் அடித்து நொறுக்கி இருக்கிறார். சிரித்துச் சிரித்து அதிர்ந்த அரங்கம் அந்த மிரட்சியில் நிசப்தம் ஆகிறது. பாடல்கள், மொழி தெரியாதவர்களைக் கூட படம் முடிந்த பின்னர் “ஆத்மாவே போ… போ” என்று முணுமுணுக்க வைக்கிறது.
பேய் படத்திற்கே உண்டான ஒலிப்பதிவு, பயத்தை ஏற்படுத்தினாலும் மறுபுறம் கூட்டமாக அனைவரும் சாப்பிடும் காட்சியில் ‘ரசித்து ரசித்துச் சாப்பிடும்’ சப்தங்களைக் கூட மிக நுணுக்கமாகச் செய்திருப்பது அட்டகாசம். இயக்குநர்கள் பலர், பிரமாண்ட பட்ஜெட், பெரிய நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு VFX-ல் நல்ல தரத்தைக் கொடுக்கத் தவறிவிடும் போது, வெறும் ரூ.2 கோடிக்கும் கீழான பட்ஜெட்டில் VFX-ஐ மிக நேர்த்தியாகச் செய்திருக்கிறார்கள். ஆங்காங்கே எலிகள் வருகின்ற காட்சிகள் மிகத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
முதல் பாதியிலே கதையின் அனைத்து சுவாரஸ்யங்களும் சொல்லப்பட்ட நிலையில் அடுத்து என்ன என்னும் கேள்வியில் நுழையும் இரண்டாம் பாதியில் சினு கதாபாத்திரம் அதகளம் செய்கிறது. அக்கதாபாத்திரத்தில் தோன்றும் அர்ஜுன் அசோகன் தலையை ஒருவாறு ஆட்டி ஆட்டி சிரிக்கும் மேனரிசத்தில் அப்லாஸ் அள்ளுகிறார்.
சிறிய வீடு, அதற்குள் நடக்கும் கதை என்று தனக்காகக் கொடுக்கப்பட்ட சிறிய இடத்தில் கச்சிதமான காட்சி கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஷனு தாஹீர். நகைச்சுவை பேய்ப்படம் என்றாலும் எவ்வித செயற்கைத்தனத்தையும் வலிந்து திணிக்காமல், லாஜிக்கோடு திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் ஜித்து.
இவ்வளவு நிறைகள் இருந்தாலும் படத்தின் க்ளைமாக்ஸ் பல கேள்விகளோடு முடியும் உணர்வையே தருகிறது. அடுத்த பாகத்துக்கான லீடு, வெறும் டிரெண்டு, சம்பிரதாயமாக இல்லாமல், கேள்விகளுக்கான விடைகளைச் சொல்லும் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல சுவாரஸ்யமாகவே இருந்தாலும் முதல் பாதி முழுக்கவே ஒரு வாழ்வியலைக் காட்டுகிறேன் என்று பிரதான கதைக்குள் வராமலே இழுத்தடிக்கிறார்கள். சமகால மலையாளப் படங்களின் இந்த வழக்கமான திரைக்கதை பார்மேட் இதிலுமே விடாமல் தொடர்கிறது.
ஆனாலும், படம் முடிந்து வெளியேறிய பின்னரும், படத்தின் காட்சிகளை நினைத்துப் புன்னகைக்கும் விதத்தில், சேட்டன்களின் மற்றுமொரு அடிப்பொலி படைப்புதான் இது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
+ There are no comments
Add yours