“மயில்சாமி வெள்ளந்தியான மனம் படைத்த சிறந்த மனிதர்” என நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நடிகர் மயில்சாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள நடிகர் மயில்சாமி உடலுக்கு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
எம்.எஸ்.பாஸ்கர்: அஞ்சலி செலுத்தியதை அடுத்து பேசிய எம்.எஸ்.பாஸ்கர், ‘‘நானும் மயில்சாமியும் சினிமாவின் அடிமட்டத்திலிருந்து வந்தவர்கள். 10, 15 நாட்களுக்கு முன்பு வரை சந்தித்து உடல்நிலை சரியில்லையா என கேட்டேன். ஆமாம் என்றார். 3 நாட்களுக்கு முன்பு வரை கூட பேசினேன். சிவராத்திரிக்கு கோயிலுக்கு வர சொன்னேன். அவர் ஷூட்டிங்கில் இருப்பதாக சொன்னார். தீராத சிவ பக்தர் அவர். மழை, பேரிடர் காலங்களில் எல்லாருக்கும் உணவு வழங்கியவர். ஒருமுறை ஷூட்டிங்கின்போது, வெள்ளரிக்காய் விற்கும் அம்மாவிடம் கூடையுடன் அதனை வாங்கி அவருக்கு உதவினார். பின்பு, அதனை எங்கள் எல்லோருக்கும் கொடுத்தார். மிகவும் வெள்ளந்தியான மனசு அவருக்கு. இந்த பிறவியில் விலை மதிப்பில்லாத நட்பை கொடுத்தற்கு நன்றி நண்பா. போய் வா.. என்னால் ஜீரணிக்க முடியவில்லை. என்னை ஆறுதல் படுத்தகூட என்னால் முடியவில்லை. ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.
மனோபாலா: “மழை, வெள்ளத்தின்போது படகு எடுத்துச்சென்று ஏராளமானோருக்கு சாப்பாடு கொடுத்தவர் அவர். ஷூட்டிங்கிலும் அப்படித்தான் எல்லோருக்கும் சாப்பாடு வாங்கி கொடுப்பார். ‘ஏன்டா இப்படி காசை செலவு பன்றே?’ என கேட்டால், ‘என்ன கொண்டு வந்தோம் என்ன கொண்டு போகப் போறோம்’ என கேள்வி கேப்பார். மயில்சாமியின் மறைவு மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. திரைத்துறையில் பலரும் இறந்துவருகிறார்கள். மயில்சாமி மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கு இரங்கல்கள்” என தெரிவித்துள்ளார்.
யோகிபாபு: “எனக்கு வார்த்தைகளே வரவில்லை. ஆரம்பத்திலிருந்தே மயில்சாமி அண்ணனை பார்த்து வருகிறேன். நல்ல மனிதர். மிகவும் கஷ்டமாக உள்ளது. பேசமுடியவில்லை. அதிர்ச்சியாக உள்ளது. அண்ணன் நிறைய பேருக்கு உதவியாக இருந்தார். வாய்ப்பு தேடும் போது எனக்கு உதவியவர். மிகப்பெரிய இழப்பு. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்: “அண்ணன் மயில்சாமியின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. சிறந்த குணச்சித்திர நடிகர், எளிய மனிதர்கள் மீது பேரன்பு கொண்டவர். ரசிகர்களின் அன்பைப்பெற்றவர். என்றென்றும் அவர் நினைவுகூறப்படுவார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
ராதாரவி: “இந்த செய்தி மிகவும் கவலையளிக்கிறது. நல்ல மனிதர். நியாயத்திற்காக குரல் கொடுப்பவர். அவரின் மறைவு கலைத்துறைக்கு பெரும் இழப்பு” என தெரிவித்துள்ளார்.
போண்டாமணி: ”நான் மருத்துவமனையில் இருக்கும்போது ரூ.1லட்சம் கொடுத்து உன் அறுவை சிகிச்சைக்கு நான் தான் பொறுப்பு என கூறி உதவியவர். அவரைப்போன்ற ஒருவரை பார்ப்பது கடினம்” என தெரிவித்தார்.
மயில்சாமி கடந்து வந்த பாதை: தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த இவர், முதன் முதலில் மிமிக்கிரி கலையால் பொதுவெளியில் அறியப்பட்டார். 1984ல் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். அதுமுதல் சிறிய பெரிய வேடங்களில் நடித்து வந்தார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். 2000ம் ஆண்டுக்கு பிறகு பலரும் அறியப்படும் நடிகராக பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தார். நடிகர் விவேக் உடன் இணைந்து நடித்த பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். சினிமாவை தாண்டி பொதுநலம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இன்று அதிகாலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட, குடும்பத்தினர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் முன்பே அவரின் உயிர் பிரிந்துவிட்டது. அவரின் இறப்பை மருத்துவர்கள் உறுதிசெய்தனர். மயில்சாமியின் இறப்பு தமிழ் சினிமாதுறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
+ There are no comments
Add yours